விண்வெளி ஆய்வில் உச்சம் தொட்ட விவசாயி மகன் : இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் டாக்டர் கே.சிவன்!

By Abu Bakker Fakkirmohamed
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவராக (ISRO) இருப்பவர், டாக்டர் கைலாசவடிவு சிவன் என்னும் பெயர் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த புகழ்ப் பெற்ற விண்வெளி அறிவியல் அறிஞர் ஆவார். இவரைச் சுருக்கமாக டாக்டர் கே. சிவன் என அழைக்கிறோம். 50 ஆண்டுகள் பழமையான பெருமை மிகு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் ஒன்பதாவது தலைவராக இருக்கும் டாக்டர் கே.சிவன் இந்தப் பொறுப்பை கிரன் குமார் என்பவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

  இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவராக பொறுப்பு வகிப்பதற்கு முன்னால், டாக்டர் கே.சிவன், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மற்றும் திரவ உந்துவிசை மையத்தில் (Vikram Sarabhai Space Center and Liquid Propulsion centre) இயக்குநராகப் பணியாற்றினார். டாக்டர் கே. சிவனின் வெற்றிப் பயணம் அவ்வளவு எளிமையானதாக அமைந்திருக்கவில்லை. பல்வேறு வகையான தடைகளையும், சோதனைகளையும் கடந்த பிறகுதான் சாதனைகளின் சிகரங்களை இவரால் அடைய முடிந்திருக்கிறது.

   

  இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிற வானியல் விஞ்ஞானிகளுக்கு டாக்டர் கே.சிவனுடைய சாதனைகள் உந்துதலைத் தரக் கூடியதாக உள்ளன. டாக்டர் கே.சிவன் தடைக்கற்களைப் எப்படிப் படிக்கற்களாக மாற்றி இச் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தார் என்பதை இங்கு பார்ப்போம்.

  விவசாயக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்தவர்

  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தரக்கான்விளை என்னும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் சிவன். இங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ் வழியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். கடின உழைப்பில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இவர் தன்னுடைய சொந்த முயற்சியால் எதனையும் சாதிக்க விருப்பினார். தன்னுயை குடும்பம் மற்றும் சமூகக் காரணிகளை நன்கு புரிந்து கொண்ட சிவன் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், எத்தகைய பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார். இவருடைய குடும்பத்தில் இவர்தான் முதல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

  வானியல் தொழில் நுட்பத்தில் பட்டம்

  1980 ஆம் ஆண்டு, மெட்ராஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் (MIT) ஏரோநாடிகல் பிரிவில் இள நிலை இஞ்சினியர் பட்டம் பெற்றார் சிவன். பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தில் ( IISC Bengaluru) விண்வெளித் துறையில் முது நிலைப் பொறியியல் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் (ISRO) பணியில் சேர்ந்தார். துருவ செயற்கைக் கோள் ஏவு வாகனத் திட்டத்தில் (PSLV) ஒன்றிணைந்து செயல்பட்டார். இந்தத் திட்டச் செயல்பாட்டின் போது, திட்டமிடுதல், வடிவமைப்பு, ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு என அனைத்திலும் டாக்டர் சிவன் அவர்களுடைய பங்களிப்பு பெருமளவில் இருந்தது.

  விருதுகள்

  இந்திய விண்வெளித் துறையில் டாக்டர் சிவன் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்குப் பல விருதுகளும் பெருமைகளும் கிடைத்தன. 1999 ஆம் ஆண்டு, ஸ்ரீ ஹரி ஓம் ஆஸ்ரம் பிரிரிட் டாக்டர் விக்ரம் சாராபாய் விருது, 2007ஆம் ஆண்டு, ISRO மெரிட் விருது, 2011 ஆம் அண்டு, பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது ஆகிய பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

  அனைத்துத் திட்டங்களிலும் பங்களிப்பு

  இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் டாக்டர் சிவன், இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய விண்வெளி ஆய்வுத் திட்டங்களான, GSLV, PSLV, மற்றும் GSLV MkII ஆகிய அனைத்திலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றி வருகிறார். GSLV ராக்கெட் திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் இருந்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் (IIT Bombay) டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். 2014 ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக் கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

  விண்வெளிப் போக்குவரத்து குறித்த புத்தகம்

  இந்திய தேசியப் பொறியியல் கழகம், அறிவியல் மற்றும் பொறியியலுக்கான இந்திய முறைச் சங்கம்( Indian Systems Society for Science and Engineering), இந்திய ஏரோநாடிகல் சங்கம், சிஸ்டம் சொசைடி ஆப் இந்தியா ஆகியவற்றில் டாக்டர் சிவன் அவர்கள் உறுப்பினராக இருக்கிறார். ராக்கெட் ஏவும் தொழில் நுட்பத்தில் மிகப் பரந்துபட்ட அறிவு கொண்ட இவர், "விண்வெளிப் போக்குவரத்து முறைக்கான ஒருங்கினைந்த வடிவமைப்பு (Integrated Design' for Space Transportation System)" என்னும் புத்தகத்தை எழுதி 2015 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

  உயர் பதவியில் உன்னதப் பணிவு

  ISRO தலைவராகப் பொறுப்பு வகிப்பதற்கு முன்னால், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார். விண்வெளித் துறையின் செயலாளராகவும், விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். " இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவர் பொறுப்பை மிகவும் பொறுப்புணர்வோடும் பணிவோடும் ஏற்றுப் பணியாற்றுகிறேன்" என்று அடக்கத்துடன் கூறுகிறார் டாக்டர் சிவன். " கடந்த காலங்களில் மிகவும் திறமை வாய்ந்த பெருமகன்கள் ஏற்றிருந்த இந்தப் பொறுப்பை நானும் ஏற்றுக் கொண்டிருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். விண்வெளித் துறை ஆய்வுகள் மூலம் ISRO அமைப்புக்கும், இந்தியாவுக்கும் பணியாற்றக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்சியடைகிறேன்." என டாக்டர் சிவன் கூறுகிறார்.

  விண்வெளித் துறையில் உலக சாதனை

  துருவ செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் (PSLV) மூலம் ஒரே சமயத்தில் 104 செயற்கைக் கோள்களை ஏவி, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலக சாதனை நிகழ்த்தியது இந்தியா. இந்தச் செயற்கைக் கோள்களை அதன் சுற்றுவட்டப் பாதையில் சரியாக இணைப்பதற்கு டாக்டர் சிவன் அவர்களின் தொழில்நுட்ப அறிவு மிகவும் உறுதுணையாக இருந்தது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புவி ஒருங்கிணைவு செய்கைக்கோள் ஏவு வாகனத் திட்டத்திலும் டாக்டர் சிவன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத் தக்க வகையில் அமைந்திருந்தது.

  முதல் ஆண்டில் இரண்டு திட்டங்கள்

  தலைமைப் பொறுப்புக்கு வந்த முதல் ஆண்டிலேயே இரண்டு முக்கியத் திட்டங்களை இவர் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். சந்திராயன் II மற்றும் புவி ஒருங்கிணைவு செய்கைக்கோள் ஏவு வாகனத் திட்டம் (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV-MK3)) ஆகியவை அவை. பெரிய அளவிலான விண்வெளி ஏவு வாகனங்களைக் குறைந்த செலவில் தயாரிக்கவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

  சந்திராயன் -2

  திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சந்திராயன் திட்டத்தை அறிவிக்கப்பட்ட தேதியில் அதாவது ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் செயல்படுத்துவதற்கான அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அறிவிக்கப்பட்ட தேதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என டாக்டர் சிவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

  புதிய வரலாறு

  சந்திரனின் தெற்கு முனைக்கு அருகே செல்வதன் மூலம் சந்திராயன் - 2 திட்டம் புதிய உலக வரலாற்றை மிக விரைவில் படைக்க இருக்கிறது என டாக்டர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன் -2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் (orbiter, lander , rover) ஆகிய மூன்றையும் சுமந்து செல்கிறது. ரோவரை மிக மெதுவாகச் சந்திரனின் தெற்கு முனையில் தறையிறக்க லேண்டர் உதவும். சந்திரனில் ரோவர் ஒரு முழுச் சந்திர நாள் வரை (அதாவது புவியின் கணக்குப்படி 14 நாட்கள்) இருந்து ஆய்வு செய்யும். அங்குள்ள பகல் பொழுதை தன்னுடைய ஆய்வுக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

  சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும் ரோவர்

  இந்த விண்கலத்தின் இயக்கத்திற்குத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளும் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. விண்கலத்தோடு இணைக்கப்பட்டுள்ள ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் 100 மீட்டர் தூரம் வரை நகர்ந்து சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பொருட்களை ஆராயும். மேற்பரப்பில் உள்ள பொருட்களை ஆராய்ந்து அதனுடைய முடிவுகளை அடுத்த 15 நிமிடங்களில் படங்களாக பூமிக்கு அனுப்பும்.

  GSLV-MK-III – ஏவு வாகனம்

  சந்திராயன்-2 வின் எடை 3.8 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்த GSLV Mk II வாகனத்திற்குப் பதிலாக GSLV-MK-III என்னும் ஏவு வாகனத்தின் மூலம் இது சந்திரனுக்கு அனுப்பப்படும்.

  சந்திராயன் – 1

  சந்திராயன் - 1 திட்டம் மிகப் பெரிய வெற்றியடைந்தது என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. இது 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏவப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இயக்கத்தில் இருந்தது. இதற்கு முன்னர், சந்திராயன் -2 விண்கலத்தை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு இரண்டு முறை அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

  இந்தியாவின் மிகச் சிறிய ராக்கெட்

  இந்திய விண்வெளி ஆய்வு மையம் இதுவரை விண்ணில் செலத்திய ராக்கெட்டுகளிலேயே மிகச் சிறிய ராக்கெட் ஒன்றை அடுத்த ஆண்டு ஏவுவதற்குத் திட்டமிட்டுள்ளது. "500 கிலோ வரை எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு ஏற்றச் சிறிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவு பெற்று இந்தியாவின் மிகச் சிறிய ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் பாயும்" என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறார் டாக்டர் சிவன் அவர்கள்.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  Read more about: isro
  English summary

  The Farmer’s son who reached the sky with glory, ISRO Chief Dr K. Sivan

  The Farmer’s son who reached the sky with glory, ISRO Chief Dr K. Sivan
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more