RBI-ல் விரல் ஆச்சார்யாவும், உர்ஜித் படேலும் சேர்ந்த போர் கொடி தூக்கிய 7 விஷயங்கள்! கொதித்த பாஜக..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறிப்பு: மோடியும் அவர் சகாக்களும் ஒரு அரசு அதிகாரி, தன் வேலையை செய்யவிடாமல் தடுத்த நிஜக் கதை. தனக்கு சொம்படிக்கும் நபர்களை, ஒரு அமைப்பில் புகுத்தி, அதை செல்லறிக்கச் செய்யும் நிஜக் கதை. கொஞ்சம் பெரிய கட்டுரை தான். மோடி - ஜெட்லியை நேசிப்பவர்கள், உர்ஜித்தை வெறுப்பவர்கள் மட்டும் படிக்கவும்.

Urjit patel, ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து டிசம்பர் 10, 2018-ல் ராஜினாமா செய்தார். இந்தியாவில் ஆர்பிஐ கவர்னர் ராஜினாமா செய்வது இதோடு நான்காவது முறை. உர்ஜித் படேல் நமக்கு எல்லாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்கிற அளவில் தான் தெரியும். ஆனால் ரகுராம் ராஜன் விட்டுச் சென்ற பல முக்கியப் பணிகளை நேர்மையாகவும், ஒவ்வொரு திட்ட நடவடிக்கையையும் அரசை எதிர்த்துச் செயல்படுத்திய உறுதியான உர்ஜித்தைத் தெரியுமா..? 1,50,000 கோடி ரூபாய்க்காக மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போராடி வென்றது தெரியுமா..? வாருங்கள், இதுவரை இந்திய ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்தவர்ளில் இருந்து... உர்ஜித் படேலின் நேர்மையான வலி நிறைந்த பயணத்தின் ராஜினாமா வரை ஒரு பெரும் பயணம் போவோம்.

முதல் பதவி விலகல்
 

முதல் பதவி விலகல்

1935 - 1937 வரை பதவியில் ஆர்பிஐ கவர்னராக இருந்து வெள்ளைக்கார துரை சர் ஆஸ்பார்ன் ஸ்மித் (Sir Osborne Smith) தான் இந்தியாவின் முதல் ஆர்பிஐ கவர்னர். 1935-ல் தான் ஆர்பிஐ ஆரம்பிக்கப்பட்டது. வட்டி விகித சாமாச்சாரங்கள் (Interest Rate) மற்றும் அந்நிய செலாவணி மாற்ற விலை நிர்ணயங்களில் (Exchange Rate) பிரிட்டிஷ் காலனி அரசுடன் ஏற்பட்ட முரண்பாடால் பதவி விலகினார். இவர் ஆர்பிஐ கவர்னராவதற்கு முன் இன்றைய இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.

பனகல் ராமா ராவ்

இந்திய வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஆர்பிஐ கவர்னராக பணியாற்றிய பெருமைக்குரியவர். 1949 - 1957 வரை 7 ஆண்டு 6 மாதம் 14 நாட்கள் இந்தப் பதவியில் இருந்தார். இவர் பதவி காலத்தில் தான் திட்டக் குழு அமைத்தல், இந்தியா முழுமைக்கும் கூட்டுறவு கடன் திட்டங்களைக் கொண்டு வருவது, தொழில் கடன்களை விரிவாக்கம் செய்வது என பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். இவர் ஒரு முன்னால் ஐஏஎஸ் (அன்றைய ஐசிஎஸ்) அதிகாரி. சுதந்திர இந்தியாவின் முதல் ஆர்பிஐ கவர்னர் ராஜினாமா இவருடையது தான்.

ஆர்பிஐக்கு முன்

அமெரிக்க நாட்டுக்கான இந்திய தூதர், ஜப்பான் நாட்டுக்கான இந்திய தூதர், Port Trust of India-வின் தலைவர் பதவிகளில் பணியாற்றியவர். இவர் அன்றைய நிதி அமைச்சர் டி டி கிருஷ்ணமாச்சாரியை எதிர்த்துப் பேசிய பேச்சில் நேருவே தலையிட்டு நிதி அமைச்சகத்துக்கும் ஆர்பிஐக்கும் பஞ்சாயத்து பேசினார். "ஆர்பிஐ நிதி அமைச்சகத்துக்கு கீழ் இருக்கும் ஒரு துறை தான்" என நேருவே கடுமையாக பேசி பனகல் ராமா ராவை அமைதியாக்கினாராம். அந்த அளவுக்கு அரசுக்கும் ஆர்பிஐக்கும் அன்றே புகைச்சல் இருந்தது. அதனால் தான் பதவி விலகினார்.

எஸ் ஜகன்நாதன்
 

எஸ் ஜகன்நாதன்

இந்திய வரலாற்றில் மத்திய அரசுடன் பிரச்னை இல்லாமல் ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்தவர். 1970 - 1975 ஆர்பிஐ கவர்னராக இருந்தவர். பன்னாட்டு நிதியத்தில் (IMF) இவருக்கு இந்திய செயல் இயக்குநர் பதவி கிடைத்ததால், ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். 1969-ல் தான் இந்தியாவின் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்பிஐ-ன் பொறுப்பும், கடமைகளும் பன் மடங்கு கூடின. அதை சரிவர புரிந்து கொண்டு செயல்பட்டவர் ஜகன்நாதன்.

நல்ல காரியங்கள்

இவர் காலத்தில் தான் Credit Guarantee Corporation of India என்றழைக்கப்படும் வங்கிகளில் போடும் பணத்துக்கான உத்தரவாத அமைப்பை நிறுவி, இந்திய வங்கிகள் மீது மக்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் நம்பிக்கை கொண்டு வந்தவர். இவர் பதவிக் காலத்தில் தான் இந்தியா முதல் தலை முறையாகச் சிறந்த பணக் கொள்கைகளை (Monetary Policy) கொண்டு வந்தார்களாம். விலை வாசியையும் சர்வதேச எண்ணெய் விலைத் தடுமாற்றத்துக்கு மத்தியில் கட்டுக்குள் வைத்திருந்தவர். இவரும் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தான். ஆர்பிஐக்கு வருவதற்கு முன் உலக வங்கியின் செயல் இயக்குநர் பதவியில் இருந்தவர்.

உர்ஜித் படேல்

கென்யா வாழ் NRI. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் இளநிலைப் பட்டம், ஆக்ஸ்ஃபோர்டில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். 1990-ல் ‘யேல்' பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் சர்வதேச நிதி ஆணையத்தில் பணிபுரிந்தார். 1995-க்குப் பின் இந்தியாவின் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். அதில் இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரெட்டான ரிலையன்ஸ் குழுமம் ஒன்று. 2013-ல் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.

ஆர்பிஐ கவர்னர்

மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்த ரகுராம் ராஜனின் பதவிக் காலத்தை நீட்டிக்க பாஜக அரசு விரும்பவில்லை. ஆக ராஜனின் பதவிக் காலம் முடிந்த உடன் 2016-ல் உர்ஜித் படேல் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டார். பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி - ஜிஎஸ்டி, பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடி, ஐ.எல்.எஃப்.எஸ் மோசடி, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பண நெருக்கடி போன்ற உள்நாட்டு பிரச்னைகள் ஒரு பக்கம் அழுத்த... ப்ரெக்சிட் (Brexit), கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க-சீன வர்த்தகப் போர் போன்ற சர்வதேச சிக்கல்களுக்கு இடையிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது உர்ஜித்தின் நுணுக்கமான பொருளாதார அறிவின் சாதனை தான்.

ராஜினாமா ஏன்

“தனிப்பட்ட காரணங்களுக்காக என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என முடித்துவிட்டார் உர்ஜித். ஆனால் உண்மைகளை உலகம் அறியத் தானே செய்யும். சற்று பின்னோக்கி போனால் உண்மைகள் புரிய வருகிறது. வாருங்கள் உர்ஜித்தின் வரலாற்றைப் பின் நோக்குவோம்.

மோதல் 1 - பணமதிப்பிழப்பு

"ஆப் கீ பார் மோடி சர்கார்" 2016 நவம்பர் 08-ம் தேதி, பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மோடி. பதவி ஏற்ற உடனேயே பணமதிப்பிழப்பு குறித்து தன் கருத்தை தெளிவாக முன் வைத்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்கு உதவாது. நெகட்டிவ்வாக மருத்துவம், சுற்றுலா போன்ற சேவைத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றாராம். ஆனால், மோடியோ ஜெட்லியோ ரிசர்வ் வங்கி சொல்வதை, அதாவது உர்ஜித் சொன்னதை காது கொடுத்துக் கேட்க வில்லையாம்.

முட்டு கொடுக்கவில்லை

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பல பொருளாதார நிபுணர்கள் ஆதரித்த போதும், ஆர்பிஐ கவர்னராக இருக்கும் உர்ஜித் படேல் மட்டும் அத்தனை அழுத்தமாக முட்டு கொடுக்கவில்லை என்பதை ஆளும் பாஜக ஒரு குறையாகவே கண்டது. கடைசியில் ஆர்பிஐயின் அறிக்கை மோடியின் பணமதிப்பிழப்பு பயன் இல்லாதது என சொல்லாமல் சொன்னது. அந்த உரசல் தான் அடுத்தடுத்த விரிசல்களுக்கு விதை போட்டது.

ஆர்பிஐ அறிக்கை

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏறத்தாழ அனைத்து (99.3%) கரன்சி நோட்டுகளும் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பி வந்துவிட்டதாகவும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பண நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் ரிசர்வ் வங்கி (2017-18) ஆண்டறிக்கை வழியாகச் சொன்னார் உர்ஜித்.

மோதல் 2 - வட்டி விகிதம்

பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகத்திற்குப் பின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு கண்டது இந்தியா. இதற்குச் சரியான தீர்வு வட்டி விகித குறைப்பு என மத்திய அரசு மீசையை முறுக்கியது. நான்கு வரிகளில் விளக்க முடியாத சிக்கலான பல பொருளாதார காரணிகளால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது என நெஞ்சை நிமிர்த்தினார் உர்ஜித். ஜூன் 2017 பணக் கொள்கை (Monetary Policy) முடிவுக்கான கூட்டத்தை சிறப்பாக நடத்தினார். இதில் விஷயம் என்னவென்றால், கூட்டத்துக்கு முன் நிதியமைச்சக பிரதிநிதிகளைச் சந்திக்க கேட்டிருக்கிறார்கள். "நிதி அமைச்சக கூட்டமா, சரி பணக் கொள்கை கூட்டத்தை முடிச்சுட்டு பேசலாம்" என தில்லாக கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என அறிவித்துவிட்டு நிதி அமைச்சகம் வந்து நின்றார்.

மோதல் 3 - காசு கொடு

ஒவ்வொரு வருடமும் ஆர்பிஐ-ன் மொத்த லாபத்தில் ஒரு பங்கை ஈவுத் தொகையாக (Dividend) மத்திய அரசுக்கு தருவது வழக்கம். அதே போல் 2016 - 17 நிதி ஆண்டில் வழக்கம் போல ஒரு 60,000 கோடி ரூபாயை எதிர்பார்த்தது மத்திய அரசு. காரணம் ரகுராம் ராஜன் 2015 - 16 நிதி ஆண்டில் கொடுத்த ஈவுத் தொகையான 65,876 கோடி ரூபாய்.

குறைந்த தொகை

மத்திய அரசின் ஈவுத் தொகைக்காக, உர்ஜித் கையெழுத்து போட்ட காசோலையைப் பார்த்த நிதி அமைச்சகம் அரண்டு விட்டது. வெறும் 30,659 கோடி ரூபாய். மீண்டும் பஞ்சாயத்து பேச ஆர்பிஐ கவர்னரை அழைத்தது நிதி அமைச்சகம். "சார் உங்க அரசோட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு புதிய கரன்சி அச்சிட்டதனால், ஆர்பிஐக்கு லாபம் குறைந்துவிட்டது, அதனால் தான் இந்த முறை அதிகம் டிவிடெண்ட் தர முடியவில்லை" என பதில் கொடுத்தார்.

உனக்கு எதுக்கு காசு

"படேல், ஆர்பிஐக்கு எதுக்கு காசு. நீங்க எதுக்கு 2016 - 17-லயும், ரிசர்வ் வெச்சிருக்கீங்க" என காட்டு கத்து கத்தினார்கள் நிதி அமைச்சக அதிகாரிகள். 2016 - 17 நிதி ஆண்டில் ஆர்பிஐ வங்கியின் நிதி நிலை அறிக்கைகள் படி ஆர்பிஐ இடம் 8,94,684 கோடி ரூபாய் இருந்தது. இதைப் பார்த்த உடன் ஜெட்லிக்கே அத்தனை கோபமாம். இதை எல்லாம் ஆர்பிஐ என்ன பண்ணப் போகுது என கடுப்பானார்கள். உர்ஜித்தோ "ஒரு நிறுவனத்துக்கு இந்த மாதிரியான ரிசர்வ்கள் எல்லாம் தேவை, அதனால் எடுத்துக் கொண்டோம். 2015 - 16-ல் சுமார் 10.2 லட்சம் கோடியாக இருந்த ரிசர்வ்கள் இப்போது ஆர்பிஐ லாப குறைவால் 8.94 லட்சம் ரூபாயாக குறைந்திருக்கிறது. உங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், இனி ஆர்பிஐ எந்த ஒரு ஈவுத் தொகையையும் தரும் நிலையில் இல்லை" என தன்மையாக பதில் கூறி, கொடுத்த டீயை குடித்துவிட்டு கிளம்பிவிட்டாராம். அட்ரா சக்கை, ஜெட்லிக்கே ஆப்பா மொமெண்ட் தான் அது.

ரிசர்வ் என்றால் என்ன

ஆர்பிஐ-க்கு ஒரு ஆண்டில் வரும் லாபத்தை, முதலில் அவசரத் தேவைக்கான ரிசர்வ்வாக ஒதுக்கி வைக்கும். அந்த தொகையை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆர்பிஐ சட்ட திட்டங்களில் இருக்கும் அவசரத் தேவைகளுக்கு மட்டுமே அந்த ரிசர்வ் நிதியில் இருந்து பயன்படுத்தலாம். அந்த ஆர்பிஐ ரிசர்வ் தொகையைத் தான் மத்திய அரசு தானமாக கேட்கிறது.

கடுப்பு

நமக்கு கீழ இருக்குற அமைப்புக்கு 8.9 லட்சம் கோடி ரிசர்வ்வா...? என வாயைப் பிளந்தார் அருண் ஜெட்லி. அந்த தருணத்தில் இருந்து தான் இந்த ரிசர்வ்களில் ஒரு கண் வைத்து வளைக்க திட்டமிட்டார்கள். இப்போது அந்த ரிசர்வ் தொகைகளில் இருந்து ஒரு 3.06 லட்சம் கோடியை அரசுக்கு தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மோதல் - 4 வாராக்கடன்

"ரூ.2,000 கோடிக்கு மேல் வாராக் கடன் வைத்திருக்கும் நிறுவனங்களின் மீது, கடன் சீரமைப்பு (Loan Restructure) முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தும் 180 நாட்களுக்குள் கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் ஒத்து வராவிட்டால், அந்த நிறுவனத்தை நொடிந்த நிறுவனம் (Insolvent Company) என வங்கிகள் பட்டியல் இட வேண்டும். Insolvency & Bankruptcy Code-ன் கீழ் வாரக் கடன் உள்ள நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" நிறைந்த அன்பும் ப்ரியங்களுடன் உர்ஜித் படேல்... என 2018 பிப்ரவரி 12-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் பகீர் கிளப்பினார் உர்ஜித்.

சொன்ன படி நடந்தார்

KSK Energy, Avantha Group, GMR Energy and Jaiprakash Power Ventures போன்ற மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதே தில்லாக தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT -National Company Law Tribunal) - வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தும் படி வழக்கு தொடுத்தார் உர்ஜித். எவ்வளவு தொகையை மீட்கத் தெரியுமா...? 1.5 லட்சம் கோடி ரூபாய். இந்த NCLT தான் நிறுவன கடன் சார்ந்த பிரச்னைகளை கையாளும் அமைப்பு, இங்கு வரும் தீர்ப்பு சரிப்பட்டு வரவில்லை என்றால் தான் நீதி மன்றங்களுக்குப் போகலாம்.

கம்பெனிகள்

மேலே சொன்ன தனியார் கார்ப்பரேட்டுகள் Independent Power Producers Association of India என்கிற பெயரில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதில் வேடிக்கை என்ன தெரியுமா...? கார்ப்பரேட்டுகள் சார்பாக அரசு நிலைப்பாடு இருந்தது தான். அங்கும் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஆர்பிஐ தன் இஷ்டத்துக்கு விசாரிக்க உத்தரவிடுமாறு நீதி மன்றத்திடம் கேட்டார் உர்ஜித். அரசோ கம்பெனிகளுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றது.

நீதி மன்றத் தீர்ப்பு

ஆர்பிஐ நடவடிக்கைகளில் இருந்து கம்பெனிகளுக்கு தற்காலிக ஓய்வு அளிக்க முடியாது. இதை குறித்து ஒரு உயர் மட்டக் குழு அமைத்து 2 மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். மின் அமைச்சகம் ஆர்பிஐ கவர்னரோடு கலந்தாலோசித்து, ஆர்பிஐயில் இருந்து ஒரு உயர் அதிகாரியை அந்த உயர் மட்டக் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Insolvency & Bankruptcy Code-ன் கீழ் நிறுவனங்கள் மீது ஆர்பிஐ நடவடிக்கை எடுக்க எந்தத் தடையும் இல்லை என்றது நீதி மன்றம்.

பிரிவு விரிவு

ஆக ஆர்பிஐக்கு எதிராகவும், நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு வக்காளத்து வாங்கியது. உர்ஜித்தோ தனி ஒருவனாக நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளை கடுமை ஆக்கினார். கார்ப்பரேட் நிறுவனங்கள் விடாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வரும் ஜனவரி 2019-ல் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக தீர்ப்பு வர இருக்கிறது. அப்படி வந்தால் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் NCLT-ல் வழக்கு பதியப்பட்டு கடன் தொகைகள் மீட்கப்படும் அல்லது நிறுவனங்களின் சொத்துக்களை விற்று வங்கிக் கடன் தொகை எடுத்துக் கொள்ளப்படும். இத்தனை விடாப் பிடியாக விரட்டி கடனை வசூலிக்க வங்கிகளுக்கு வழி செய்து கொடுத்த உர்ஜித் சாருக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்.

மோதல் 5 - ஆர்பிஐ சட்டம் பிரிவு 7

மிக சுருக்கமாக "மத்திய அரசின் சொல் பேச்சைக் கேட்டு ஆர்பிஐ நடக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு மத்திய இயக்குநர்கள் குழு வைத்து, ஆர்பிஐ செய்ய வேண்டியவைகளை அரசு மேற்கொள்ளலாம்." என்பது தான் ஆர்பிஐ சட்டம் பிரிவு 7. இந்த சட்டப் பிரிவை இதுவரை இந்தியாவில் யாருமே பயன்படுத்தியதில்லை. இந்த சட்டப் பிரிவின் கீழ் சொல்லப்படும் அறிவுரைகள் ஆர்பிஐ கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். கிட்டதட்ட ஆர்பிஐ என்கிற தனி அமைப்பைப் கூட அரசுக்கு கூஜா தூக்கும் அமைப்பாக மாற்றிவிடும். ஆனால் பாஜக பயன்படுத்தியது என்பது தான் வேதனை.

காரணம்

பணம் தான். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக மத்திய அரசுக்கு ஒழுங்காக வருவாய் இல்லை. ஆக அந்த பட்ஜெட் துண்டை சரி செய்ய, ஆர்பிஐ-ன் 8.9 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் தொகையில் இருந்து 3.06 லட்சம் கோடியை கேட்டது இந்த சட்ட பிரிவைப் பயன்படுத்தி தான். அதோடு 1.5 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் தொகையை தராத கம்பெனிகள் மீது கருணை காட்டச் சொல்லி மத்திய அரசு ஆர்பிஐ-யை மிரட்டியதும் இந்த ஆர்பிஐ சட்டம் பிரிவு 7-ன் கீழ் தான். இதற்கு "போடா உன்னால் ஆனதைப் பாரு" என அசால்ட் செய்துவிட்டார் உர்ஜித். கடைசி வரை மத்திய அரசு சொன்ன மொக்கை ஐடியாக்களை கேட்கவே இல்லை.

மோதல் 6 - PCA

Prompt Corrective Action என்பது தான் PCA வின் விரிவாக்கம். வங்கிகளின் நிதி நிலையைப் பொறுத்து தான் ஆர்பிஐ-ன் PCA திட்டத்தில் வங்கிகள் பட்டியலிடப் படுவார்கள். PCA-வில் பட்டியலிடப்படும் வங்கிகள் பெரிய தொகை டெபாசிட்டுகளை வாங்கக் கூடாது. அதே போல் இருக்கும் டெபாசிட்டுகளைக் கூட மறு டெபாசிட்டுகளாக (Renew) செய்யக் கூடாது. ஆர்பிஐ அனுமதி இல்லாமல் புதிய சேவைகளை வழங்கவோ, கூடுதல் கட்டணங்களை வசூலிக்ககவோ, மற்ற வங்கிகளிடம் கடன் வாங்கவோ, புதிய கிளைகளை திறக்கவோ கூடாது.

நெத்தி அடி

மிக முக்கியமாக PCA திட்டத்தின் கீழ் இருக்கும் வங்கிகள் ஆர்பிஐ அனுமதி இல்லாமல் பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. குறிப்பாக கார்ப்பரேட்டுக்கு பெரிய கடன் தொகைகளை வழங்கவே கூடாது. இப்படி இந்தியாவின் 11 அரசு வங்கிகள் இந்த PCA திட்டத்தின் கீழ் பட்டியலிடப் பட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை பலவீனமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே விட்டால் இந்திய வங்கிகள் மொத்தமாக திவால் ஆகிவிடும் என தில்லாக சொல்லி PCA திட்டத்தை ஒழுங்காக பயன்படுத்தியவர் உர்ஜித் படேல்.

அரசு தரப்பு

"எப்பா உர்ஜித், நீங்க சொன்ன PCA திட்டத்தால மொத்த இந்தியாவும் ஸ்தம்பிச்சி இருக்கு. PCA திட்டத்த வாபஸ் வாங்குங்க" என வழக்கம் போல நிதி அமைச்சகம் அழுத்தம் கொடுத்தது. "என் காலத்தில் இந்திய வங்கிகள் திவால் ஆவதை நான் விரும்பவில்லை" என ஒற்றை வரியில் பதிலளித்து PCA திட்ட உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் உர்ஜித் படேல்.

மோதல் 7 - நீயா Vs நானா

நவம்பர் 19, 2018-க்கு முன், இந்திய ஊடக வரலாற்றில் RBI Board Meeting-க்கு இத்தனை கவனம் கொடுத்திருக்கமாட்டார்கள் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம். அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க இந்த கூட்டத்தில் என்ன இருக்கிறது எனக் கேட்கிறீர்களா..? இந்த கூட்டத்தில் தான் RBI Board பெரிதா..? அல்லது RBI Governor..? பெரியவரா என்கிற சண்டை உருவானது. இப்போது RBI Board சொன்னால் ஆர்பிஐ கவர்னர் கேட்டே ஆக வேண்டும் தானே என மத்திய பாஜக அரசு கிடிக்கிப்பிடி போட்டது.

ஆர்பிஐ இனி இல்லை

RBI Board-ல் மொத்தம் 21 இயக்குநர் பதவிகள் இருக்கின்றன. அதில் ஒரு ஆர்பிஐ கவர்னர், நான்கு துணை கவர்னர்கள், ஆர்பிஐ-ன் பிராந்திய குழுக்களில் இருந்து வரும் நான்கு உறுப்பினர்கள் என ஆர்பிஐ சார்பில் மட்டும் (1+4+4 = 9) இயக்குநர்கள் வருவார்கள். அது போக இரண்டு பேர் நிதி அமைச்சகத்தின் நாமினிக்களாக இருப்பார்கள். மீதமுள்ள 10 பேரும் அரசினால் இயக்குநர்களாக நியமிக்கப்படுபவர்கள் தான். இந்த 10 பேரை நியமிக்கும் முன்பு நிதி அமைச்சகம், ஆர்பிஐ கவர்னரிடம் ஒரு வார்த்தை கேட்டு தான் நியமிப்பார்கள். சில நேரங்களில் தன்னுடைய இயக்குநர் குழுவுக்கான 10 பேரை ஆர்பிஐயே முன் மொழியும். அதில் இருந்து தான் அரசு தேர்ந்தெடுக்கும். ஆனால் உர்ஜித்திடம் குருமூர்த்தி, சதீஷ் குலாத்தி, மனீஷ் சபர்வால், சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை நியமிக்கும் போது ஒரு வார்த்தைக் கூட கேட்ககாமல் ஒரு சபை நாகரீகம் கூட இல்லாமல் அவமானப்படுத்தினார்கள்.

ராஜினாமா

எத்தனையோ பிரச்னைகளைக் கடந்தும் தன் வேலையை ஒழுங்காகப் பார்த்த உர்ஜித்துக்கு தன் RBI Board-ஐ தனக்கே எதிராக திருப்பும் முயற்சியைக் கண்டவர் ஏனோ மனம் நொந்து விட்டார் போல. அடுத்த RBI Board கூட்டம் நடக்க இருந்த டிசம்பர் 14, 2018-க்கு முன்பே டிசம்பர் 10 2018-ல் தன் பதவியில் இருந்து விலகிவிட்டார். இத்தனை நடந்தும் மனிதர் யாரையும் குறை சொல்லவில்லை. தன் பதவிக் காலம் முழுவதும் மத்திய அரசுடன் போராடிய நேர்மையான கவர்னர் “என் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்” என ராஜினாமா கடிதத்தை முடித்த போது எவ்வளவு வலித்திருக்கும்.

Y H Malegam

இந்த பிரச்னை குறித்து 20 வருடங்களாக RBI Board-ல் பணியாற்றிய பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) Y H Malegam ஒரு ஆங்கில ஊடகத்திடம் பேசி இருக்கிறார். "என்னைப் பொருத்தவரை ஆர்பிஐ கவர்னர் முடிவு தான் இறுதியானது. அப்படி ஒருவேளை ஆர்பிஐ கவர்னரை எதிர்த்து தீர்மானங்களை RBI Board கொண்டு வர வேண்டும் என்றால், RBI Board-ன் தீர்மானங்களை மத்திய அரசின் முன் அனுமதியோடு இந்திய கெஸட்டில் வெளியிட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்குள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அந்த தீர்மானத்தை தாக்கல் செய்து வாக்கெடுப்பு நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்" என்கிறார்.

ரகுராம் ராஜன் வருத்தம்

இந்த பிரச்னை குறித்து முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் “RBI Board எப்போதுமே ஆர்பிஐ-ன் செயல்பாடுகளில் தலையிடாது. RBI Board ஒரு ஆலோசனைக் குழு. அது ஆர்பிஐ-ன் செயல்பாடுகளை விமர்சிக்கலாம், அறிவுரை கூறலாம், புதிய யோசனைகளை முன் மொழியலாம், ஆனால்... ஆர்பிஐ கவர்னர் தான் செயல்படுத்துவார். அவர் தான் ஆர்பிஐ அமைப்பின் செயல்பாடுகளுக்கு முழு பொறுப்பு. ஆர்பிஐயோ ஒரு தனி அமைப்பு. சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய பதவியையும், நபரையும் இன்று அரசு தன் அழுத்தத்தால் மாற்ற விரும்புவது மிகவும் வருத்தத்துக்குரியது” என்கிறார்.

வாழ்த்தி வணங்குகிறோம் உர்ஜித் சார்

ஆம். ரகுராம் ராஜன் சொன்னது உண்மை தான். முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பெற்ற மோடியின் பாஜக அரசு தன் ஆட்சி காலத்திலேயே, சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய பதவியையும், நபரையும் ஒன்றாக சிதைக்கிறார்கள்.

நிதி அமைச்சக அழுத்தம், ரகுராம் ராஜன் மீது காட்ட முடியாத கோபம், மத்திய அரசின் கேவலமான சிபாரிசு நடவடிக்கைகள், ரிலையன்ஸின் முன்னாள் ஊழியர் என்கிற கேலிப் பேச்சு என அனைத்தையும் தாங்கிக் கொண்டார்.

தனக்கான வேலையை, தன் நேர்மையை விட்டுக் கொடுக்காமல், ரகுராம் ராஜன் விட்டுச் சென்ற ஆர்பிஐ கவர்னர் கடமையை மிகச் சரியாக செய்த உர்ஜித் உண்மையாகவே பாரட்டுக்குரியவர். ஒவ்வொரு இந்தியனாலும் கொண்டாடப் பட வேண்டியவர். மீண்டும் ஒரு கம்பீர சல்யூட் உர்ஜித் சார். ஒன் இந்தியா உங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi urjit patel
English summary

what are the reasons and fights behind urjit patel resignation

what are the reasons and fights behind urjit patel resignation
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more