டெல்லி: 2019ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஏழைகளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம், விவசாயிகளுக்கு புதிய சலுகைகள் உள்ளிட்ட மிக முக்கிய 5 அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் லோக்சபா தொகுதிகள் அதிகம் இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. எனவே, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்கும் அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. உணவு மானியத்திற்கு ரூ. 1.8 லட்சம் கோடி வரை ஒதுக்கப் படலாம் என்று தெரிகிறது. இதுதவிர.. விவசாயிகளுக்கு பண உதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
அதற்காக ரூ. 1 கோடி ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் விவசாயிகளின் பிரச்னையை மையப்படுத்தி இன்றைய பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி உச்ச வரம்பில் விலக்கு அளிக்கப்படும் எதிர்பார்ப்பு பெரும்பான்மையானவர்களிடம் உள்ளது.
ஏழைகளுக்கு குறைந்தபட்ட வருவாய் என்ற திட்டத்தின் பரிந்துரையானது ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் ஏற்கனவே அரசுக்கு பலமுறை வலியுறுத்திய அம்சமாகும். நேரடி வரிவிதிப்பில் மாற்றங்கள் இருக்கும்.
அதுதவிர, சிறு, குறு வர்த்தகர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படலாம். கிராமப் புற மேம்பாட்டிற்காக ரூ. 1.3 லட்சம் கோடி வரை செலவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டுடன் இன்று ரயில்வே பட்ஜெட்டும் அறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ரயில்வே பட்ஜெட்டில் அதிகவே ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
பரபரப்பான ரயில் தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்தடங்களில் அதிவேக ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.