முனியாண்டி விலாஸ் பிறந்து வளர்ந்த கதை..! அந்த 4000 கிலோ மட்டன் பிரியாணியும் உண்டு..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எங்க கருப்பசாமி அவன் எங்க கருப்ப சாமி
முன் கொண்டக் காரனவன், முன் கோபக் காரனவன்
எங்க கருப்பசாமி அவன் எங்க கருப்ப சாமி
சல்லடையயைக் கட்டி வரான், சாஞ்சு சாஞ்சு ஆடி வரான்
எங்க கருப்பசாமி அவன் எங்க கருப்ப சாமி....
என தமிழர் பண்ணில் ஒரு பக்கம் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மறு பக்கம் அதிகாலை ஆறு மணிக்கு எல்லாம் தரமான மதுரை மட்டன் பிரியாணியை வடக்கம்பட்டிக்குள் நுழையும் பெருசுகள் முதல் பொடிசுகள் வரைக்கு ஊட்டி விட்டு அழகு பார்க்க ஒரு 200 பேர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

200 கெடா பிரியாணிக்கு, 250 கோழி குழம்புக்கு என கணக்கு போட்டு முனியாண்டிக்கு பலி கொடுத்திருக்கிறார்கள். பலி கொடுத்த ஆடு கோழிகளை எல்லாம் ஒரு பக்கம் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தயாரா..?

தயாரா..?

ஒரு பக்கம் பிரியாணிக்குத் தேவையான வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் தக்காளி எல்லாம் நறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். மறு பக்கம், ஆட்டை பதமாக கழுவி மஞ்சல் தடவி சுத்தம் செய்கிறார்கள். மறு பக்கம் தேக்ஸாவில் தண்ணீர் ஏற்றி ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, ஜாதி பத்திரி, கடல் பாசி, அண்ணாசி முக்கு என அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரிசி

அரிசி

தனியாக ஒரு 25 பேர் 2000 கிலோ தரமான சீரக சம்பா அரிசியைக் கழுவி சுத்தம் செய்கிறார்கள். நல்ல நீரில் பிரியாணிக்காக அதே அரிசியை ஊர வைக்கிறார்கள். "தம்பி அங்குட்டாக்க போய் பெரியவங்க கிட்ட பேசுங்க வேலை பாக்குற எடத்துல என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு" என மதுரை பிரியாணி மனத்திலேயே நம்மை அந்தப் பக்கம் திருப்புகிறார்கள்.

பரவலாகச் சொன்னது என்ன..?

பரவலாகச் சொன்னது என்ன..?

அப்படி அங்கிருந்த பெரியவர்களோடு பேச்சுக் கொடுத்து மதுரை முனியாண்டி விலாஸை பற்றிக் கேட்கிறோம். ஒவ்வொரு நபரும் தங்களுக்குத் தெரிந்ததை ஒவ்வொன்றாகச் சொல்கிறார்கள். ஆக இது உண்மையா பொய்யா என முழுமையாக கண்டு பிடிக்க சரியான ஆவணங்களோ உரிமங்களோ கூட இல்லை. ஆக அவர்கள் பரவலாகச் சொன்னதில் இருந்து இந்தக் கதையை எழுதுகிறோம்.

எப்படி இவ்வளவு காசு

எப்படி இவ்வளவு காசு

கிடைக்கும் நபர்களிடம் எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக பேச்சு கொடுக்குகிறோம். முதலில் சிக்குகிறார் ராஜா. இவருக்கு சென்னையில் ஒரு முனியாண்டி விலாஸ் இருக்கிறதாம். "நம்ம சாமி பேர்ல (முனியாண்டி விலாஸ் பேரில்) தென் இந்தியா முழுக்க ஒரு 1500 ஹோட்டல் இருக்குதுங்க. எல்லா கடைக்காரங்களும் இந்த திருவிழாக் காண்டி கொஞ்சம் காச ஒதுக்கி வெப்பாய்ங்க. பொதுவா ஒரு நாளோட மொத கஸ்டமர் கிட்ட இருந்து வர்ற பணத்துல ஒரு பகுதிய ஒதுக்கி வெச்சிருவோம். அந்த பகுதியை குலசாமிக்கு படையல் போட (நமக்கு மட்டன் பிரியாணியை பிரசாதமாகக் கொடுக்க) பயன்படுத்திக்கிவோம். ஒவ்வொரு வருஷமும் சேத்து வெச்சிருக்குற பணத்தை சங்கத்துக்கிட்ட கொடுத்து ஏற்பாடுகளைச் செஞ்சி தடபுடலாக முனியாண்டிக்கு விருந்து படைப்போம்" இது தானுங்க எங்க வழக்கம் என்கிறார்.

ஏன் இந்த திருவிழா

ஏன் இந்த திருவிழா

"எங்க ஹோட்டல்ல வந்து சாப்பிடறவங்க கொடுக்குற காசுல தான் நாங்க வாழுறோம். ஆக அவங்க கொடுத்த காசுல, ஒரு நாள் எங்க குலசாமி பேர்ல அதே மக்களுக்கு நல்ல சாப்பாடு போடுறது ஒரு நன்றி சொல்ற மாதிரிதானப்பா..?" என்கிறார் திருச்சியில் கடை வைத்திருக்கும் தெய்வநாயகம்.

திருவிழா தொடக்கம்

திருவிழா தொடக்கம்

1937-ல் குருசாமி நாயுடு காலத்திலேயே இப்படி திருவிழா நடத்தத் தொடங்கிவிட்டார்களாம். அன்று முதல் இன்று வரை விடாமல் நடத்தி வருகிறார்களாம். 1970-கள் வரை மொத்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களும் ஒன்றாக நடத்தி வந்தார்களாம். அதன் பின் ஏற்பட்ட சில ஜாதியப் பிரச்னைகளால் இன்று இரு பிரிவினர்கள் தனித் தனியாக நடத்துகிறார்களாம் என்பது கொஞ்சம் வருத்தம். இரு சாதிப் பிரிவினர்களாக பிரிந்து நடத்தினாலும் இரண்டு திருவிழாவுக்கும் குறைந்தபட்சம் 10,000 - 15,000 பேர் வரை இந்த திருவிழா வந்து உண்டு, தங்கள் குலசாமி முனியாண்டியின் அருளைப் பெற்றுச் செல்வார்களாம். சரி இத்தனை பிரபலமான முனியாண்டி விலாஸ் எப்படி தொடங்குகிறார்கள். யார் முதல் ஓனர்..?

முனியாண்டில் விலாஸ் தொடக்கம்

முனியாண்டில் விலாஸ் தொடக்கம்

1937-ல் குருசாமி நாயுடு என்பவர் தான் வடக்கம்பட்டியில் இருந்து காரைக்குடிக்குச் சென்று ஒரு ஹோட்டல் போட்டாராம். விவசாயம் பொய்த்துப் போய் கடைசி நம்பிக்கையாக கையில், காதில், கழுத்தில் இருந்தவைகளை எல்லாம் அடமானம் வைத்து முனியாண்டி சாமியின் பெயரிலேயே ஒரு கடை போட்டாராம். முனியாண்டி அருளால் வியாபாரம் அமோகம். இதற்கு மறுப்பாக எஸ்.வி.எஸ் சுப்ப நாயுடு தான் முதலில் காரைக்குடியில் கடை போட்டவர் என எதிர் கதைகளை கூறுபவர்களும் உண்டு.

முனியாண்டி விலாஸ்..?

முனியாண்டி விலாஸ்..?

சொன்னதும் நாக்கில் எச்சில் ஊற வேண்டுமே... அது தானய்யா தமிழர் கலாச்சாரம். அப்படி முனியாண்டி விலாஸ் பேரைக் கேட்டாலே கோழி குழம்பு, வஞ்சரம் வறுவல், அந்த மட்டன் பெப்பர் சாப்ஸ் என வாய் ஊறினால் தான் அது முனியாண்டி விலாஸ். அப்படித் தான் குருசாமியின் முனியாண்டி விலாஸும் காரைக்குடியில் பெயரெடுத்தது. ஐயா மதிய அசைவத்துக்கு எங்கிட்டு போக எனக் கேட்டால் "தரமான அசைவ சாப்பாடா... நம்ம முனியாண்டி விலாஸுக்கு போங்கப்பு" என ஊரே வழி சொல்லுமாம்.

இரண்டாவது நபர்

இரண்டாவது நபர்

குருசாமி அண்ணனைத் தொடர்ந்து சுந்தர் ரெட்டியார் கல்லிக்குடி மற்றும் விருதுநகர் பகுதிகளில் அதே குல தெய்வத்தின் பெயரில் கடை போடுகிறார். அதுவும் முனியாண்டி விலாஸ் தான். சுந்தரண்ணணும் குருசாமி அண்ணனைப் போல சிறப்பாக தொழில் செய்து வளர்ந்தார். அதன் பிறகு வடக்கம்பட்டி ஆட்களில் பலரும் முனியாண்டி விலாஸுக்கு வேலைக்கு வருவது, சில வருடங்களில் இலை போடுவது தொடங்கி, அடுப்பங்கரை வேலைகள், பண நிர்வாகம் என பலவற்றையும் கற்றுக் கொண்டு தனிக் கடை போட்டு பிழைப்பார்களாம். "ஐயா கருப்பா, என்னைய காப்பாத்துற மாதிரி, இந்த புள்ளங்களையும் நீ தான்யா பலமா இருந்து காக்கணும்" என அதே முனியாண்டியிடம் வேண்டி ஆசிர்வதித்து கொஞ்சம் கடை வைக்க பணமும் கொடுத்து அனுப்புவார்களாம்.

இன்று

இன்று

தென் இந்தியா முழுமைக்கும் 1500க்கும் மேற்பட்ட உணவகங்கள் முனியாண்டி விலாஸ் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. முனியாண்டி விலாஸ் என்கிற பெயர் வைத்தவர்களூக்கு எல்லாம் ஒரே குறிக்கோள் தான்
"குல சாமி பேர்ல கட வெச்சா சுத்து பட்டுல நாம தான் நல்ல கறி சோறு தரணும்" என ஒரு நேர்மைத் திமிரோடும், வைராக்கியத்தோடும் கடை போடுவார்களாம். அதற்கு தகுந்த பிசினஸ் ஏரியாக்களையும் பார்த்துத் தான் கடை போடுவார்களாம்.

குடும்ப பிசினஸ்

குடும்ப பிசினஸ்

மேலே சொன்னது போல வெறுமனே ஊர் பேர் தெரியாதவர்களிடம் எல்லாம் வேலையைப் பழுகுவதற்குப் பதிலாக சொந்த மாமன், மச்சான் கடைகளிலேயே வெட்கப்படாமல் சில வருடங்கள் வேலை செய்து தனிக் கடை போட்டவர்கள் தான் ஏராளமாம். அவ்வளவு ஏன் அப்பா கடைகளில் வேலை செய்து பக்கத்து ஊரில் தனி கடை போட்ட மகன்களும் உண்டாம். "தொழில்-ன்னு வந்துட்டா நல்ல சாப்பாடு போடுறவன் தானய்யா ஜெயிப்பான்" எனச் சிரிக்கிறார்கள் அப்பா முத்துப் பாண்டியும், மகன் சுந்தர் பாண்டியும்.

ஒற்றுமை

ஒற்றுமை

ஒரு ஊரில் ஒரு முனியாண்டி விலாஸ் வந்துவிட்டால், அதே குலசாமிப் பெயரில் அருகில் வேறு ஒரு கடை போடமாட்டார்களாம். இதற்கு சிறந்த உதாரணம் சென்னை, பூந்தமல்லியில் ராஜவிலாஸ் என்கிற பெயரில் அசைவ உணவக கடை வைத்திருக்கும் ராமசாமி சொல்கிறார். இவர் நண்பர் ஒருவர் பூந்தமல்லி பகுதியில் முனியாண்டி விலாஸ் என பெயர் வைத்து நடத்துகிறாராம். அதனால் இவரால் தன் உணவகத்துக்கு குலசாமி முனியாண்டி பெயரை வைக்க முடியவில்லை என வருத்தப்படுகிறார். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அவராகவெ கடையை விற்றுப் போகும் வரை தான் தன் குலசாமி பெயரை வைத்து தன் நண்பருக்கு நஷ்டத்தை ஏற்படுத்த மாட்டேன் என்கிறார் ராமசாமி.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கிடையில் இருக்கும் ஒழுங்கு, அசாத்திய திறமை, இரவு பகல் பாராத உழைப்பு, இதை எல்லாம் விட மட்டன் என்றால் மதுரை முனியாண்டி விலாஸ் என நியாபகம் வரும் பிராண்டு. அந்த பிராண்டை ஒருவர் மட்டும் அனுபவிக்காமல் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் நல்லெண்ணம், ஒரு ஏரியாவில் ஒருவர் முனியாண்டி பெயரில் கடை போட்டால் மற்றவர்கள் விட்டுக் கொடுப்பது.... என முனியாண்டி விலாஸைப் பார்த்து பிசினஸில் ஜெயிக்க விரும்புபவர்கள் கற்றுக் கொள்ள, ஆச்சர்யப்பட நிறையவே இருக்கிறது. பத்திரிகைத் தம்பி பிரியாணி ரெடி வர்றீங்களா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

the emotional growth and expansion story of muniyandi vilas

the emotional growth and expansion story of muniyandi vilas
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X