டெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 05, 2019 அன்று 2018 - 19 நிதி ஆண்டில் ஈட்டிய வருமானங்களுக்கு செலுத்த வேண்டிய வருமான வரிப் படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை.
வழக்கமாக கேட்கும் பெயர், முகவரி, பான் எண், ஆதார் எண், கடந்த ஒரு வருடத்தில் வாங்கிய சம்பளம் பணம் அல்லது ஈட்டிய வங்கி வட்டி வருமானம், வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளாக போட்டிருக்கும் பெரிய தொகைகளில் இருந்து வரும் வட்டி, ஏற்கனவே கட்டி இருக்கும் வருமான வரி போன்ற சாதாரண விவரங்களைத் தாண்டி இந்த முறை கூடுதல் விவரங்களை வருமான வரிப் படிவங்களிலேயே கேட்டிருக்கிறார்களாம்.
பொதுவாக நேரடியாக வருமான வரித் துறை அலுவலகத்திற்கு சென்று காகித படிவங்களை (Physical Form) யார் வேண்டுமானாலும் நிரப்பி கொடுக்க முடியும். ஆனால் இந்த முறை 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் (மிக மூத்த குடிமக்கள் - Super Senior Citizens) மட்டுமே காகித படிவங்களை நிரப்ப முடியுமாம். மற்றவர்கள் அனைவருமே ஆன்லைன் படிவத்தைத் தான் நிரப்ப வேண்டும். அதையும் மீறி 80 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காகித படிவங்களை (Physical Form)-களை நிரப்பினால் ஏற்றுக் கொள்ளப் படாது எனவும் தெளிவு படுத்தி இருக்கிறது வருமான வரித் துறை.
ஜெட் ஏர்வேஸ் பங்குகள் விற்பனைக்கு ரெடி - ஏப்ரல் 9ஆம் தேதி வரை வாங்கிக்கொள்ளலாம்

வருமான வரிப் படிவம் 1 - ITR 1 Sahaj
வருமான வரி படிவம் 1 சஹஜ் படிவத்தை ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வருமானமாகவோ, சம்பளமாகவோ, பென்ஷனாகவோ பெறுபவர்கள் ஒரு வீட்டில் இருந்து மட்டும் வருமானம் பெறுபவர்கள் அல்லது ஒரு வீட்டை மட்டும் வைத்திருப்பவர்கள், வட்டி வருமானம் பெறுபவர்கள், ஆண்டுக்கு 5,000 ரூபாய்க்குக் கீழ் விவசாய வருமானம் பெறுபவர்கள் மட்டுமே இந்த படிவத்தில் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். இந்த படிவத்தைத் தான் நேற்று ஏப்ரல் 05, 2019-ல் வெளியிட்டிருக்கிறது வருமான வரித் துறை. வரும் 31 ஜூலை 2019-ம் தேதிக்குள் 2018 - 19 நிதியாண்டுக்கான வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்து விட வேண்டும்.

கூடுதல் விவரங்கள்
இப்போது வெளியிட்டிருக்கும் வருமான வரிப் படிவம் 1 உட்பட அனைத்து படிவங்களில் வருமானவரி துறை கூடுதலாக நிறைய படிவங்களைக் கேட்டிருக்கிறார்களாம். என்ன மாதிரியான விவரங்களைக் கேட்கிறார்கள் எனப் பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாகத் தான் இருக்கிறது. என்ன மாதிரியான சலுகைகளை எல்லாம் வருமான வரித் துறை கேட்டிருக்கிறார்கள் என அப்படியே மேற்கொண்டு படித்துப் பாருங்களேன்.

கேட்டிருக்கும் சலுகைகள்
தற்போது சம்பளதாரர்கள் அலுவலகங்களில் இருந்து வாங்கும் பணச் சலுகைகள் அனைத்தையுமே வருமான வரி படிவத்தில் குறிப்பிடவேண்டியிருக்கிறது. உதாரணமாக வீட்டு வாடகை சலுகை (HRA) விடுப்பு பயண சலுகை (LTA) குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் சலுகைகள், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பணி நிமித்தமாக மாறும் போது கொடுக்கப்படும் சலுகைகள் (Relocation and shifting allowances) என பல சலுகைகளை விவரமாக கேட்டு இருக்கிறது வருமானவரித்துறை. இதற்கு முந்தைய ஆண்டு வரை வரிக்கு உட்பட்ட சலுகைகளை மட்டுமே கேட்டது. ஆனால் இப்போது வரிக்கு உட்படாத சலுகைகளையும் விரிவாக கிடைக்கிறது வருமான வரித் துறை.

நில விவரங்கள்
2019 - 20 நிதியாண்டுக்கான வருமான வரி படிவங்களில் புதிதாக முழு நில விவரங்களைக் கேட்கப் போகிறார்களாம். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் விவசாய வருமானம் ஈட்டுபவர்கள் கீழே சொல்லும் விவரங்களை முழுமையாக வருமான வரிப் படிவத்தில் சொல்ல வேண்டுமாம். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் விவசாய வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் நிலபுலன்கள் இருக்கும் இடங்களை விவரமாக குறிப்பிட வேண்டியிருக்கிறது. விவரமாக என்றால் விவசாய நிலம் இருக்கும் மாவட்டம், மாவட்டத்தின் பின் கோட், நில அளவைகள் மற்றும் விவசாய நிலத்துக்கு இருக்கு நீர் பாசன வசதிகள் என பல்வேறு விவரங்களைக் கேட்கிறார்கள்.

வெளிநாட்டு சொத்துக்கள்
இப்போது வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவர்கள் தங்களின் வெளிநாட்டு டெபாசிட்டரி கணக்குகள், வெளிநாட்டு custodian கணக்குகள், வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கும் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் விவரம், வெளிநாட்டு கரன்சிகளாக கையில் வைத்திருக்கும் ரொக்கத் தொகை, வெளிநாடுகளில் வைத்திருக்கும் காப்பீடு விவரங்கள் போன்றவைகளை எல்லாம் இந்த முறை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறதாம்.
எது எப்படியோ சாமானியர்களை கசக்காமல் திருடர்களைப் பிடித்தால் சரி. வாழ்த்துக்கள் வருமான வரித் துறை.