மும்பை: விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதால், பயணிகளைக் கவரும் வகையில் அனைத்து விமான நிறுவனங்களும் போட்டி போட்டு கட்டணச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இப்பொழுது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் கோடை விடுமுறையை முன்னிட்டு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. 1000 ரூபாய் டிக்கெட்டில் உள்நாட்டிலும், 3500 ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ஏர் இந்தியா நிறுவனமும் பயணிகளைக் கவரும் வகையில் பயணம் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணச் சலுகையாக 40 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடந்த மாத மத்தியில் கடன் பிரச்சனையின் காரணமாக திடீரென விமான சேவையை நிறுத்திவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பல விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விமான கட்டணத்தை தாறுமாறாக ஏற்றி வந்தன.
இதற்கிடையில், இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானங்களில் பல அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகளால் தனது விமான சேவையை ரத்து செய்து விமான பயணிகளை மேலும் மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்ட அதிருப்தியில் இருந்த விமான பயணிகள் குறிப்பாக உள்நாட்டு பயணிகள், இதர விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதாலும், ஏர் இந்தியா விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாலும், மேலும் அதிருப்தி அடைந்து விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டனர்.
சாதாரணமாக கோடை விடுமுறைக் காலத்தில் கோடை வாசஸ்தலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் திட்டமிட்டு பயணம் மேற்கொள்பவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். இவர்களில் அநேகம் பேர் விமான நிறுவனங்களின் டிக்கெட் விலை ஏற்றத்தால் தங்களின் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.
அனைவரும் சொல்லி வைத்தது போல், திடீரென விமான பயணத்தை ரத்து செய்துவிட்டதால், அனைத்து விமானங்களிலும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. கோடை விடுமுறை முடியும் காலம் நெருங்குவதால் அதற்குள் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தற்போது அனைத்து விமான நிறுவனங்களும் புதுத் திட்டத்தை முன்வைக்கத் தொடங்கி விட்டன.
அந்த வகையில், கடந்த வாரம் ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு புதுச் சலுகையை அறிவித்தது. விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்குள் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்புச் சலுகையாக பயணக்கட்டணத்தில் சுமார் 40 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்தது.
இப்பொழுது, மற்றொரு தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளைக் கவர்வதற்காக கோடைகால சிறப்புச் சலுகையாக 1000 ரூபாய் டிக்கெட்டில் உள்நாட்டிலும், 3500 ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த கோடை சிறப்புச் சலுகை இன்று முதல் 16ஆம் தேதி வரையிலும் செல்லுபடியாகும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோடை சிறப்புச் சலுகையானது, டெல்லி-அகமதாபாத், மும்பை-ஐதராபாத், ஐதராபாத்-துபாய், சென்னை-குவைத், டெல்லி-கோலாலம்பூர், பெங்களூரு-மாலே உள்ளிட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்லுபடியாகும்.
மேலும் இந்த சிறப்புச் சலுகை வரும் மே 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக 53 உள்நாட்டு வழித்தடங்களுக்கும், 17 வெளிநாட்டு வழித்தடங்களுக்கும் சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோடை சிறப்புச் சலுகை குறித்து இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வில்லியம் பவுல்ட்டர் (William Boulter) கூறுகையில், கோடை விடுமுறையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக நாங்கள் 30 சதவிகித சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளோம். இந்த சிறப்புச் சலுகையை மே 14 முதல் மே 16ஆம் தேதி வரையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார். அதோடு நாங்கள் அளிக்கும் இந்த சிறப்புச் சலுகையானது பயணிகளுக்கு என்றுமே மறக்க முடியாத அனுபவமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். என்ன மக்களே விமானத்தில் பறக்க தயாராகிட்டீங்களா.