Thuli: என் மகன் இப்ப கோட்டு சூட்டு எல்லாம் போட்டு வேலைக்கு போறான்னா அதுக்கு இவங்க தான்யா காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: "ஆள் பாதி ஆடை பாதி" இது பழமொழி. இந்த மொழியை இன்றைய தேதிக்கு எல்லா தரப்பு மக்களும் ஜாதி, மத, பிராந்திய, மொழி வித்தியாசமின்றி உணர்ந்திருக்கிறார்கள்.

 

ஆனாலும் எல்லோராலும், அவர்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கிக் கொள்ள முடிவதில்லை. பிடித்த ஆடையை விடுங்கள். ஓரளவுக்கு தரமான, மற்றவர்களின் பரிகாசத்துக்கு உள்ளாகாத ஆடைகளைக் கூட வாங்க முடியாத கோடான கோடி இந்தியர்கள் இன்னும் நம்மோடு ஒன்றாக அரசுப் பேருந்துகளில் வொயிட் போர்டை மட்டும் தேடித் தேடி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்..? இனி என்ன செய்ய இருக்கிறோம்..? இதற்கு தங்கள் செயலில் விடை கொடுத்திருக்கிறது Thuli அமைப்பு.

என்ன செய்கிறார்கள்

என்ன செய்கிறார்கள்

சென்னை அடையாரில் குட்டி ஷாப்பிங் மாலான கோகுல் ஆர்காடில், இந்த Thuli அமைப்பினர் ஒரு கடை திறந்திருக்கிறார்கள். இந்த கடையில் இருக்கும் ஆடைகளை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். மன்னிக்கவும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் காசு கொடுக்க வேண்டாம். இந்த Thuli அமைப்பினர் துணி மணிகளைத் தாண்டி... பள்ளிக் கூட பைகள், காலணிகள், விளையாட்டு சாமான்கள், பொம்மைகள், கைக் கடிகாரங்கள் என பலவற்றையும் மக்களிடம் இருந்து சேகரிக்கிறார்கள். அதை தேவையானவர்களுக்கு கொடுக்கிறார்கள். சரி இந்த கடையின் வாடிக்கையாளர்கள் யார்..?

இவர்களுக்கான கடை

இவர்களுக்கான கடை

Thuli அமைப்பினரின் கடை, சம வாய்ப்பு அளிக்கப்படாத போதும், சமூக நீதி கிடைக்காத போதும், சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, எதார்த்தத்தில் எட்ட முடியாத இலக்குப் புள்ளிகளைத் தங்கள் வெற்றிப் புள்ளிகளாக வைத்துக் கொண்டு ஓடும் இளைஞர்களுக்கான கடை. ஆம், இது நம் இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்றே பிரத்யேகமாக அமைத்திருக்கும் கடை. நிலையான வேலை இல்லாதவர்கள், அமைப்புசாரா தொழில்களில் கூலி வேலை செய்பவர்களில் தொடங்கி, நமக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் வீட்டுக் கொல்லைப் புறத்தை சுத்தம் செய்யும் விளிம்பு நிலை மனிதர்களுக்கான கடை இந்த Thuli கடை.

எளிதில் கடப்பது
 

எளிதில் கடப்பது

ஓ... ஹோ... Thuli அமைப்பினர், இலவசமாக துணி மணி தர்றாய்ங்களா..? என்ன 10 கிழிஞ்ச சட்டை, 4 இத்துப் போன பேண்ட் வெச்சிருப்பாய்ங்களா..? மலை மாதிரி அள்ளி ஒரு இடத்துல போட்டிருப்பாய்ங்க, மக்கள் ஓடி வந்து தங்களுக்கு தேவையானது போட்டி போட்டு எடுத்துப்பாய்ங்க. அது தான..? என அசால்டாக இவர்களைக் கடக்க முடியவில்லை. ஏழை மக்கள் தொடங்கி விளிம்பு நிலை மனிதர்கள் வரை அனைவருக்கும் தன்நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் இவர்கள் நுணுக்கமாக செய்யும் காரியங்கள் பாராட்டுக்குரியவை, வணக்கங்களுக்கு உரியவை.

இலவசமாக வாங்கலாம்

இலவசமாக வாங்கலாம்

வாங்கலாம் என்றாலே நாம் எதையோ கொடுத்து தான் வாங்க வேண்டும். ஆனால் Thuli கடையில் இலவசமாக வாங்கலாம். புரியவில்லையா..? வருபவர்கள் ஏதோ தான தர்மத்தைப் பெற்றுக் கொள்ள வருபவர்கள் போல வரக் கூடாது. அவர்களுக்கான தன்னம்பிக்கை வளர வேண்டும் என்பதற்காக 500 அல்லது 1000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் கொடுக்கப்படுகிறது. ஆக ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கூப்பனை வைத்துக் கொண்டு பொருட்களை வாங்கச் சென்றால் எவ்வளவு உரிமையாக வாங்க முடியுமோ... அவ்வளவு உரிமையாக பேசி விசாரித்து, நிதானமாக தங்களுக்கான ஆடைகளை போட்டுப் பார்த்து, கூப்பன் கொடுத்து வாங்குகிறார்கள், அந்த எளிய மக்கள்.

கூப்பன் முறை

கூப்பன் முறை

ஒரு பிற்படுத்தப்பட்டோரின் குடும்பத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலை பொறுத்து அவர்களுக்கான கூப்பன் தொகை வழங்கப்படுமாம். Thuli கடையில் பர்சேஸுக்கு வரும் எளிய மக்கள் தங்கள் ரேஷன் அட்டை விவரங்களை பகிர வேண்டுமாம். ஒரு சட்டை மற்றும் பெண்களுக்கான குர்த்தாக்களின் விலை 350 ரூபாய்க்கு இருக்கிறதாம். சேலைகளின் விலை 1,000 ரூபாய் வரை இருக்கிறதாம். Thuli கடைக்கு பர்சேஸ் வருபவர்கள் தற்போது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தான் வர முடியுமாம். அப்படி இதுவரை சுமார் 18,000 குடும்பங்கள் Thuli-யின் ஆடையில் நெஞ்சை நிமிர்த்தி இருக்கிறார்களாம்.

தானத்துக்கும் தரம்

தானத்துக்கும் தரம்

Thuli அமைப்புக்கான இந்த ஆடைகள், பெரிய கார்ப்பரெட் நிறுவனங்கள், பொட்டிக்குகள் மற்றும் பல தரப்பட்ட தொண்டர்கள் மூலமாக திரட்டப்படுகிறதாம். ஒவ்வொரு வாரமும் சுமார் 500 ஆடைகள் வரை நம் Thuli அமைப்புக்கு வருகிறதாம். இந்த 500 துணிகள் வந்த உடன் அப்படியே போட்டு விற்பதில்லை. இந்த துணிகளில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா..? இந்த ஆடையை தம்மைப் போன்ற சக மனிதர் சந்தோஷமாக போட்டுக் கொள்வாரா..? சாயம் போய் இருக்கிறதா..? தையல் விட்டிருக்கிறதா..? நல்ல துணி தானா..? என பல தொண்டர்களின் கண்கள் மேனுவல் ஸ்கேன் செய்து அப்ரூவ் செய்கிறார்கள். தரமற்ற துணிகளை தங்களைப் போன்ற சக மனிதர்களுக்கு கொடுப்பதில்லையாம்.

புதுப் பொலிவு

புதுப் பொலிவு

அப்படி தொண்டர் கண்களால் பரிசோதித்து அப்ரூவ் கொடுக்கப்பட்ட துணிகளை பக்காவாக சலவை செய்து, ஐயர்ன் செய்து புதுத் துணி போல, அடையார் கோகுல் ஆர்காட் ஷாப்பிங் மாலில், Thuli கடையில் தொங்கவிடுகிறார்கள். அந்த ஆடையும், தான் சென்று சேர வேண்டிய அந்த எளிய மனிதனுக்காக, ஏசி அறையில், தனக்கு ஒதுக்கப்பட்ட ஹேங்கரில் சிரித்த மேனிக்கு, விரைப்பாகவும், நறுமணத்தோடும் காத்திருக்கிறது. ஏசி ஷாப்பிங் எல்லாம் எட்டாத ஏழுமலையான் சந்நிதானம் என நினைத்துக் கொண்டிருந்த அந்த சாமானியர்களும், சில்லென்று வீசும் அந்த Freon காற்றை சுவாசித்த படி தங்கள் ஆடையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

முதல் முறை

முதல் முறை

Hello Room Service, Clean My Room Right Away... என ஒருவர் தன் ஹோட்டல் அறையில் இருந்து உத்தரவிட்டதும், ஒரு பணிப் பெண் ஓட்டமும் நடையுமாக வந்து, குப்பைக் குளமாக்கி வைத்திருக்கும், அவர் அறையை மீண்டும் தும்பப் பூ போல மாற்றும் பணிப் பெண்களில் ஒருவர் தான் செல்வி. "இதுவரை நான் ஏசி இருக்குற கடைல பொருள் வாங்குனதில்லைங்க. சொல்லப் போனா நாங்க (செல்வியும் அவர் குழந்தைகளும்) எல்லாம் துணி மணி வாங்குனதே கிடையாது. பெரும்பாலும் யாராவது தான தர்மம் பண்றது தான் எங்களுக்கான தீவாளி, பொங்கல் துணி மணி எல்லாம். நா ஒருத்தி தான் என் குழந்தைங்கள வளக்குறேன். சாப்பாட்டுக்கே வழி இல்லாதப்போ துணி ஒரு கேடான்னு நாங்க துணிய வாங்கவே மாட்டோம். இதெல்லாம் என் மகன் வேலைக்கு போர வரைக்கும் தான்".

கண்கள் மின்ன

கண்கள் மின்ன

அதன் பிறகு... எனக் கேட்டால் கொஞ்சம் முகம் வாடுகிறது. மீண்டும் தொடர்கிறார் செல்வி. "என் மகன் இப்ப ஏதோ ஒரு கம்பெனில வேலை செய்யுறான். அவனோட டிரஸ்ஸ பத்தி அவனோட வேலை பாக்குறவங்க போட்டுக்கிட்டு வர்ற டிரஸ்ஸ பாத்து, ரொம்ப மனசு உடஞ்சி பொய்ட்டான். அப்ப தான் இந்த Thuli கடைய பத்தி கேள்விப் பட்டு வந்தோம். இப்ப என் மகன் கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக்கிட்டு மத்த புள்ளைங்க் மாரி வேலைக்கு போறான்" என கண்கள் மின்ன, உதடுகள் நடுங்கச் சொல்கிறார் செல்வி. ஆடைக்கு அத்தனை பலம் உண்டு என்பதை செல்வி அம்மாவின் சொற்கள் நிரூபிக்கின்றன.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இப்படி செல்வி அம்மா போல, 18,000 பேரின் வாழ்கையில் ஆடை வழியாக, இந்த சமூக ஏற்றத் தாழ்வுகளை மாற்றிக் கொண்டிருப்பவர்கள் அஜித் குமார் ரவீந்திரன், சிவாஜி பிரபாகர் மற்றும் ஜெய் பலா என்கிற மூன்று பிசினஸ்மேன்கள் தான். கூடிய விரைவில் இந்த மூவர் அணி சென்னை வட பழநி பகுதியில் ஒரு Thuli கடையைப் போடப் போகிறார்களாம். எப்படிங்க இந்த ஐடியா..? என்றால்

"மக்களுக்கு எதாவது செய்யணும்னு தோனுச்சு,

யோசிச்சோம்,

சிறப்பா செஞ்சிட்டோம்" என முடிக்கிறார்கள்.

வாழ்த்துக்கள் அஜித் குமார் ரவீந்திரன், சிவாஜி பிரபாகர், ஜெய் பால்.

ஆடைகளை வாங்க கொடுக்க:

Gokul Arcade, Ground,

12, Sardar Patel Road,

Baktavatsalm Nagar, Adyar,

Chennai,600020.

Cell Phone: 63803 06662,

Facebook: https://www.facebook.com/ThuliIndia

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

thuli india gives free dress shoes bags for free to under privileged persons

thuli india gives free dress shoes bags for free to under privileged persons
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X