யார் இந்த சிதம்பரம்..! இவர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழநியப்பன் சிதம்பரம் என்கிற ப சிதம்பரம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தியாவின் நிதி அமைச்சர், உள் துறை அமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவரைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

 

நம் ப சிதம்பரம் பிறந்ததே பெரிய பணக்கார குடும்பத்தில் தான். இவரின் அம்மா வழி தாத்தா இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் அதிபர்களில் ஒருவரான அண்ணாமலைச் செட்டியார்.

இவர் தொடங்கியது தான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். அதோடு இன்றைய இந்தியன் வங்கியை நிறுவியவர்களுள் ப சிதம்பரத்தின் குடும்பத்தினர்களுக்கும் பெரிய பங்கு உண்டு.

கல்வி

கல்வி

சென்னை லயோலா கல்லூரியில் பியூசி, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை புள்ளியியல், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ என பெரிய படிப்பு படித்தவர் நம் ப சிதம்பரம். குடும்பத்தில் நல்ல சொத்து பத்துக்கள், ஜவுளி வியாபாரம், வர்த்தகம், விவசாயம் என இருந்தாலும் நம் ப சிதம்பரத்துக்கு அதில் எல்லாம் ஆர்வம் வரவில்லையாம். அவர் தன் போக்கில் வழக்கறிஞராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்.

வழக்கறிஞர் பணி

வழக்கறிஞர் பணி

இன்னொரு பக்கம் எம் ஆர் எஃப், கே சி பி, நகர போக்குவரத்துக் கழகம் போன்றவைகளில் வர்த்தக யூனியன் தலைவராகவும் பதவியில் இருந்திருக்கிறார். அதோடு இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என் ராம் போன்றவர்களுடன் சேர்ந்து Radical Review என்கிற பத்திரிகை வேலைகளையும் பார்த்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வேலை பார்க்கத் தொடங்கி, 1984-ம் ஆண்டில் மூத்த வழக்கறிஞர் ஆகிறார்.

அரசியல் பிரவேசம்
 

அரசியல் பிரவேசம்

அதன் பின்னும் பல மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டு ஒரு வழக்கறிஞராகவே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இப்படிச் சட்டப் பணிகளில் ஒரு பக்கம் பயணித்துக் கொண்டிருக்க, அரசியலில் மெல்ல வளரத் தொடங்குகிறார். 1984-ல் காங்கிரஸ் கட்சி சார்பில், முதல் முறையாக சிவகங்கை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார். 1986-ல் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசில் மத்திய இணை அமைச்சர் பதவி.

மாற்றங்கள்

மாற்றங்கள்

ப சிதம்பரம் என்றாலே 1991 மாற்றங்கள் தான் உடனடியாக நினைவுக்கு வரும். அந்த காலத்தில் நம் ப சிதம்பரம் வணிக அமைச்சகத்தில் இணை அமைச்சராக அமர்த்தப்பட்டார். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பதவியில் இருந்தார். அந்த காலங்களில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் பல முக்கியமான கொள்கை முடிவு மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் வருவதற்கு ப சிதம்பரமும் ஒரு முக்கிய காரணம் என இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி சமீபத்தில் புகழ்ந்திருப்பதே நம் ப சிதம்பரத்தின் கொள்கை அறிவார்ந்த கொள்கை மாற்றத்துக்கு சாட்சி.

முதல் முறை

முதல் முறை

1996-ல் தேவ கெளடா அரசில் தான் முதன் முறையாக நிதி அமைச்சர் பதவியில் அமர்கிறார் நம் ப சிதம்பரம். 1997-ல் முதல் முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். அப்போது அவருக்கு வயது 52. அதன் பின் தேவ கெளடா அரசு கவிழ்ந்து, அதன் பின் ஐ கே குஜ்ரால் அரசிலும் நிதி அமைச்சராகிறார். அதுவும் தாக்கு பிடிக்கவில்லை. குஜ்ரால் அரசும் கவிழ்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தது.

தாய் கழகம்

தாய் கழகம்

நிதி அமைச்சராக அமர்ந்த பின் தமிழகத்தில் தனியாக, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்கிற பெயரில் தனிக் கட்சி எல்லாம் நடத்திப் பார்த்தார். வேலைக்கு ஆகவில்லை. 2004 தேர்தல் காலங்களுக்கு முன் மீண்டும் தாய் கழகமான காங்கிரஸிலேயே கட்சியை இணைத்துக் கொண்டு சேர்ந்தார். மீண்டும் 2004-ல் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றார். 2004-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க நிதி அமைச்சகம் மீண்டும் நம் ப சிதம்பரம் கையில்.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

இந்தியாவிலேயே அதிக முறை மத்திய அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய். 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். அவருக்கு அடுத்து நம் ப சிதம்பரம் தான் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். எட்டு முறை. 1997 - 98, 2004 - 05, 2005 - 06, 2006 - 07, 2007 - 08, 2008 - 09, 2013 - 14, 2014 - 15 (இடைக்கால பட்ஜெட்) என எட்டு பட்ஜெட்களைத் தாக்கல் செய்து சாதனை படைத்து இருக்கிறார். இவர் பட்ஜெட்டில் என்னவெல்லாம் அறிவித்து இருக்கிறார்.

1997 - 98 பட்ஜெட்

1997 - 98 பட்ஜெட்

1997 பட்ஜெட் ஒரு பொருளாதார மைல்கல் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டித் தள்ளி இருக்கிறது. இந்த பட்ஜெட்டை இந்திய ஊடகங்கள் கனவு பட்ஜெட் எனக் கொண்டாடின.
1. வருமான வரியைக் குறைத்தது.
2. பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தெளிவான திட்டங்களை வகுத்தது
3. கார்ப்பரேட் வரிகளை 40%-த்தில் இருந்து 35%-ஆக குறைத்தது,
4. கார்ப்பரெட் வரிகள் மீதான சர் சார்ஜ்களைக் குறைத்தது
5. பல பொருட்களுக்கு சுங்க வரியை 50%-த்தில் இருந்து 40%-ஆக குறைத்தது... என அடித்து நொறுக்கினார் ப சிதம்பரம். அதோடு மக்களே முன் வந்து தங்கள் வருமானத்தைச் சொல்லும் Voluntary Disclosure of Income Scheme (VDIS) திட்டத்தையும் கொண்டு வந்தார்.

இன்று வரை இந்தியாவின் முக்கியமான டாப் 10 பட்ஜெட்கள் பட்டியல் போட்டால் அதில் 1997 பட்ஜெட்டுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

 

2004 -05 பட்ஜெட்

2004 -05 பட்ஜெட்

1. ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளித்தது
2. டெலிகாம் (49-ல் இருந்து 74), சிவில் ஏவியேஷன் (40-ல் இருந்து 49), இன்ஷூரன்ஸ் (26-ல் இருந்து 49) போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான வரம்பை அதிகரித்தது
3. கம்ப்யூட்டர்களுக்கு முழுமையான கலால் வரி விலக்கு கொடுத்தது
4. வருமான வரி மீது கல்விக்கான செஸ் விதித்தது
5. வாட் வரியை ஏப்ரல் 01, 2005 முதல் அமல்படுத்தியது
6. சேவை வரியை 10% ஆக உயர்த்தியது
7. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது என பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

2005 -06 பட்ஜெட்

2005 -06 பட்ஜெட்

1. பிராண்டெட் நகைகள் மீது 2% கலால் வரி விதித்தது
2. சரித்திரப் புகழ் சரக்கு மற்றும் சேவை வரி ஏப்ரல் 01, 2010 அமல் ஆகும் என அறிவித்தது இந்த பட்ஜெட்டில் தான் அறிவிக்கப்பட்டது.
3. கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை 10%-த்தில் இருந்து 5%-ஆக குறைத்தது.
4. எல்பிஜி சிலிண்டர்கள் மீதும், ஏழை மக்கள் வாங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் மீதும் சுங்க வரி மற்றும் கலால் வரியை முழுமையாக நீக்கியது.
5. பெண்களுக்கு வருமான வரி உச்ச வரம்பு 1.25 லட்சமாக உயர்த்தியது, மூத்த குடிமக்களுக்கு 1.5 லட்சமாக உயர்த்தியது
6. சம்பளதாரர்களுக்கு கிடைக்கும் கூடுதல் சலுகைகளுக்கு Fringe Benefit Tax என்கிற பெயரில் வரி விதித்தது
7. செல்ஃபோன் வைத்திருப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை ரத்து செய்தது.
8. இன்று பரவலாக பேசப்படும் 80C வருமான வரிப் பிரிவைக் கொண்டு வந்தது என பல முக்கிய மாற்றங்களை இந்த பட்ஜெட்டில் தான் கொண்டு வந்தார்.

2006 -07 பட்ஜெட்

2006 -07 பட்ஜெட்

1. எல்பிஜி சிலிண்டர்களை மத்திய விற்பனை வரிக்குள் கொண்டு வந்தது
2. விவசாயிகளுக்கு 7% வட்டிக்கு குறுகிய கால கடன் அறிவித்தது
3. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை நிர்வகிக்க IRDA என்கிற இன்ஷூரன்ஸ் நெறிமுறை அமைப்புக்கு வழி வகுத்தது.
4. சேவை வரி 10%-த்தில் இருந்து 12%-ஆக அதிகரித்தது
5. வங்கியில் போடப்படும் ஐந்து வருட டெபாசிட்களையும் வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் கொண்டு வந்தது.
6. இணையத்தில் டவுன்லோட் செய்யும் மென்பொருட்களுக்கு முழு கலால் வரி விலக்கு அளித்தது.
7. இறைச்சி, மீன் கோழி, கண்டென்ஸ்ட் பால், ஐஸ் க்ரீம் போன்ற பொருட்களுக்கு கலால் வரி நீக்கியது.
8. இட்லி தோசை மாவுக்கு கலால் வரியை 16%-த்தில் இருந்து 8%-ஆக குறைத்தது என மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

2007 -08 பட்ஜெட்

2007 -08 பட்ஜெட்

1. வருமான வரி வரம்பை 1,10,000 ரூபாயாக அதிகரித்தது.
1.1. பெண்களுக்கான வருமான வரி வரம்பு 1.45 லட்சம் ரூபாயாகவும், மூத்த குடிமக்களுக்கான வரம்பு 1.95 லட்சம் ரூபாயாகவும் அதிகரித்தது
2. வீட்டை அடமானம் வைத்து மாதாமாதம் பணம் பெறும் திட்டம் அறிவித்தது.
3. அனைத்து நிதி சார் முதலீடுகளுக்கும் பான் அட்டையை கட்டாயமாக்கியது.
4. மத்திய விற்பனை வரியை 4%-த்தில் இருந்து 3%-ஆக குறைத்தது.
5. இன்ஸ்டண்ட் உணவுக் கலவைகளுக்கு முழு கலால் வரி விலக்கு அளித்தது
6. மியூச்சுவல் ஃபண்ட் வழியாக வெளிநாடுகளில், இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வழி செய்தது என பல முற்போக்கு விஷயங்களை அறிவித்து இருக்கிறார்.

2008 -09 பட்ஜெட்

2008 -09 பட்ஜெட்

1. நாள் ஒன்றுக்கு தனி நபர் ஒருவர் 25,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் 0.1% வரி பிடித்தம் செய்வார்கள். இந்த சட்டத்தை ரத்து செய்தார்.
2. விவசாயிகளின் 60,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்தது.
3. தனி நபர் வருமான வரி வரம்பை 1.5 லட்சம் ரூபாயாக அதிகரித்தது.
3.1. பெண்களுக்கான வருமான வரி வரம்பு 1.8 லட்சமாகவும், மூத்த குடிமக்களுக்கு 2.25 லட்சமாகவும் அதிகரித்தது
4. வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் அஞ்சலக டெபாசிட் திட்டங்களைக் கொண்டு வந்தது என பட்ஜெட்டில் வளைத்து வளைத்து மக்களுக்கான திட்டங்களாக அறிவித்தார்.

2013 -14 பட்ஜெட்

2013 -14 பட்ஜெட்

1. 5 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் கூடுதல் வரிக் கழிவு கொடுத்தது.
2. 2,000 ரூபாயை விட விலை கூடுதலான மொபைல் ஃபோன்கள் மீதான கலால் வரி 1%-த்தில் இருந்து 6%-ஆக உயர்த்தியது.
3. அனைத்து ஏசி உணவகங்களுக்கும் சேவை வரி, அதாவது உணவு சாப்பிடுபவர்கள் சேவை வரி செலுத்தச் சொன்னது.
4. ஒட்டு மொத்த பணவீக்கம் (WPI) சுமாராக 7%-த்தில் இருந்து 4.2%-ஆக குறைத்தது.
5.இந்தியாவின் முதல் பெண்கள் வங்கி நிறுவப்பட வழி வகுத்தது என நிதி அமைச்சராக தன் இரண்டாவது பணிக்காலத்தைத் தொடங்கினார் ப சிதம்பரம்.

2014 -15 பட்ஜெட்

2014 -15 பட்ஜெட்

இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட் என்பதால், மக்களை நேரடியாக பாதிக்கும் அல்லது மக்களை நேரடியாகச் சென்றடையும் பெரிய அறிவிப்புகள் எதையும் அறிவிக்க முடியவில்லை. ஒரு இடைக்கால பட்ஜெட் என்கிற அளவில் ஒரளவுக்கு நல்ல பட்ஜெட்டாக, ஊடகங்களால் பெரிய அளவில் விமர்சிக்கப்படாத பட்ஜெட்டாகவே இருந்தது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இப்போது வரை அது தான் காங்கிரஸ் கட்சியினர் தாக்கல் செய்த கடைசி பட்ஜெட்டாகவும் இருக்கிறது.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

2004-ம் ஆண்டுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்தின் சட்ட நிபுணர்கள் அணியில் வேலை பார்த்தது, அமலாக்கத் துறையின் வழக்குகளில் வேதாந்தா நிறுவனம் சிக்கிய போது, அமலாக்கத் துறைக்கு எதிராக வாதாடியது, அதன் பின் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒரு இயக்குநராக பதவி வகித்தது, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ப சிதம்பரம் மீது காலணி வீசப்பட்டது, 2011-ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சர்ச்சையில் பேசப்பட்டது என தொடர்ந்து ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு இருக்கும் அனைத்து சர்ச்சைகளும் இருந்து கொண்டே இருக்கின்றன.

ஐ என் எக்ஸ்

ஐ என் எக்ஸ்

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் நம் ப சிதம்பரம் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து, பெரிய வழக்கறிஞராக வலம் வந்து, இந்தியாவின் மிக முக்கிய நிதி அமைச்சகத்துக்கே தலைமை தாங்கி, இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் சென்றவர் இப்போது தன் வழக்கை எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P Chidambaram : Who is p chidambaram what he done for Indians and Indian economy

P Chidambaram: Who is p chidambaram what he done for Indians and Indian economy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X