சென்னை: ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அதற்கு அசோக் லேலண்ட் மட்டும் விதிவிலக்கா என்ன? அதிலும் அதிகளவில் கனரக மற்றும் டிரக்குகள் விற்பனை செய்யும், இந்த நிறுவனம் படு பாதளாத்திற்கு சென்றுவிட்டது என்றே கூறலாம்.
அதிலும் குறிப்பாக அசோக் லேலண்ட் நிறுவனம் விற்பனை மற்றும் ஏற்றுமதியும் சுமார் 70 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது என்று கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் வாரத்திற்கு இரண்டு முறை விடுமுறை என்றும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து, இந்த வாரத்தில் மட்டும் மூன்று நாள் விடுமுறை என அறிவித்துள்ளது. இதுதவிர அடுத்த வாரத்திலும் 2 நாட்கள் விடுமுறை எனவும், ஞாயிற்றுகிழமை தவிர மொத்தம் 5 நாட்கள் விடுமுறை எனவும் அறிவித்துள்ளது.
ஆபத்தில் 10 லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் வேலை.. கதறும் ஆட்டோமொபைல் துறை!

சென்னையை சேர்ந்த ஹிந்துஜா குழுமம்
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த, அசோக் லேலண்ட் நிறுவனம், இந்தியாவிலேயே அதிகளவிலான வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் இருக்கும் நிறுவனமாகும். அதிலும் அசோக் லேலண்ட் சர்வதேச அளவில் பேருந்துகள் உற்பத்தியில் நான்காவது இடத்திலும், இதே டிரக்குகள் உற்பத்தியில் 10 இடத்திலும் உள்ளது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலையா என்றால் நம்ப முடியவில்லை என்று கூறுகிறார்கள் இத்துறையை சார்ந்த அதிகாரிகள்.

வீழ்ச்சியால் கட்டாய விடுமுறை
வர்த்தக வாகனங்களில் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் படு வீழ்ச்சியை கண்டுள்ளது எனவும், ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், வர்த்தக வாகன பிரிவும் மிக நலிவடைந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தது. ஆக நடப்பு வாரத்தில் செப்டம்பர் 6 மற்றும் செப்டம்பர் 7, இதே போல ஞாயிற்றுகிழமை எப்போதும் போல விடுமுறை என்பதால், இந்த வாரத்தில் மட்டும் 3 நாட்கள் விடுமுறை என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடரும் விடுமுறை
இந்த தொடர் விடுமுறையானது இதோடு மட்டும் அல்லாது, அடுத்த வாரத்திலும் தொடரும் என்றும், செப்டம்பர் 10 மற்றும் செப்டம்பர் 11 விடுமுறை எனவும், இதற்கு முன்பாக செப்டம்பர் 8 ஞாயிற்றுகிழமை என்பதால் அன்றும் விடுமுறை என்றும், செப்டம்பர் 9ம் ஏற்கனவே விமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்றும், ஆக மொத்தம் இன்று முதல் செப்டம்பர் 11 வரை தொடர் விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.

விற்பனை படுமோசம்
கனரக மற்றும் டிரக்குகள் விற்பனை 70 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 3,336 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் 11,135 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பேருந்துகள் விற்பனையும் 63 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, வெறும் 4,585 பேருந்துகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டில் 12,420 பேருந்துகளாக வீற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக வாகனங்களும் இப்படிதான்
இதே போல் வர்த்தக வாகன விற்பனையும் 12 சதவிகிதம் குறைந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3,711 வாகனங்களாகவும், இதோடு மொத்த வாகன விற்பனையும் 50 சதவிகிதம் குறைந்து, 8,296 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 16,628 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி & உள்நாட்டு விற்பனை சரிவு
உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியும் கிட்டதட்ட 70 சதவிகிதம் கண்டுள்ளது. டிரக்குகள் குறிப்பாக 3,550 மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் 11,717 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே பேருந்துகள் விற்பனை மட்டும் 25 சதவிகிதம் அதிகரித்து 1,799 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே கடந்தாண்டு 1,441 ஆக விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்த வாகன ஏற்றுமதியும் 47 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 9,231 ஆக குறைந்துள்ளது. இது முன்னர் 17,386 ஆக ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.