டிசம்பர் 1 முதல் சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில் 4 முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் சாமானிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ள நிலையில், அதைச் சீர்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வகுகிறது.
ஒவ்வொரு மாத துவக்கத்தில் மக்களின் தினசரி வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சில மாற்றங்கள் நிகழும் அந்த வகையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடக்க உள்ள முக்கிய மாற்றங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

RTGS நேரம் மாற்றம்
வங்கி பணப் பரிமாற்றத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகப் பணப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் Real Time Gross Settlement System (RTGS) சேவை டிசம்பர் 1 முதல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை என்ற நேரக் கட்டுப்பாடுகளை நீக்கி 24 மணிநேரமும் இயங்கக் கூடிய ஒரு தளமாக மாறியுள்ளது.
இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி அக்டோபர் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்சூரனஸ் ப்ரீமியம்
டிசம்பர் 1 முதல் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்துள்ளவர்கள் தங்களது லைப் இன்சூரன்ஸ்-க்கான ப்ரீமியம் தொகையை 50 சதவீதம் வரையில் குறைத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பாலிசியின் இன்சூரன்ஸ் கவரும் குறையும் என்பது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

எல்பிஜி சிலிண்டர்
பொதுவாக ஒவ்வொரு மாத துவக்கத்திலும் சமையல் சிலிண்டரின் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் மதிப்பு வைத்து மாறுபடும். ஆனால் இந்த மாதம் எவ்விதமான மாற்றமும் இல்லை என இந்தியன் ஆயில் இணையத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி சிலிண்டர் விலை நிலவரம்
விலையில் மாற்றம் இல்லாத காரணத்தால் மானியம் இல்லாத சிலிண்டர் விலை டெல்லியில் 594 ரூபாய், கொல்கத்தாவில் 620.50 ரூபாய், மும்பையில் 594 ரூபாய், சென்னையில் 610 ரூபாய், பெங்களூரில் 597 ரூபாய், ஹைதராபாத்-ல் 646.50 ரூபாய் விலையில் இந்த மாதம் எல்பிஜி சிலிண்டர் விற்பனை செய்யப்படும்

ரயில்கள்
கொரோனா தொற்று பரவுவதைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல வழித்தடத்தில், பல ரயில் பயணங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் டிசம்பர் 1 முதல் பல வழித்தடத்தில் புதிய ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அதிக மக்கள் பயணம் செய்யும் வழித்தடத்தில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. மேலும் புதிய மற்றும் சிறப்பு ரயில்கள் பழைய ரயில் நேரத்திற்கு இயக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் சாமானிய மக்களின் பயணங்கள் எளிதாகும்.