சர்வதேச அளவில் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்தியாவிலும் அதன் தாக்கமானது மிக மோசமானதாகவே இருந்து வருகின்றது எனலாம். சர்வதேச நிறுவனங்கள் பணி நீக்கம் செய்தாலும், அதனால் பாதிக்கப்படுபவர்களில் இந்தியர்களே அதிகம் எனலாம்.
உலகெங்கிலும் உள்ள சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்திய ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வரும் நிலையில், அங்கு ஏற்படும் பிரச்சனைகளிலும் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் பணி நீக்கம்
அந்த வகையில் அமெரிக்க நிறுவனத்தின் இந்திய பிரிவொன்று பணி நீக்கம் நடவடிக்கையினை எடுத்துள்ளது. அது ஃபிடிலிட்டி நேஷனல் இன்பர்மேஷன் சர்வீஸ்-ன் இந்திய பிரிவு தான். அமெரிக்கா நிறுவனமான இது மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

400 பேருக்கு பிங்க் கடிதம்
இந்த பணி நீக்க நடவடிக்கையில் புனேவில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பிங்க் நிற சீட்டினை வழங்கியுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இது குறித்து ஒரு ஊழியர் BT-க்கு அளித்த பேட்டியில், எனக்கு பணி நீக்க கடிதமானது அனுப்பப்பட்டது. அவர்கள் என்னை டிசம்பர் 30 வரையில் வீட்டிலேயே இருக்க சொன்னார்கள். அது தான் எனது கடைசி தேதியாகும். என்னை வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

பெங்களூர் & குருகிராம்
இதேபோன்ற பணி நீக்க கடிதமானது 400 பேருக்கும் மேலாக இதுவரையில் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கை இனியும் தொடரலம் என்ற அச்சமும் ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இந்த நிறுவனத்திற்கான அலுவலகங்கள் பெங்களூர் மற்றும் குருகிராமிலும் உள்ளது. ஆக இங்குள்ள ஊழியர்களும் இந்த கடினமான நடவடிக்கையில் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

இழப்பீடு கிடைக்கும்?
எனினும் இந்த அமெரிக்க நிறுவனம் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு சரியான இழப்பீடு பெற உங்களுக்கு உரிமை உண்டு. இது ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய 5 நாட்களுக்குள் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நிதி நிலைமை சரியில்லை
தற்போது நிறுவனம் மோசமான நிதி நிலையை எதிர்கொண்டுள்ளது. ஃபின் டெக் நிறுவனத்தின் பங்குகள் நடப்பு ஆண்டில் இதுவரையில் 45% சரிவினைக் கண்டுள்ளது. இதே எஸ் & பி 17% தான் சரிவினைக் கண்டுள்ளது. அதனை காட்டிலும் இது மிக அதிகம் என சுட்டிக் காட்டியுள்ள நிறுவனம், நிதி நிலை சரியில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

செலவு குறைப்பு நடவடிக்கை
இது இப்படி எனில் மறுபுறம், நிலவி வரும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்டெபானி பெர்ரிஸ், முதலீட்டாளார்களை திருப்திபடுத்த கடுமையான செலவு குறைப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 500 மில்லியன் டாலர் செலவினை சேமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவும் பணி நீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.