கொரோனாவால் இந்திய பொருளாதாரம் சரிந்தது மட்டும் அல்லாமல் நாட்டு மக்களின் வாழ்வியலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சாமானிய மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்த காரணத்தால் குடும்பத்தை நடத்துவது கூடக் கடினமாகியுள்ளது.
இந்த வகையில் இந்தக் கொரோனா காலத்தில் இந்தியாவில் கிட்டதட்ட 50 சதவீத மக்கள் கடன் வாங்கிக் குடும்பத்திற்கான அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கூலித் தொழிலாளர்கள் என்றால் மிகையில், காரணம் இந்தக் கொரோனா காலகட்டத்தில் அனைத்து வர்த்தகத் துறையும் முடங்கிய காரணத்தால் வேலைவாய்ப்புகளுக்கு வழி இல்லாமல் தவித்துள்ளனர்.
இந்திய மக்களின் இந்த நிலை குறித்து ஹோம் கிரெடிட் இந்தியா ஒரு முக்கியமான ஆய்வு செய்து, பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் அடங்கிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

மிடில் கிளாஸ்
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்பின் காரணமாகப் பல கோடி மக்கள் வேலைவாய்ப்பையும், சம்பள குறைப்பையும் எதிர்கொண்டனர். இதனால் லேவர் மிடில் கிளாஸ் மக்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதனால் குடும்பங்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யவே கடன் பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகச் சர்வதேச நுகர்வோர் நிதியியல் அமைப்பான ஹோம் கிரெடிட் இந்தியா தெரிவித்துள்ளது.

46 சதவீத மக்கள்
இந்தக் கொரோனா காலத்தில் குடும்பத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் காரணத்திற்காக மட்டும் சுமார் 46 சதவீத மக்கள் கடன் பெற்றுள்ளனர் என்று ஹோம் கிரெடிட் இந்தியா அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
இந்த ஆய்வில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் 7 நகரங்களில் இருந்து கலந்துகொண்டு உள்ளனர்.

கடன்
இந்த ஆய்வில் கலந்துகொண்ட மக்களில் 27 சதவீதம் பேர் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த மீண்டும் கடன் பெற்றுள்ளனர். மேலும் வேலை இழப்பு, சம்பள குறைப்பு, சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஆகியவற்றின் காரணமாகக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்திற்காகத் தான் 46 சதவீதம் கடன் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பணிநீக்கம்
மேலும் இந்த ஆய்வில் கலந்துகொண்ட 14 சதவீத பேர் வேலையை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் லாக்டவுன் காலத்தில் பணிநீக்கம் அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உறவு மற்றும் நண்பர்கள்
இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் கடன் வாங்க வங்கிகளை விடவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாங்குவதை விரும்பியுள்ளனர். இதனால் கடனை விருப்பத்தின் பெயரில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.