முகேஷ் அம்பானி வழிநடத்திக் கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, இந்திய டெலிகாம் சந்தையில் நுழைந்ததில் இருந்து, இந்திய டெலிகாம் துறையில் நிலவும் போட்டி பல மடங்கு அதிகரித்துவிட்டது.
2015 - 16 கால கட்டத்தில் எல்லாம், ஒரு ஜிபி டேட்டாவுக்கு சுமாராக 150 ரூபாய் செலுத்திக் கொண்டு இருந்த நாம், ஜியோ வருகைக்குப் பின், கிட்டத்தட்ட அதே விலைக்கு, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம்.
ஜியோவின் இந்த மலிவு விலை திட்டத்தால், போட்டியாளர்களான பார்தி ஏர்டெல், பிர்லா குழுமத்தின் வொடாபோன் ஐடியா போன்ற கம்பெனிகள் எல்லாம் பலத்த அடி வாங்கத் தொடங்கின. புதிய வாடிக்கையாளர்களைப் பிடிப்பதும், வாடிக்கையாளர்களை தங்கள் நெட்வொர்க்குகளில் தக்க வைத்துக் கொள்வதும் சவால் நிறைந்த வேலையானது.

ஜியோ தான் நம்பர் 1
ஜூன் 2020 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 1,140.71 மில்லியன் (114.07 கோடி) பேர் வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களாக இருக்கிறார்கள். அதில் 34.82 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் (39.72 கோடி பேர்) ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். ஆக அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட கம்பெனியாக ஜியோ முதலிடத்தில் இருக்கிறது.

ஆக்டிவ்வாக இல்லாத வாடிக்கையாளர்கள் (inactive users)
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் மொத்த 397 மில்லியன் (39.7 கோடி) வாடிக்கையாளர்களில், 87 மில்லியன் (8.7 கோடி) வாடிக்கையாளர்கள், ஆக்டிவ்வாக இல்லை என்கிறது கோட்டக் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டிஸ் (Kotak Institutional Equities) என்கிற கம்பெனியின் அறிக்கை.

தரவுகள் - ஆக்டிவ் மொபைல் யூசர் பேஸ்
ஜூன் 2020 மாதத்தில், ஏர்டெல் கம்பெனியில் 3.7 மில்லியன் ஆக்டிவ் மொபைல் யூசர்கள் இணைந்து இருக்கிறார்களாம். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, 2.1 மில்லியன் ஆக்டிவ் மொபைல் யூசர்களை இழந்து இருக்கிறார்களாம். வொடாபோன் ஐடியாவும் 3.7 மில்லியன் ஆக்டிவ் மொபைல் யூசர்களை இழந்து இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் வலை தளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏர்டெல்லுக்கு 10 லட்சம் வாடிக்கையாளர்கள்
ஆக்டிவ் மொபைல் யூசர்கள், பார்தி ஏர்டெல் கம்பெனிக்கு அதிகரித்து இருப்பதால், ஏர்டெல் கம்பெனியின் மொத்த ஆக்டிவ் மொபைல் யூசர்களின் எண்ணிக்கை 307 மில்லியனில் இருந்து 311 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் ஆக்டிவ் மொபைல் யூசர்கள் எண்ணிக்கை 313 மில்லியனில் இருந்து 310 மில்லியனாக சரிந்து இருக்கிறது. ஆக, ஆக்டிவ் மொபைல் யூசர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஏர்டெல், ஜியோவை விட 10 லட்சம் வாடிக்கையாளர்கள் அதிகமாக வைத்திருக்கிறது என எகனாமிக் டைம்ஸ் சொல்கிறது.

வி எல் ஆர் கணக்கு
ஒரு டெலிகாம் கம்பெனியின் மொத்த மொபைல் எண்களில், எத்தனை எண்கள் ஆக்டிவாக இருக்கிறது என்பதை, இந்த VLR (Visitor Location Register) மூலம் தெரிந்து கொள்ளலாம். வெறுமனே ஒரு டெலிகாம் சேவை வழங்கும் கம்பெனியில், அதிக வாடிக்கையாளர்கள் இருப்பது மட்டும் முக்கியமல்ல, மொபைல் எண்கள் ஆக்டிவ்வாகவும் இருக்க வேண்டும்.

ஒட்டு மொத்த இந்தியாவின் கணக்கு
நம் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 114.07 கோடி (1140.71 மில்லியன்) பேர் வொயர் லெஸ் சப்ஸ்கிரைபர்களாக இருக்கிறார்கள். அதில் 95.8 கோடி (958 மில்லியன்) பேர் தான் ஆக்டிவ் மொபைல் யூசர்களாக இருக்கிறார்கள். அதாவது மொத்த சப்ஸ்கிரைபர்களில் 83.98 சதவிகிதம் பேர் தான் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்கிற டிராய் (TRAI) அறிக்கை.

பார்தி ஏர்டெல்-க்கு 98.14 % - முதலிடம்
சுனில் மித்தல் நிர்வகிக்கும் பார்தி ஏர்டெல் கம்பெனியின் மொத்த வாடிக்கையாளர்களில் 98.14 % பேர் ஆக்டிவ் யூசர்களாக இருக்கிறார்கள் என்கிறது டிராய் (TRAI) அறிக்கை. வொடாபோன் ஐடியாவின் மொத்த வாடிக்கையாளர்களில் 89.49 % மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்களில் 78.15 % வாடிக்கையாளர்கள் மட்டுமே ஆக்டிவ் மொபைல் யூசர்களாக இருப்பதாகச் சொல்கிறது டிராய்.