இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி கடந்த 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி வைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு சேவையான 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதால் அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 5ஜி சேவைக்கான ஏலம் எடுத்த ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி சேவையை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜியோவின் 5ஜி சேவை
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏர்டெல்லின் 5ஜி சேவை
அதேபோல் சென்னை உள்பட 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி ஆகிய 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

சிம்மை மாற்ற வேண்டுமா?
5ஜி சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்மை மாற்றவேண்டிய அவசியமில்லை என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. 5ஜி சப்போர்ட் செய்யும் மொபைல் போனை ஒரு வாடிக்கையாளர் வைத்திருந்தாலே போதும் என்றும் சிம்கார்டை மாற்றாமல் 5ஜி சேவை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் இல்லை
மேலும் 5ஜி சேவைக்காக தனியாக எந்த விதமான கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. 4ஜி சேவையை விட 5ஜி சேவை 30 முதல் 40 மடங்கு வரை இன்டர்நெட் வேகம் அதிகம் இருக்கும் என்று தெரிவித்துள்ள ஏர்டெல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய 5ஜி சிம்
மேலும் புதிதாக 5ஜி சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் செயலியின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளதை அடுத்து 5ஜி சப்போர்ட் செய்யும் மொபைல்போன் வைத்துள்ளவர்கள் அதிவேக இன்டர்நெட்டை தற்போது பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.