இந்தியாவில் பெரும் அளவிற்குப் புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மோடி தலைமையிலான அரசு பயன்பாட்டிற்குத் தடைவிதித்து மொத்தத்தையும் செல்லா ரூபாய் நோட்டுகளாய் அக்கி இருந்தது. இதற்கு மாற்றாக 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 2000 ரூபாய்க்குச் சில்லறை தேடி இன்று வரையில் நாம் அலைந்துகொண்டு இருக்கும் நிலையில் புதிய செய்தி கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் கருப்புப் பணம் பதுக்குவோர் அனைவரும் அதிகளவில் 2000 ரூபாய் நோட்டுகளைத் தான் பதுக்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2000 ரூபாய் நோட்டுத் தற்போது பதுக்கும் பொருளாக மாறிவிட்டது.

சோதனை
கடந்த 3 நிதியாண்டில் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்க துறை போன்ற பல அரசு அமைப்புகள் நடத்திய அதிரடி சோதனைகளில் சிக்கிய பணத்தில் அதிகமான தொகை 2000 ரூபாய் நோட்டு தான்.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017-18ஆம் ஆண்டு நடந்த சோதனையில் கிடைத்த மொத்த பணத்தில் 67.91 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் தான். அதேபோல் 2018-19ஆம் நிதியாண்டில் இதன் அளவு 65.93 சதவீதம், நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 43.22 சதவீதம்.

50 சதவீதம்
2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்ட பின் வருமான வரித்துறை மற்றும் பிற அரசு அமைப்புகளின் சோதனையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 50 சதவீதம் 2000 ரூபாய் நோட்டு தான் என்று நிர்மலா சீதாராமன் ராஜிய சபாவிற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பதுக்கும் பொருள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால் கருப்பு பண முதலைகளுக்கும், மோசடியாவார்களுக்கும் இந்த 2000 ரூபாய் பெரிய அளவில் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

ரூபாய்
ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் கண்காணிக்கப்படும் என மத்திய அரசு பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் போதும் இவ்வளவும் பணம் எப்படி ஒரே இடத்தில் சேரும் என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது.