அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான் லாக்டவுன் காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்ற காரணத்தால் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2020ஆம் ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 75 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த வளர்ச்சியைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெப் பிசோஸ் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து, வளர்ச்சி அடைந்துள்ள நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு லாபம் அடைந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அதிரடிகள் ஒருபக்கம் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், ஜோ பிடன் தான் அடுத்த அமெரிக்க அதிபர் எனக் கிட்டதட்ட முடிவான காரணத்தால் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் எவ்விதமான பயமும் இன்றி முதலீடு செய்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் ஜெப் பிசோஸ் தனது பங்குகளை விற்பனை செய்தது முதலீட்டாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெப் பிசோஸ்
அமேசான் தலைவர் ஜெப் பிசோஸ் ஏன் பங்குகளை விற்பனை செய்தார் என்று விளக்கம் அளிக்காத நிலையிலும் அமேசான் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகச் சந்தையில் 3.03 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தையின் வியாழக்கிழமை வர்த்தகத்தில் நாஸ்டாக் குறியீட்டின் கீழ் அமேசான் பங்குகள் அதிகப்படியாக 3.15 சதவீதம் வளர்ச்சி அடைந்து 3,366.80 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

முதலீடுகள்
பொதுவாக ஜெப் பிசோஸ் பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் முதலீட்டை தனது ப்ளூ ஆர்ஜின் ஸ்பேஸ் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வார். இதனால் ஜெப் பிசோஸ் பங்கு விற்பனை குறித்து விளக்கம் கொடுக்காவிட்டாலும் அமேசான் முதலீட்டாளர்கள் எவ்விதமான அச்சமுமின்றித் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்ற

பெரிய தலைகள்
பெரும் வர்த்தகர்கள் மற்றும் பணக்காரர்கள் எப்போதும் தங்களது முதலீட்டை ஓரே இடத்தில் முதலீடு செய்யமாட்டார்கள். இதேபோல் ஜெப் பிசோஸ் தனது முதலீட்டை ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் மட்டுமே முதலீடு செய்யாமல் பல துறை சார்ந்த வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார்.

10 பில்லியன் டாலர்
இதன் படி 2020 மட்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ல் வெறும் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை மட்டுமே விற்பனை செய்த ஜெப் பிசோஸ் 2020ல் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து பணமாக்கியுள்ளார்.

பருவநிலை மாற்றம்
2020ல் துவக்கத்தில் ஜெப் பிசோஸ் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கவும் அதைப் பாதுகாக்கும் திட்டத்திற்குச் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை ஒதுக்கியுள்ளார்.

எலான் மஸ்க்
ஜெப் பிசோஸ், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக ப்ளூ ஆர்ஜின் என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிறுவனம் மக்களுக்கு விண்வெளி சுற்றுலா செல்லும் சேவை அளிப்பதற்காக ராக்கெட் உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் ப்ளூ ஆர்ஜின் 13வது சோதனை திட்டத்தைச் செயல்படுத்த உள்ளார். 2020 துவக்கத்தில் இந்நிறுவனத்தில் புதிதாக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.