ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்தியா முழுவதும் தனது தளத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தக் கட்டமைப்பை அமேசான் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் மூன்றாம் தரப்பு வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் நேரடி-நுகர்வோர் பிராண்டுகளுக்கு அதன் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க்கை பயன்படுத்திப் புதிய சேவையாக அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தில் அதிகளவிலான எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதற்காக அமேசான், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் புதிய இணைப்பை உருவாக்கியுள்ளது.

TVS மோட்டார் நிறுவனம்
அமேசான் இந்தியா மற்றும் TVS மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் மொபிலிட்டி, மின்சார உள்கட்டமைப்பு மற்றும் இணைக்கப்பட்ட சேவைகள் (connected services) ஆகியவற்றை வலுப்படுத்தப் புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது.

அமேசான் இந்தியா
இந்த இணைப்பின் ஒரு பகுதியாக, அமேசான் நிறுவனம் இந்தியாவில் செய்யும் லாஸ்ட் மைல் டெலிவரிக்கு தேவையான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் பெற்றுப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆய்வு
இதோடு பிற அமேசான் வர்த்தகக் குழுக்களின் நெட்வொர்க் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பணிகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்த ஏதுவான பகுதிகளை இரு நிறுவனங்களும் இணைந்து ஆய்வு செய்து போதுமான வாகனங்களைப் பயன்பாட்டில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

பைலட் சோதனை
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன் இதைச் சரியான முறையில் செய்ய இரு நிறுவனங்கள் சோதிக்க முடிவு செய்துள்ளது. இரு நிறுவனங்களும் டிவிஎஸ் மோட்டார்ஸின் எலக்ட்ரிக் வெஹிக்கல் சொல்யூஷன்-களை இந்தியா முழுவதும் அதன் பார்ட்னர் பேஸ் மற்றும் டெலிவரி அசோசியேட்ஸ் மூலம் பைலட் முறையில் சோதனை செய்ய உள்ளது.

10,000 எலக்ட்ரிக் வாகனங்கள்
2020 ஆம் ஆண்டில் அமேசான் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களை அதன் டெலிவரி வாகனங்களின் பட்டியலில் சேர்க்கும் என்று அறிவித்தது. இதேபோல் அமேசானின் உலகளாவிய வர்த்தகத்தில் 2030 ஆம் ஆண்டிற்குள் 100000 எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தத் திட்டம் தீட்டியுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாத இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த அமேசான் இந்தியா TVS மோட்டார்ஸ்-ன் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை டெலிவரிக்குப் பயன்படுத்த உள்ளது.

நெட் ஜீரோ கார்பன் இலக்கு
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடனான கூட்டணி அமேசான் இந்தியாவின் ஒரு முக்கியமான படியாகப் பார்க்கப்படுகிறது, இந்தியாவில் அமேசானின் இ-மொபிலிட்டி பிரிவின் முன்னேற்றம் என்பதைத் தாண்டி, அமேசான் நெட் ஜீரோ கார்பன் இலக்குகளை அடைவதற்கு அடிப்படையாக அமையும்.

டிவிஎஸ் மோட்டார் திட்டம்
இதேவேளையில் டிவிஎஸ் மோட்டார் அடுத்த 2 வருடத்தில் பல எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இந்தியா மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்துடனான கூட்டணி மூலம் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக விற்பனை செய்ய முடியும்.