இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருந்து வரும் ஐஆர்சிடிசி (IRCTC) மூலம், ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இன்று மோனோபாலியாக செயல்பட்டு வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஐஆர்சிடிசி-யும் ஒன்று.
இப்படி தனிக் காட்டு ராஜவாக வலம் வந்து கொண்டு இருக்கும் ஐஆர்சிடிசி பங்கு பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.
இந்த நிறுவனம் பங்கு சந்தைக்குள் நுழையும் முன்பே சந்தையில் பட்டையை கிளப்பிய ஐஆர்சிடிசி, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அந்த நாளை அவ்வளவு எளிதில் முதலீட்டாளர்கள் மறந்திருக்க முடியாது.
யார் கண்ணு பட்டுச்சோ.. மொத்தமும் போச்சு..!! #IRCTC

முதல் நாள் பட்டியல்
கடந்த அக்டோபர் 2019ம் மாதத்தில் இப்பங்கானது பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே 101% பிரீமிய விலையில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் போது போட்டி போட்டுக் கொண்டு சகட்டு மேனிக்கு சிறு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் என அனைவரும் வாங்கி போட்டனர்.

இழப்பு ஏற்படலாம்
இந்த நிலையில் ஐஆர்சிடிசி-யின் பங்குகள் நடப்பு ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக IIFL தரகு நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இதற்காக இந்த நிறுவனம் கூறிய காரணம், அரசிடம் உள்ள ஐஆர்சிடிசி-யின் பங்கினை விற்றால், இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளது.

இலக்கு விலை
அதன் 12 மாத இலக்கு விலையானது 745 ரூபாய் என்றும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த பங்கின் விலையானது என். எஸ்.இ-யில் 1.61% குறைந்து, 866.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்சம் இதுவரையில் 881 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 862 ரூபாயாகும்.
இதே பி .எஸ்.இ-யில் 1.54% குறைந்து, 866.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்சம் இதுவரையில் 880.85 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 862.55 ரூபாயாகும்.இதே இதன் 52 வார உச்ச விலை 1278.60 ரூபாயாகும்.இதன் 52 வார குறைந்தபட்ச விலை 283.47 ரூபாயாகும்.

பிரச்சனைகள்
கடந்த ஆண்டு அக்டோபரில் ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் பதிவு செய்யப்படும் டிக்கெட் முன்பதிவு தளத்தில் கிடைக்கும் வருமானத்தின் 50%ம் இந்தியன் ரயில்வேயுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. எனினும் பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதே போல தேஜஸ் ரயில்களுக்கு செலுத்த வேண்டிய நிலையான கட்டணங்களும் அதிகரித்தன. இதற்கிடையில் இது குறித்து ஐஆர்சிடிசி மேல் முறையீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணைப்பா?
இவற்றோடு ஐஆர்சிடிசியுடன் ரெயில்டெல் நிறுவனமும் இணைக்கப்பட வேண்டும் என்றும் , அது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி பற்பல சவால்களுக்கும் மத்தியில் தான் ஐஐஎஃப்எல் நிறுவனம் இப்படி ஒரு கணிப்பினை கொடுத்துள்ளது.