உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் பணக்காரர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் எந்த அளவிற்கு வித்தியாசம் இருக்கிறதோ அதேபோல் ஒரு நிறுவனத்தின் லாப அளவீடும், அமெரிக்க மக்களின் சராசரி வருமானத்திலும் பெரிய வித்தியாசம் உள்ளது.
சொல்லப்போனால் ஒரு வாரம் முழுக்கச் சம்பாதிப்பதைக் காட்டிலும் பெரிய நிறுவனங்கள் ஒரு நொடியில் அதிகமாகச் சம்பாதிக்கிறது. இந்த லாபம் அளவீடுகள் ஊழியர்களின் சம்பளத்தில் எதிரொலிக்கவில்லை என்பது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் மாற்றத்தையும், தடுமாற்றமும் அமெரிக்காவில் உருவாகியுள்ளது.
ஒரு நொடிக்கு அதிகம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் எது..?

அமெரிக்கா
அமெரிக்காவில் சந்தை மதிப்பீடு அளவில் முதல் இடத்தில் இருக்கும் ஆப்பிள் ஒரு நொடிக்கு 1,820 டாலர் அளவிலான தொகையை லாபமாகச் சம்பாதிக்கிறது. இத இந்திய ரூபாய் மதிப்பில் 1.48 லட்சம் ரூபாயாகும். இதன் மூலம் உலகிலேயே மிகவும் லாபகரமான நிறுவனமாக ஆப்பிள் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான நிறுவனமாக மாறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் ஒரு நொடிக்கு 1820 டாலர் சம்பாதிக்கும் நிலையில் ஒரு நாளுக்குச் சுமார் 157 மில்லியன் டாலர் அதாவது 1,282 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறது என்று ஒரு முக்கியமான நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

Tipalti ஆய்வு
ஆப்பிள் நிறுவனத்தின் சக டெக் சேவை நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளின் தாய் நிறுவனமா ஆல்பாபெட், வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே ஆகியவையும் ஒவ்வொரு நொடிக்கும் ஆயிரம் டாலர்களுக்கு மேல் லாபம் பெறுகின்றன, இதன் மூலம் ஒரு நாளுக்கு 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறது என Tipalti என்னும் கணக்கியல் மென்பொருள் நிதி தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி கூறுகிறது.

அமெரிக்கா சராசரி தொழிலாளர்
அமெரிக்காவில் சராசரியாக ஒரு தொழிலாளர் தனது வாழ்நாளில் 1.7 மில்லியன் டாலர் சம்பாதிப்பார் என்று கணிக்கப்படும் நிலையில் இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் ஒரு மணிநேரம் சம்பாதிப்பதைக் காட்டிலும் குறைவாகவே சம்பாதிக்கிறார் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

வித்தியாசம்
அமெரிக்காவில் ஒரு ஊழியரின் சராசரி ஆண்டுச் சம்பளம் 74,738 டாலர் அல்லது வாரம் 1,433.33 டாலரும் ஆகும், அதாவது சராசரி அமெரிக்கத் தொழிலாளி ஒரு வாரம் முழுவதும் சம்பாதிக்கும் சராசரியை விட ஆப்பிள் ஒரு நொடிக்கு 387 டாலர் சுமார் 27.01 சதவீதம் அதிகமாகச் சம்பாதிக்கிறது.

மைக்ரோசாப்ட், பெர்க்ஷயர் ஹாத்வே
ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்த நிலையில் இரண்டாவது இடத்தில் இந்தியரான சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் ஒரு நொடிக்கு சுமார் 1,404 டாலர் உடனும், பெர்க்ஷயர் ஹாத்வே ஒரு நொடிக்கு 1,348 டாலர் உடனும் சம்பாதித்து டாப் 3 இடங்களைப் பிடித்துள்ளது.

ஆல்பாபெட், மெட்டா
இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இந்தியரும், மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவருமான சுந்தர் பிச்சை தலைமை விகிக்கும் ஆல்பாபெட் ஒரு நொடிக்கு 1,277 டாலரும், மார்க் ஜூக்கர்பெர்க் தலைமை வகிக்கும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் ஒரு நொடிக்கு 924 டாலரும் லாபமாகப் பெற்று வருகிறது.