இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ இன்றைய வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சி அடைந்து, இதன் காரணமாக இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார்1 டிரில்லியன் டாலர் அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் மூலம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அளவு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

1.01 லட்சம் கோடி ரூபாய்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் தனது புதிய உச்ச விலையான 3,459.90 ரூபாயை அடைந்தது மூலம், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு சுமார் 1.01 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உயர்வை அடைந்துள்ளது.

எலைட் கிளப்
இந்தப் புதிய உயர்வினால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் 4வது நிறுவனமாகப் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை பெற்று எலைட் கிளப்-ல் சேர்ந்துள்ளது. இதற்கு முன் மாருதி சுசூகி, டாடா மோட்டார், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் 1 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் தொடர் உயர்வு
இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்ட போதிலும், பஜாஜ் ஆட்டோ அதிகளவிலான விற்பனை செய்து புதிதாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
இதோடு இந்நிறுவனத்தின் ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது மூலம் வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற இனி வரும் காலகட்டத்தில் வாய்ப்புகள் உள்ளது.

பஜாஜ் விற்பனை உயர்வு
நாடு முழுவதும் விநியோகம், உற்பத்தி மற்றும் வர்த்தகச் சந்தை மிதமான வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், இரு சக்கர வாகன விற்பனை அதிகமாக உள்ளது. இதன் வாயிலாக இந்நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது. குறிப்பாக இந்திய கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பஜாஜ் அதிகளவிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

புதிய தொழிற்சாலை
மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உருவாகி வரும் புதிய வர்த்தக வளர்ச்சியை ஈடு கொடுக்கும் வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தின் சக்கன் பகுதியில் சுமார் 650 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலை அமைக்கத் தயாராகியுள்ளது.

ப்ரீமியம் இருசக்கர வாகனங்கள்
இந்தப் புதிய தொழிற்சாலை மூலம் பஜாஜ் தனது ப்ரீமியம் இருசக்கர வாகனங்களான கேடிஎம், Husqvarna மற்றும் Triumph பிராண்ட் பைக்குக்களை பிரத்தியேகமாகத் தயாரித்துச் சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தத் தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்களையும் பஜாஜ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.