இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே முக்கிய விவாத பொருளாக இருப்பது கொரோனா வைரஸ் மற்றும் யெஸ் வங்கி தான். இவ்விரண்டுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் இன்று நாட்டின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு இருப்பதும் இவ்விரண்டும் தான். யெஸ் வங்கியைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா யெஸ் வங்கியில் சுமார் 7,250 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்து இவ்வங்கியின் பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வரையில் சில வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட புது வங்கியான பந்தன் வங்கி, யெஸ் வங்கியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஊழியருக்கு கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்பு.. அலுவலகத்தை காலி செய்த இன்ஃபோசிஸ்!

10,650 கோடி ரூபாய்
பல்வேறு மோசடிகள் மத்தியில் சிக்கிக்கொண்டு இருக்கும் யெஸ் வங்கியை மீட்டு எடுக்கும் முயற்சியில் தற்போது ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கி முக்கியமான பணிகளைக் கையில் எடுத்துள்ளது. இவ்வங்கியை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில் தற்போது ரிசர்வ் வங்கி சுமார் 10,650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தான் எஸ்பிஐ, எல்ஐசி ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்வதாக அறிவித்த நிலையில், எல்ஐசி கடைசியில் முதலீடு செய்த தயங்குவதாக அறிவித்துள்ளது.

பந்தன் வங்கி
இந்நிலையில் பந்தன் வங்கி, யெஸ் வங்கியின் 8 ரூபாய் மதிப்புடைய பங்குகளை வெறும் 2 ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி பங்குகளைச் சுமார் 300 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முதலீட்டில் 75 சதவீத தொகையை அடுத்த 3 வருடத்திற்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடு
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி யெஸ் வங்கியில் எஸ்பிஐ வங்கி 7,250 கோடி ரூபாயும், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி தலா 1000 கோடி ரூபாய், ஆக்சிஸ் வங்கி 600 கோடி ரூபாயும், கோட்டாக் மஹிந்திரா வங்கி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

4 வருட வங்கி
பந்தன் வங்கி துவங்கி வெறும் 4 வருடங்கள் மட்டுமே ஆன நிலையில் இந்தியாவில் சுமார் 34 மாநிலங்களில் 4,288 வங்கி கிளைகள் உடன் வர்த்தகம் செய்து வருகிறது. இவ்வங்கியில் தற்போது 2 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தியக் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு வங்கி சேவைகளைக் கொண்டு சேர்க்கும் முக்கியமான பணியில் பந்தன் வங்கி ஈடுபட்டு உள்ளது.
2001ஆம் ஒரு NGOஆக உருவான பந்தன் வங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குச் சிறுதொழில் துவங்கச் சிறிய அளவிலான கடனை வழங்கி வந்தது. ஏப்ரல் 2014இல் உலகளாவிய வங்கி சேவை அளிக்க உரிமம் பெற்ற நிலையில் இந்தியா முழுவதும் முழுமையான வங்கி சேவையை அளித்துள்ளது.