மகாராஷ்டிராவில் இருக்கும் புனே நகரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின், 2020 - 21 நிதி ஆண்டுக்கான, இரண்டாவது காலாண்டு (செப்டம்பர் 2020) முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி 130.44 கோடி ரூபாயை கன்சாலிடேடட் நிகர லாபமாகக் காட்டி இருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் இதே பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, 115.05 கோடி ரூபாயை கன்சாலிடேடட் நிகர லாபமாகக் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு தான் இந்த வங்கியின் புரோமோட்டராக இருக்கிறது. ஒட்டு மொத்த பங்குகளில் 93.3 சதவிகித பங்குகளை செப்டம்பர் 2020 நிலவரப்படி, மத்திய அரசு தான் வைத்திருக்கிறது என மும்பை பங்குச் சந்தையின் வலைதளம் சொல்கிறது.
இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வின் வருமானம் 3,319 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 3,296 கோடி ரூபாயாக இருந்ததாம்.
இதை எல்லாம் விட, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் இந்த காலாண்டு முடிவில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது தான் செயல்படாத கடன் விகிதம்.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் தோராய செயல்படாத கடன் (Gross Non Performing Asset), கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 16.86 சதவிகிதமாக இருந்தது. இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் வங்கியின் செயல்படாத கடன் 8.81 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது.
ரூபாயில் பார்த்தால், கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 15,408 கோடி ரூபாயாக இருந்த ஜி என் பி ஏ, இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 9,105 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது.
ஆனால் மோசமான கடன்களுக்கான ஒதுக்கீடு மற்றும் கன்டிஜன்சி (Provision for bad loans and Contingencies) கடந்த செப்டம்பர் 2019-ல் 293 கோடி ரூபாயாக இருந்தது, இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 420 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.