இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும், பணக்காரர்களின் சொத்து மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரு முன்னணி பணக்காரரின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது, அதற்குக் காரணம் அதே பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் என்பது தற்போதைய செய்தி.
பிர்லா குழுமம் பல வர்த்தகத்தில் சிறந்து விளங்கினாலும் டெலிகாம் துறையில் இந்நிறுவனம் தொடர்ந்து வெற்றி நிலைநாட்ட முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் ஜியோவின் மாபெரும் வெற்றி தான்.
ஐடியா-வின் தோல்வியால் பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்துள்ளது.

குமார் மங்களம் பிர்லா
ஜியோ அறிமுகத்திற்குப் பின் இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்ட போட்டியைச் சமாளிக்க ஐடியா நிறுவனம் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வோடபோன் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. ஆயினும் போதிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடியாத நிலைக்கு ஐடியா- வோடபோன் கூட்டணி தள்ளப்பட்டது.
இதில் தோல்வியில் தான் குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்பு தொடர்ந்து சரிய துவங்கியது.

2017 முதல்..
ஜியோ 2016இல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாள் முதலே இந்நிறுவனத்தின் வெற்றித் துவங்கியது. எதிரொலியாக 2017ஆம் ஆண்டில் இருந்து குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்புச் சரிந்தது. இதே காலத்தில் தான் ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களின் வர்த்தகச் சரிவும், தொடர் நஷ்டத்தையும் பதிவு செய்யத் துவங்கியது.

3 பில்லியன் டாலர்
இந்நிலையில் கடந்த 2 வருடங்களில் மட்டும் குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்பு 9.1 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இந்தச் செய்தி இந்திய பணக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

2 நிறுவனங்கள்
ஜியோவின் அறிமுகத்திற்குப் பின் இந்தியாவில் 2 டெலிகாம் நிறுவனங்கள் திவாலாகியுள்ளது. மற்ற எல்லா நிறுவனங்களும் பெரிய அளவிலான வருமானத்தை இழந்து உள்ளனர். இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் படி இனி மொபைல் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா-விற்கு மத்திய அரசு குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்யப்போவதாகத் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக டெலிகாம் நிறுவனப் பங்குகள் சரிவிலிருந்து நிச்சயம் மீட்டு வரும் எனத் திட்டமிடப்பட்டு உள்ளதாக ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.

யாருக்கு லாபம்..?
மோடி அரசின் திட்டத்தின் படி, குறைந்தபட்ச கட்டணங்கள் நிர்ணயம் செய்வது டெலிகாம் நிறுவனங்களுக்கு நிலையான வருமானத்தைப் பெற்று தரக்கூடியவை தான். ஆனால் அந்தக் கட்டணம் தற்போது இருக்கும் அளவுகளை விடவும் அதிகமாக இருந்தால் மக்கள் தான் அதிகக் கட்டணத்தைக் கொடுத்து மொபைல் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை வரும் இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
என்ன நடக்கப் போகிறது..?!!