டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பி.பி.சி.எல்லின், பங்குகளை வெளி நிறுவனங்களுக்கு விற்கும் திட்டம் ஏற்கனவே அறிந்த ஒரு விஷயம் தான்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருவாயை அதிகரிக்க, மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டிலேயே 2.1 லட்சம் கோடி இலக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்க, கேபினெட் அமைச்சகமும் சமீபத்தில் அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றே கடைசி நாள்
இதற்கிடையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்க மும்முரமாக செயல்பட்டு வருகின்றது எனலாம். ஏனெனில் ஏற்கனவே இதற்கு மார்ச் 2021க்குள் தனியார்மயமாக்கும் வேலைகள் நிறைவடையலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை உண்மையாக்கும் விதமாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை ஏலத்தில் வாங்குவதற்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் பங்கு
மத்திய அரசிடம் இருக்கும் 52.98 சதவீதம் பங்கினை விற்கலாம் என்றும், இதற்கான expression of interest தெரிவிக்க தற்போதைய கடைசி தேதி நவம்பர் 16 ஆகும். கொரோனாவின் காரணமாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்படுமா? இல்லை இதுவே கடைசியாக இருக்குமா? என்றும் தெரியவில்லை. ஏனெனில் இது குறித்தான எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

வாய்ப்பு குறைவு தான்
எனினும் Department of investment and public asset management (DIPAM) தலைவர், துஹின் காந்தா பான்டே அக்டோபரில் பிடிஐக்கு அளித்த பேட்டியில் இந்த முறை ஏலங்களுக்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று கூறியிருந்தது கவனிக்கதக்கது.

பிபிசிஎல் தனியார்மயமாக்கல்
அரசுக்கு சொந்தமான, நீண்டகாலமாக எரிபொருள் சில்லறை விற்பனை துறையில் இருக்கும் இந்த பிபிசிஎல் நிறுவனம் தனியார்மயமாக்கல் என்பது, இத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. மாறாக அரசாங்கத்தின் 1.05 லட்சம் கோடி முதலீட்டு இலக்கில் மூன்றில் ஒரு பங்காவது சந்திக்க இது உதவும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2 சதவிகித பங்கு விற்பனை கூட 25,000 கோடி ரூபாய்க்கு மேல் கிடைகும் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லண்டனை சேர்ந்த பிபி பிஎல்சி, குவைத் பெட்ரோலியம், மலேசியாவின் பெட்ரோனாஸ், ஷெல்- சவுதி அராம்கோ மற்றும் எஸ்ஸார் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஆர்வத்தை வெளிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஏலத்தில் எடுக்க ஆர்வம்
இந்நிலையில் வளர்ந்து வரும் இத்துறையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய சவுதியின் சவுதி அராம்கோ நிறுவனம், டோட்டல் எஸ்.ஏ நிறுவனங்களுக்கு, பி.பி.சி.எல் ஒரு கவர்ச்சிகராமான கொள்முதல் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். இதற்கிடையில் தற்போது ரஷ்ய நிறுவனமான ரோஸ்நெஃப்ட் முன்னணியில் ஏலம் எடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிபிசிஎல்லின் திறன்
பிபிசிஎல் நிறுவனம், மும்பை, கொச்சின், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட பல இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்புகளை செய்து வருகிறது. இது சுமார் 38.3 மில்லியன் டன் கச்சா எண்ணெயை எரிபொருளாக மாற்றும் திறன் கொண்டது என்றும், இதற்கு 15,078 பெட்ரோல் பம்புகளும், 6004 எல்.பி.ஜி விநியோகஸ்தர்களும் உள்ளனர் என்பது கவனிக்கதக்கது விஷயம்.