டெல்லி: பிஎஸ்என்எல் அதன் கட்டணத்தை டிசம்பர் 1 முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ சமீபத்தில் கட்டணத்தை அதிகரிப்பதாக அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.ஜி.ஆர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சவாலாக மாறியுள்ளது.
உச்சநீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் மூன்று மாத காலத்திற்குள் இந்திய அரசுக்கு அனைத்து நிலுவைத் தொகையும் செலுத்துமாறு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்த ஆபரேட்டர்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ .92,000 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவை கட்டணங்களை உயர்த்த திிட்டமிட்டன.
சமீபத்தில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை, அதேபோல கடனில் மூழ்கிய மற்றொரு அரசு நிறுவனமான எம்.டி.என்.எல் உடன் இணைப்பதற்கு அரசு க்ரீன் சிக்னல் அளித்தது.

4 ஜி சேவை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எம்டிஎன்எல்-பிஎஸ்என்எல் மறுமலர்ச்சி திட்டத்திற்கு, ரூ .29,937 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் பிஎஸ்என்எல் புத்துயிர் பெற்றுள்ளது.

பழைய விலை
ரூ38,000 கோடி மதிப்புள்ள இரு நிறுவனங்களின் மொத்த சொத்துக்களையும், பணமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் தங்கள் புதுப்பிப்புக்காக, 15,000 கோடி ரூபாயை, பிணைய பத்திரங்கள் மூலம் ஈட்ட உள்ளன. பிஎஸ்என்எல்லுக்கான, 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 2016ம் ஆண்டின், விலையாக இருக்கும்.

அமைச்சரவை
பிஎஸ்என்எல், ஊழியர்களுக்கான கவர்ச்சிகரமான விஆர்எஸ் தொகுப்பிற்கும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் இணைவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் எம்.டி.என்.எல், பி.எஸ்.என்.எல்லின் துணை நிறுவனமாக இருக்கும் என்று தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு சமீபத்தில் தெரிவித்தார்.

வேலிடிட்டி
முன்னதாக, பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல நல்ல பேக்கேஜ்களை அறிமுக் செய்துள்ளது. ரூ .1,699 ப்ரீபெய்ட் திட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். நவம்பர் 30ம் தேதிக்குள் இந்த திட்டத்தில் இணைந்தால், 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதன்பிறகு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 365 நாட்கள் வேலிடிட்டியாகும். அதாவது, நவம்பர் மாதத்தில் இத்திட்டத்தில் இணைந்தால், உங்களுக்கு முழுதாக 60 நாட்கள் கூடுதலாக கிடைக்கும். எனவே கட்டண உயர்வுக்கு முன்பாக பிஎஸ்என்எல் பேக்கேஜில் இணைந்துவிடலாம் என்று வாடிக்கையாளர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர்.