பலத்த சவால்களுக்கும் மத்தியில் இந்தாண்டில் பட்ஜெட் 2021, பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு பரவலான எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகின்றன. ஏனெனில் கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமி அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்று விட்டது.
இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் பெரும் வீழ்ச்சியை முதல் காலாண்டில் சந்தித்தது. இரண்டாவது காலாண்டிலும் சரிவினையே கண்டது. ஆக மொத்தத்தில் நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் சரிவினையே காணும் என்று பல நிபுணர்களும், மதிப்பீட்டு நிறுவனங்களும் கணித்து வருகின்றன.
இனி பணம் உங்களைத் தேடி வரும்.. வீடு தேடி வரும் வங்கி சேவை.. சூப்பர் சேவை தான்..!

பெரிய ட்விஸ்ட்
ஒவ்வொரு துறையும் கொரோனாவினால் பெரும் இழப்பினை பதிவு செய்துள்ளன. தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியிருந்தாலும், கொரோனாவினால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக நிலவி வருகின்றது. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட் தாக்கலானது, இதுவரை காணாத வகையில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதோடு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆட்டோமொபைல் துறை எதிர்பார்ப்பு
பொதுவாக கடந்த சில ஆண்டுகளாக பெரும் பின்னடைவை சந்தித்து வந்தது ஆட்டோமொபைல் துறை. எனினும் கொரோனாவுக்கு முன்பு தான் சற்று துளிர்விடத் தொடங்கிய நிலையில், கொரோனா வந்து அதனை ஆட்கொண்டது. இதனை தொடர்ந்து சில மாதங்கள் ஒரு வாகனங்கள் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது தான் துரதிஷ்டவசமான ஒரு செய்தி.

பணப்புழக்கம் குறைவு
கொரோனாவின் காரணமாக மக்களின் கையில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால் மக்கள் அத்தியாவசியம் தவிர, மற்ற செலவினங்களை செய்ய யோசித்து வருகின்றனர். இந்த நிலையில் சொகுசு கார்களின் விற்பனையும் சரிவினை கண்டது. அதோடு அதிகப்படியான வரி விகிதம் இன்னும் இத்துறையில் அழுத்தத்தினை கொடுத்தது. இது சொகுசு கார்களின் தேவையை பாதித்தது. இதனால் சொகுசு கார்களின் விற்பனையும் வெகுவாக பாதித்துள்ளது என, இது குறித்து சில நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தடையில் இருந்து விலகி இருக்க வேண்டும்
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்ட்டின் ஸ்வெங்க், இந்த துறைக்கு தடையாக இருக்கும் எதையும், நாம் விலகி இருக்க வேண்டும். ஏனெனில் அது இறுதியில் சிக்கலையே ஏற்படுத்தும் என்றும் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வரியை குறைக்க வேண்டும்
அதோடு வரவிருக்கும் பட்ஜெட்டில் வாகனத் துறையின் மீதான வரியை குறைக்க வேண்டும். ஏற்கனவே வாகனத் தொழிலுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அது இறக்குமதி வரிகள் மற்றும் ஜிஎஸ்டி வரி, செஸ் வரி வரை அனைத்தும் அதிகமாக உள்ளன. குறிப்பாக சொகுசு கார்களுக்கு 22 சதவீதம் உள்ளது. ஆக இது குறைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இத்துறையின் மீதான வளர்ச்சியினை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆடி என்ன சொன்னது
பென்ஸ் நிறுவனத்தினை போலவே ஆடி நிறுவனத்தின் இந்திய தலைவரான பல்பீர் சிங்க் தில்லான், கொரோனாவின் காரணமாக சொகுசு கார்கள் துறையில் பல இடையூறுகள் உள்ளன. பல சவால்களுக்கும் மத்தியில் மீண்டு வந்து கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டை காட்டிலும் வளர்ச்சி மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

சொகுசு கார்களுக்கு அதிக வரி
ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், சொகுசு கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவது கவனிக்கதக்க விஷயமாகும். இது ஒரு சவலாகவே இருந்து வருகிறது. இது ஆடம்பர கார்களை 1 சதவீதத்திற்கும் மேலாக வளர்ச்சி காண விடவில்லை. இது கடந்த ஆண்டில் 0.7 - 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கலாம். இது மிகப்பெரிய (அதிக வரி) சவலாக உள்ளது என்றும் பல்பீர் கூறியுள்ளார்.

லம்போகினி கார்
மற்றோரு வகை சொகுசு காரான லம்போகினி காரின் இந்திய தலைவர் ஷரத் அகர்வால் இது குறித்து கூறுகையில், கடந்த ஆண்டில் ஆட்டோமொபைல் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சொகுசு கார் துறையின் மிக முக்கிய எதிர்பார்ப்பு, இத்துறையினை நிலை நிறுத்துவதாகும். ஆனால் இதற்கான அறிகுறிகள் தற்போது வரை இல்லை.

மூன்று ஆண்டுகளாக மாற்றமில்லை
அதோடு வரவிருக்கும் பட்ஜெட்டில் ஏதேனும் எதிர்மாறான மாற்றங்கள் இருந்தால், இந்த துறை இன்னும் மோசமான வீழ்ச்சியினை சந்திக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றமின்றி ஒரு நிலைத்தன்மை நிலவி வருகின்றது. அரசும் மூன்று ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆக இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இருக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இத்துறையில் பாதிப்பினை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் வரியும் ஒன்று.

விற்பனை பாதிப்பில் முக்கிய காரணி
வரி விதிப்பு என்பது ஒரு பெரிய காராணியாகும். இது விற்பனையையும் பெரிதாக பாதிக்கிறது. தற்போது வாகனங்களின் வகையை பொறுத்த வரையில் 28 சதவீதம் வரையில் ஜிஎஸ்டி வரி, இதோடு செஸ் வரி 1 முதல் 22 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. அதோடு CBUவை பொறுத்து சுங்க வரி 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ளன. ஆக இவை வாகன விற்பனையை பெரிதும் பாதிப்பதாக வாகன நிறுவனங்கள் கூறியுள்ளன.

முக்கிய எதிர்பார்ப்பு
சில நிறுவனங்கள் வரியை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், சில நிறுவனங்கள் குறைக்காவிட்டாலும் இதிலிருந்து அதிகரிக்காமல் இருந்தால் போதும் என்றும் கூறியுள்ளன. உண்மையில் கடந்த ஆண்டில் கொரோனாவினால் பெரும் அழுத்தத்தில் உள்ள நிறுவனங்கள் தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளன. ஆக இந்த நிறுவனங்களுக்கு மேற்கொண்டு வரி குறைப்பு என்பது மிக ஆறுதல் தரும் விஷயமாகவே இருக்கும்.