அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலை இன்று நாடளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பொதுத்துறை வங்கிகளுக்கு ஊக்கத்தினை கொடுக்கும் வகையில் பல அறிவிப்புகளை கொடுத்துள்ளார்.
குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுக்கான மறுமூலதனம். இது 2021 - 2022ம் நிதியாண்டில் வங்கிகளுக்கு 20,000 கோடி ரூபாய் மறுமூலதனமாக கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளின் பங்கு விலைகள், இந்திய பங்கு சந்தையில் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளன. குறிப்பாக நிஃப்டி PSU bank index ஆனது 6 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இதே நிஃப்டி 4% தான் ஏற்றம் கண்டுள்ளது.

4% மேல் ஏற்றம் கண்ட பங்குகள்
குறிப்பாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 8% ஏற்றத்திலும், பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு விலையானது 5.7%மும், கனரா வங்கியின் பங்கு விலையானது 5.5% ஏற்றமும். இந்தியன் வங்கியின் பங்கு விலையானது 5%மும். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு விலையானது 4.4%ஏற்றமும் கண்டுள்ளது.

3% வரையில் ஏற்றம் கண்ட வங்கி பங்குகள்
இதே இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் பங்கு விலையானது 2.8% ஏற்றமும் பஞ்சாப் நேஷனல் பங்கு விலையானது 2.5%மும், பேங்க் ஆப் மஹாராஷ்டிராவின் பங்கு விலையானது 2.34% ஏற்றமும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது 1.8%மும், யூகோ வங்கியின் பங்கு விலையானது 1.2% ஏற்றமும் கண்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கான கூடுதல அறிவிப்புகள்
இது மட்டும் அல்ல இரண்டு வங்கிகள் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. அதோடு பொதுத்துறை வங்கிகளில் குவிந்திருக்கும் வாராக்கடனை நிர்வாகம் செய்ய தனிப்பட்ட அமைப்பை ARC, AMC மற்றும் AIF அமைப்பின் கீழ் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகளின் வாராக்கடனை குறைக்க இது வழிவகுக்கும். இன்றைய காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் முக்கிய பிரச்சனையே வாராக்கடன் தான். ஆக இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

வங்கி டெபாசிட்டுகளுக்கான இன்சூரன்ஸ்
வங்கி டெபாசிட் கணக்குகளுக்கான, இன்சூரன்ஸ் தொகையானது 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக இப்படி பல்வேறு அறிவிப்புகளுக்கு மத்தியில், பொதுத்துறை வங்கிகள் மீண்டு வர இது ஏதுவாக அமையும். இதனால் வங்கிகளிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் அதிகளவிலான கடனை கொடுக்க வழிவகுக்கும். இது மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்க வழிவகுக்கும். என்றும் கூறப்படுகிறது.