மத்திய நிதியமைச்சர் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை முடித்துவிட்ட நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த வேளையில் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு மத்திய நிதியமைச்சகம் அலுவலகத்தில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடக்கும், பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியை மத்திய நிதியமைச்சகம் நடத்தவில்லை.
இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்.. முடிவை மாற்றும் மத்திய அரசு..?!

அல்வா நிகழ்ச்சி ரத்து
இந்நிலையில் இன்று மத்திய நிதியமைச்சகம் ஒமிக்ரான் தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்கு முன்பு நடக்கும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி முதல் முறையாக இந்த வருடம் ரத்து செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஸ்வீட் பாக்ஸ்
மேலும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்றாலும் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தங்கள் இருக்கையிலேயே ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது மத்திய நிதியமைச்சகம்.

பேப்பர்லெஸ் பட்ஜெட் அறிக்கை
இதைத் தொடர்ந்து கடந்த வருடத்தைப் போலேவே 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையும் டிஜிட்டல் முறையில் பேப்பர்லெஸ் பட்ஜெட் அறிக்கையாக வெளியிடப்படும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் அறிக்கை
மேலும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு பட்ஜெட்டின் முழு அறிக்கை www.indiabudget.gov.in தளத்திலும், யூனியன் பட்ஜெட் செயலியிலும் பெறலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்வா நிகழ்ச்சி என்றால் என்ன..?
பொதுவாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஹல்வா விழா நடைபெறுவது வழக்கம். இது பட்ஜெட் செயல்முறையின் இறுதிக் கட்டங்கள் அல்லது கடைசிக் கட்டத்தை அடைவதைக் குறிக்கிறது.

நிதியமைச்சகம் தலைமையகம்
வழக்கமாக, டெல்லியில் மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தின் வடக்குப் பகுதியில் அல்வா தயாரித்து நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் உருவாக்கும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம்.

முக்கிய அதிகாரிகள்
இந்த அல்வா தயாரிக்கும் விழாவில் நிதியமைச்சர், நிதியமைச்சர் மற்றும் நிதி அமைச்சகத்துடன் பணிபுரியும் மற்ற உயர்மட்ட பிரதிநிதிகள் எனப் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து உயர் மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வது வழக்கம்.

பட்ஜெட் அறிக்கை அச்சிடும் பணி
மேலும் இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சிக்குப் பின்பு தான் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரிட்டிங் பிரஸ்-ல் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக அச்சிடப்படும். இந்த அச்சிடப்படும் பணியை அதிகப்படியான பாதுகாப்பு உடனும், ரகசியமாகவும் செய்யப்படுவது வழக்கம்.

ஒமிக்ரான் தொற்று
2021ல் அல்வா நிகழ்ச்சியை மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி நடந்தது. இது கிட்டதட்ட பட்ஜெட் அறிவிக்க 9 நாட்களுக்கு முன்பாகச் செய்யப்பட்டது. தற்போது ஒமிக்ரான் தொற்றுக் காரணமாக அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது.