2024 ஆம் ஆண்டில் நடக்கும் பொதுத் தேர்தலில் கடுமையாகப் போட்டி இருக்கும் என்பதால் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கையைப் பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ளும் என ஒருபக்கம் பேசப்பட்டாலும், மறுபுறம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ரெசிஷன் அச்சம், பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி ஆகியவற்றின் சரிவு பட்ஜெட்-ல் அதிகப்படியான தளர்வுகள் அளிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இந்த நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பெண்களுக்கு வருமான வரி விதிப்பில் ஏதேனும் சலுகை கிடைக்குமா என்ற கேள்வி எழுத்துள்ளது. இந்திய மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்புகளையும், தாக்கத்தையும் எதிர்கொண்டு வரும் நிலையில் கட்டாயம் தனிநபர் பயன் பெறும் வகையில் அறிவிப்பு இருக்கும்.
இது பெண்களைச் சார்ந்து இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகப் பேச்சு நிலவும் வேளையில், எப்படிப்பட்ட அறிவிப்புகள் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வரும்..?

வருமான வரி விலக்கு
இந்தியாவில் பெண்களுக்குச் சிறப்பு வருமான வரி விலக்குகள், வரிப் பலகைகள் மற்றும் வரிச் சலுகைகள் ஏதேனும் உள்ளதா என்றால்.. ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் இப்போது நீக்கப்பட்டது. நிதிச் சட்டம் 2012 மூலம் பெண்களுக்கு அளிக்கப்பட்ட மாறுபட்ட வரி அடுக்குகளை மொத்தமாக ரத்து செய்தது.

பெண்கள்
இதன் பின்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒருங்கிணைந்த வரிக் கட்டமைப்பில் தான் வருமான வரி விதித்து மத்திய அரசு வசூலித்து வருகிறது. 2012 நிதி சட்டம் வருவதற்கு முன்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குச் சற்று கூடுதலான வரிச் சலுகைகள் இருந்தன.

கூடுதல் வரிச் சலுகை
இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு சந்தைக்குப் பெண்களை வரவழைக்கவும் கூடுதல் வரிச் சலுகைகளை வழங்கி வந்தனர். ஆனால் தற்போது வருமானம், வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால் வருமான வரியில் சலுகை தேவையில்லை என்று நம்பப்பட்டு இந்தச் சலுகை நீக்கப்பட்டது.

ஓரே வரி
தற்போதைய தனிநபர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, ஒரே வருமான வரி விகிதங்கள் தான். மேலும் வருமான வரி ஸ்லாப் தனிநபர்களின் வயதைப் பொறுத்து மட்டுமே மாறும், இதனால் பாலினம் மூலம் எவ்விதமான சலுகையும் அளிக்கப்படுவது இல்லை.

பெண்களுக்கான வருமான வரி
இந்தியாவில் விலைவாசி உயர்வால் மக்கள் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் வருமான வரி ஸ்லாப்-ல் மாற்றம், வரி விகிதங்களைக் குறைக்கவோ அல்லது வருமான வரி அடுக்குகளை விரிவுபடுத்தி மக்களின் வரி சுமையை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை அனைத்துத் தரப்பு மக்களிடமும் உள்ளது.

தனிநபர் வரிச் சலுகை
இந்த நிலையில் அனைத்து தனிநபர்களுக்கும் வருமான வரி சலுகையை அளித்தால் அரசின் வரி வசூலில் பெரிய பாதிப்பு உருவாகும், இதற்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சகம் பெண்களுக்கு மட்டுமே இந்த நன்மையை வழங்க முடியும். அதாவது 2012 நீக்கப்பட்ட சிறப்புச் சலுகையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர முடியும் என டெலாய்ட் இந்தியாவின் பார்ட்னர் சுதாகர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.

பணச் சேமிப்பு
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பணத்தைச் சேமிப்பதில் கைதேர்ந்தவர்கள், இந்த நிலையில் இந்த வரிச் சலுகை மூலம் பெண்களைக் கூடுதலாகப் பணத்தைச் சேமிக்கவும், வேலைவாய்ப்பு சந்தைக்குள் வர ஊக்குவிக்கும் எனச் சுதாகர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.