2020ல் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டு வர பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அடங்கிய பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இரு அவைகள் முன்னிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் தொடருக்கான கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. ராம்நாத் கோவிந்த் 2020ஆம் ஆண்டில் மத்திய அரசு செய்த பல முக்கிய அறிவிப்புகளையும், அதனால் மக்கள் அடைந்த நன்மைகளைப் பற்றியும் பேசினார்.

இந்த வருடம் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா இதுவரை பார்க்காத ஒரு பட்ஜெட் அறிக்கையை அறிவிக்க உள்ளதாக அறிவித்தார். இதனால் மக்கள் மத்தியிலும், தொழிற்துறை நிறுவனங்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிக்கை தயாராகும் முன்பு மத்திய நிதியமைச்சகத்திற்கும், பட்ஜெட் குழுவிற்கும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைப்புகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பல்வேறு கோரிக்கைகளையும், பரிந்துரையும் முன்வைக்கும். பொருளாதாரம் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோரிக்கைகளை ஆய்வு செய்த பின்பு ஏற்புடையதாக இருந்தால் கண்டிப்பாகப் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும்.
அந்த வகையில் இந்த வருடம் பெரும்பாலான அமைப்புகள் தனிநபர் வருமான வரிப் பரிவில் அதிகச் சலுகை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. இதனால் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரிப் பிரிவில் அதிகச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் படி FICCI அமைப்பு 80சி பிரிவில் தற்போது 1.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படும் நிலையில், இதன் அளவீட்டை 3,00,000 ரூபாய் வரையில் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.