இந்திய ஐபிஓ சந்தையில் அதிகமானோரால் முதலீடு செய்யப்பட்டுப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பர்கர் கிங் நிறுவனப் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் சுமார் 92 சதவீதம் அதிகமான ப்ரீமியம் தொகைக்குப் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இதனால் இந்நிறுவன ஐபிஓ முதலீட்டில், முதலீடு செய்து பங்குகளைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர், ஆனால் இதே வேளையில் முதலீடு செய்தும் பங்குகளைப் பெறாதவர்கள் சோகத்தில் உள்ளனர்.

பர்கர் கிங் பங்குகள் ஐபிஓ
ஐபிஓ திட்டத்தில் பர்கர் கிங் ஒரு பங்கு விலை வெறும் 59 முதல் 60 ரூபாய் விலைக்கு விற்பனை செய்த நிலையில், இன்று பங்குச்சந்தையில் சுமார் 115.35 ரூபாய் விலைக்குப் பட்டியலிடப்பட்டுச் சுமார் 92 சதவீத லாபத்தைத் தனது ஐபிஓ முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது.

பர்கர் கிங் அதிரடி வளர்ச்சி
இதுமட்டும் அல்லாமல் பட்டியலிடப்பட்டுச் சில நிமிடங்களிலேயே இந்நிறுவனப் பங்குகள் மீது முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான ஈர்ப்புக் காணப்பட்ட நிலையில், பர்கர் கிங் பங்குகள் சுமார் 132 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு இந்நிறுவனத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பர்கர் கிங் முதலீட்டாளர்கள்
பர்கர் கிங் ஐபிஓ திட்டத்தில் இந்நிறுவனப் பங்குகளை ரீடைல் முதலீட்டாளர்கள், தேர்வு செய்யப்பட்ட நிறுவன முதலீட்டாளர்கள், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் என 3 தரப்பும் சேர்ந்து சுமார் 156 முறை அதிகம் முதலீடு செய்தனர். இதன் வாயிலாக இந்நிறுவனப் பங்குகள் இன்று காலை பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது 92 சதவீத பரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

பர்கர் கிங் சந்தை மதிப்பு
இதன் மூலம் பர்கர் கிங் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு இன்று காலை பங்குகள் பட்டியலிடப்பட்டதிற்குப் பின் 4,402 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிக மதிப்புக் கொண்டு QSR நிறுவனங்களில் ஒன்றாகப் பர்கர் கிங் உயர்ந்துள்ளது.

பர்கர் கிங் பங்கு இருப்பு
இந்த ஐபிஓ திட்டத்தின் மூலம் பர்கர் கிங் நிறுவனத்தில் இந்நிறுவன ப்ரோமோட்டர்களின் பங்கு மதிப்பு 94.3 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் முதலீட்டாளர்களின் பங்கு இருப்பு 5.7 சதவீதத்தில் இருந்து 39.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.