மும்பை: அடிப்படை உலோகங்களை இறக்குமதி செய்து வரும் இந்தியா, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அதிகளவில் காப்பரையும் இறக்குமதி செய்து வருவதாக கேர் ரேட்டிங்க்ஸ் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் உலோகங்களின் பார்வை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கேர் மதிப்பீட்டு நிறுவனம்.
இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தியும் 450 கிலோடன்னாக இருக்கும் என்றும், இது கடந்த நிதியாண்டை விட 1.5 சதவிகிதம் குறைவு என்றும் கேர் மதிப்பீடு தெரிவித்துள்ளது.

உற்பத்தி குறைவு
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் உள்நாட்டு சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தி 3.1 சதவிகிதம் குறைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவிகிதம் பங்கு வகிக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் உற்பத்தி மேலும் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையின் எதிரொலி
நாட்டின் முக்கிய காப்பர் உற்பத்தியாளரான ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் காரணமாக, நாட்டின் காப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. மேலும் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. ஓரு புறம் ஏற்றுமதி 40 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், மறுபுறம் இறக்குமதி 67.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

எங்கெங்கு தேவை
காப்பருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொலைத் தொடர்பு துறையில் 56 சதவிகிதமும், கட்டிடம் மற்றும் கட்டுமான துறையில் 8 சதவிகித தேவையும், ஆட்டோமொபைல் துறையில் 11 சதவிகிதமும், இதே நீடித்த நுகர்வோர் பொருட்கள் துறையில் 8 சதவிகித உபயோகமும் உள்ளது. இப்படி ஒவ்வொரு துறையிலும் காப்பருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், உற்பத்தி குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

தேவை அதிகரிக்கும்
கேர் ரேட்டிங்க்ஸ் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் காப்பரின் தேவையானது 7 - 8 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. குறிப்பாக மின் சக்தி துறையிலிருந்து தேவை அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. புதுபிக்கதக்க எரிசக்தி மீதான அரசாங்கத்தின் உந்துதல் மற்றும் நீடித்த நுகர்வோர் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் காப்பரின் தேவையும் அதிகரிக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கார்களிலும் காப்பர் உபயோகம் அதிகரிக்கலாம்
பாரம்பரியமாக உபயோகப்படுத்தும் கார்களில் பயன்படுத்தும் காப்பரை விட, தற்போதுள்ள மின் வாகனங்களில் காப்பரின் உபயோகம் 2-3 மடங்கு அதிகமாகும். சாதரணமான கார்களை விட மின்சார வாகனங்களில் இது இன்னும் அதிகரிக்கும். மேலும் தற்போது மின்சார வாகனங்களுக்கான தூண்டுதல் இருந்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் மின்சார வாகனங்களில் உற்பத்தியும் அதிகரிக்கும், தேவையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அலுமினியம் தேவை
இதற்கிடையில் மற்றொரு அடிப்படை உலோகமான அலுமினியம், நடப்பு ஆண்டில் உற்பத்தி 3.7 சதவிகிதம் உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு புறம் அலுமினியம் உற்பத்தி சற்று அதிகரிக்கும் என்று கருதப்பட்டாலும், மறுபுறமோ இதன் தேவையானது 6 - 7 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மின் பரிமாற்றம் மற்றும் பேக்கேஜிங் துறையின் வளர்ச்சியால் அலுமினியம் நுகர்வு அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜிங்க் தேவையும் அதிகரிக்கும்
நடப்பு நிதியாண்டில் ஜிங்கின் தேவையும் 3 -4 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நிலவி வரும் மந்த நிலையால் உலோகங்களின் நுகர்வு குறையும் என்றும் கருதப்படுகிறது. தொடர்ச்சியான வரி, வர்த்தகப் போர்கள் என பல வகைகளில் நடப்பு நிதியாண்டு முழுவதும் அடிப்படை உலோகம் துறை பாதிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து விலையை குறைத்து வருகிறது. இதன் விளைவாக உற்பத்தியாளர்களின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.