2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர் சொத்து மதிப்பின் வீழ்ச்சியின் காரணமாக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி 11வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை 2020ஆம் ஆண்டின் கடைசி நாளில் சீனாவின் ஜாங் ஷான்ஷான் 12ஆம் இடத்திற்குத் தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தைப் பெற்றார்.
இதன் பின் சீன முதலீட்டாளர்களின் அதிரடி முதலீட்டின் காரணமாக ஜாங் ஷான்ஷானின் சொத்து மதிப்பு 2021ல் 78 பில்லியன் டாலரில் இருந்து சுமார் 91 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

மாஸ்காட்டும் ஜாங் ஷான்ஷான்
ஜாங் ஷான்ஷானின் சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள அதிரடி வளர்ச்சியின் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் கூகிள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லேரி பேஜ், அமெரிக்க முதலீட்டாளரான வாரன் பபெட், ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர் லேரி எலிசன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 6வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் ஜாங் ஷான்ஷான்.

24 மணிநேர வளர்ச்சி
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் ஜாங் ஷான்ஷான்-ன் சொத்து மதிப்பு சுமார் 8.24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஒரே நாளில் இவரின் சொத்து மதிப்பு 7.1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு அளவு 93.8 பில்லியன் டாலர் எனப் புதிய உச்சத்தை அடைந்துள்ளார். மேலும் அடுத்தச் சில நாட்களில் இவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் தாண்டி டாப் 5 பட்டியலுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

6ஆம் வகுப்பு பில்லியனர்
6ஆம் வகுப்பு மட்டுமே பிடித்த ஜாங் ஷான்ஷான், 12 வயது முதல் கட்டிட வேலை, சேல்ஸ்மேன் எனப் பல சின்ன வேலைகளைச் செய்து தனி ஆளாக வளர்ந்தவர். பொதுவாகச் சீனாவில் பெரு நிறுவனங்களுக்குப் பின்னால் அரசியல் தொடர்பு இருக்கும் ஆனால் ஜாங் ஷான்ஷான் யாருடை உதவியும் இல்லாமல் தனியாளாகத் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை அமைத்துள்ளார்.

பாட்டில் தண்ணீர் நிறுவனம்
1996ல் இவர் துவங்கிய நோங்பூ ஸ்பிரிங் என்ற பாட்டில் தண்ணீர் மற்றும் குளிர்பான நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நிலையான வளர்ச்சி அடைந்து இன்று சீனாவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதோடு ஜாங் ஷான்ஷான் மருந்து துறையிலும் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்ட வான்டாய் என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த வான்டாய் நிறுவனம் பல்வேறு வியாதிகளுக்குத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகிறது.

ஐபிஓ கொடுத்த ஜாக்பாட்
2020க்கு முன்பு ஜாங் ஷான்ஷான் பெரிய அளவில் பிரபலம் இல்லாத நிலையில் இந்தத் திடீர் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஐபிஓ.
ஜாங் ஷான்ஷான் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜாங் தனது மருந்து தயாரிப்பு நிறுவனமான வான்டாய் பயோலாஜிக்கல் பார்மஸி நிறுவனத்தைச் சீன பங்குச்சந்தையிலும், தண்ணீர் மற்றும் குளிர்பான நிறுவனமான நோங்பூ ஸ்பிரிங் நிறுவனத்தை ஹாங்காங் பங்குச்சந்தையிலும் பட்டியலிட்டார்.

சொத்து மதிப்பில் திடீர் வளர்ச்சி
நோங்பூ ஸ்பிரிங் சீன பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு இந்நிறுவனப் பங்குகள் சுமார் 155 சதவீதமும், வான்டாய் பயோலாஜிக்கல் பார்மஸி நிறுவனப் பங்குகள் சுமார் 2500 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனால் ஜாங் ஷான்ஷானின் சொத்து மதிப்பு 2020ல் மட்டும் 70.9 பில்லியன் டாலர் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2021ல் சுமார் 15 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2020ல் அதிரடி வளர்ச்சி
இந்த அதிரடி வளர்ச்சியில் தான் முகேஷ் அம்பானி இடத்தை ஜாங் ஷான்ஷான் பிடித்து 12வது இடத்திற்குத் தள்ளினார். இதுமட்டும் அல்லாமல் சீனா காலத்திற்குப் பின் முகேஷ் அம்பானியிடம் இருந்து ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற முக்கியமான பதவியையும் பெற்றார்.

சீன முதலீட்டாளர்கள்
இந்த அறிவிப்பு வெளியானதும், அலிபாபா, டென்சென்ட் போன்ற பல டெக் நிறுவனங்கள் மீதான முதலீட்டில் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட சீன முதலீட்டாளர்கள் ஜாங் ஷான்ஷானின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இதன் வாயிலாக ஜாங் ஷான்ஷான் சொத்து மதிப்பு இன்று 93 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.