சர்வம் கொரோனா வைரஸ் மயம், அதுவே ஆளைக் கொள்ளும் பயம் என போய்க் கொண்டு இருக்கிறது.
இந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில், "பாருங்க இன்னும் சில மாசத்துல உலகமே ஸ்தம்பிக்கும்..." எனச் சொல்லி இருந்தால், நம்மைப் பார்த்து எல்லோரும் சிரித்து இருப்பார்கள்.
ஆனால் இன்றோ எதார்த்தத்தில், உலகமே ஸ்தம்பித்துப் போய்விட்டது. வெளிநாடுகளுக்கு போவது எல்லாம் ஏதோ கார்கில் போருக்குச் செல்வதற்கு சமமாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பீதியில் 53% வணிகங்கள் பாதிப்பு.. நிலைமை சீரடைய 6 மாதம் ஆகலாம்.. FICCI சர்வே கணிப்பு!

பிரிட்டன்
இதில் இங்கிலாந்து மட்டும் ஒன்றும் விதி விலக்கல்ல. உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா, இங்கிலாந்தையும் அதே வீரியத்துடன் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது. இங்கிலாந்தில் மட்டும் சுமார் 3,980 பேருக்கு கொரோனா தொற்று வந்திருக்கிறது. 177 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

பொருளாதாரம்
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரமும் கொஞ்சம் பலமாகவே அடி வாங்கத் தொடங்கி இருக்கிறது. இந்த பொருளாதார சீர் குலைவுகளை சரி செய்யவும், மக்களின் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கவும் பிரிட்டன் அரசு சில அதிரடி திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். அந்த திட்டங்களைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

80 % வரை சம்பள மானியம்
கம்பெனிகளில், வேலை இல்லாததால், இங்கிலாந்து கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டது. இதைத் தடுக்க, இங்கிலாந்து அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறது. ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியரை வேலையில் இருந்து நீக்கவில்லை என்றால், அந்த ஊழியருக்கான மொத்த சம்பள பணத்தில், 80 சதவிகிதம் வரை மானியமாக இங்கிலாந்து அரசு கொடுக்க இருக்கிறதாம்.

எவ்வளவு மானியம்
அப்படி என்றால் வாங்கும் மொத்த சம்பள செலவில் 80 சதவிகிதம் மானியம் அப்படியே வந்துவிடுமா என்று கேட்டால் இல்லை. அதிகபட்சமாக 80 % வரை மானியம் வரலாம். அதோடு இந்த அசாதாரண பேமெண்ட்கள், அதிகபட்சமாக, மாதம் ஒன்றுக்கு 2,500 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை கொடுப்பார்களாம். இந்த 80 % வரை சம்பள மானிய திட்டத்தால் சுமார் 78 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்கை அரசு, கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்குமாம்.

எப்போதில் இருந்து
இந்த 80 % வரை சம்பள மானியம் இந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கணக்கிட்டு கொடுக்கப்படுமாம். இன்னும் சில வாரங்களில் இந்த திட்டம் செயல்படத் தொடங்கிவிடுமாம். தொடக்கத்தில் சுமாராக 3 மாதங்களுக்கு இந்த திட்டம் தொடருமாம். தேவை ஏற்பட்டால் மேற்கொண்டு நீட்டிக்கப்படுமாம்.

350 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்
சில தினங்களுக்கு முன்பு தான் இங்கிலாந்து அரசு, தன் நாட்டு பொருளாதாரத்தை இழுத்துப் பிடிக்க சுமாராக 350 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பிலான வியாபார மீட்புத் திட்டத்தை (Business Bailout Package) கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இது போல சில வரிகளைக் கூட ரத்து செய்து இருக்கிறார்களாம்.

வாட் வரி
இந்த நடவடிக்கைகளுக்குப் பின், அடுத்த காலாண்டு முழுமைக்கும் இங்கிலாந்து அரசு வசூலிக்கும் வாட் வரியை ரத்து செய்து இருக்கிறார்களாம். இதனால் இங்கிலாந்து பொருளாதாரத்தில் சுமார் 30 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் கூடுதலாக புழங்குமாம். இதனால் கம்பெனிகளும் திவால் ஆகிவிடாமல் தங்களை செயல்பாட்டில் வைத்திருக்க உதவும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.