கொரோனா வைரஸினால் உலகின் பொருளாதாரம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. அது எந்தளவு எனில் 90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மிக கடுமையான வீழ்ச்சியாகும்.
கடந்த 1930-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தம் தான், இதுவரை மிக மோசமான நிலையாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதையெல்லாம் தாண்டி பாதாளத்தினை நோக்கி போட்டி போட்டுக் கொண்டு சென்று கொண்டு இருக்கின்றன இந்திய பொருளாதாரமும், சர்வதேச பொருளாதாரம்.
அந்தளவுக்கு கொரோனாவின் உக்கிரம் மக்களையும் பொருளாதாரத்தினையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

தொடரும் வீழ்ச்சி
ஏற்கனவே இந்தியாவில் நிலவி வந்த மந்த நிலை காரணமாக இந்தியா பொருளாதாரம் கடந்த ஜூன் மற்றும் டிசம்பர் காலாண்டுகளில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது, இந்த நிலையில் அதென்ன வீழ்ச்சி இனி தான் இருக்கு என்பது போல, கொரோனாவின் ருத்ர தாண்டவத்தினால் சர்வதேசமும் கொரோனாவினால் பாதாளத்தினை நோக்கி பாய்ந்து கொண்டு உள்ளன.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் என்ன செய்யப்போகிறது?
இது மக்களையும் பொருளாதாரத்தினை இன்னும் எந்த மோசமான நிலைக்கு கொண்டு செல்லப்போகிறதோ தெரியவில்லை. சரியான தடுப்பு மருந்தும் இல்லை. வித விதமாக நாட்டுக்கு நாடு, பல்வேறு அறிகுறியுடன் உலா வருகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இந்த கொரோனாவினால் அரண்டு போயுள்ளன. இப்படி இருக்கையில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் என்ன செய்யப் போகின்றனவொ தெரியவில்லை.

வளர்ச்சி மதிப்பீடு குறைப்பு
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 2021ல் 1.9% ஆகத்தான் இருக்கும் என்று கணித்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 5.8% ஆகக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போது நிலவி வரும் லாக்டவுனால் ஒட்டுமொத்த இந்தியாவும் அத்தியாவசிய தேவை தவிர சலனமற்று காணப்படுகிறது. இதனையடுத்தே மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியினை குறைத்து கணித்து வருகின்றன.

நிலவி வரும் நிச்சயமற்ற நிலை
இதே சர்வதேச பொருளாதாரம் கடந்த 1930க்கு பிறகு மிக மிக மோசமான நிலையினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்ல நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை, பொருளாதாரத்தின் மீட்பு தன்மையை குறைத்துள்ளது என்று ஐஎம் எஃப்பின் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான நிலை
கடந்த ஜனவரி மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் 2021-ல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 3.4% ஆக மதிப்பிட்டிருந்தது. இதே 2020ல் உலகளாவிய வளர்ச்சி 3% குறையக்கூடும். இது கடந்த 2009ம் ஆண்டு நெருக்கடிக்கு பின்னர் ஏற்பட்ட வளர்ச்சியினை விட மிக மோசமானது எண்றும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் இந்தியா 2022ம் நிதியாண்டில் 7.4% வளர்ச்சியினை காணும் என்றும் சற்றே ஆறுதல் கொடுத்துள்ளது.

வளர்ச்சி பூஜ்ஜியம் தான்
ஆனால் ஏற்கனவே கொரோனாவினால் பயந்துபோயுள்ள மக்களை இன்னும் பயமுறுத்தும் விதமாக பார்க்லேஸ் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் 2020ம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சியினை பூஜ்ஜியமாக கணித்துள்ளது. இது முன்னர் வெறும் 2.5% ஆக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே 2020 -21ம் நிதியாண்டில் 7.5%ல் இருந்து 3.5% ஆக குறைத்துள்ளது.