சுற்றுச்சுழல் கண்காணிப்பு அமைப்பான சென்டர் பார் சைன்ஸ் அண்ட் என்விரான்மென்ட் (சிஎஸ்ஈ) அமைப்பு செய்த தேனின் தரத்தின் சோதனையில் டாபர், பதஞ்சலி, பைதியநாந்த், ஜன்டு, ஹிட்கரி, ஏபிஸ் ஹிமாலயா ஆகிய பிராண்டுகளின் தேன் NMR (Nuclear Magnetic Resonance) சோதனையில் தோல்வி அடைந்துள்ளது இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேனில் கலப்படம் செய்யப்படும் திரவம் சோதனையில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உருவாக்கி அதை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது சீனா தான் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

3 பிராண்டுகள்
சிஎஸ்ஈ அமைப்பின் 13 பிராண்டின் தேன் சோதனையில் சபோலா, மார்க்பெட்சோனா, நேச்சர்ஸ் நெக்டார் ஆகிய 3 பிராண்டுகளின் தேன் மட்டுமே வெற்றி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மற்ற பிராண்டுகளின் தேன்களில் இந்தியப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட முடியாத திரவம் கலந்திருப்பதாகக் கூறுகிறது சிஎஸ்ஈ அமைப்பு.

சர்க்கரை பாகு அல்ல
சிஎஸ்ஈ அமைப்பு செய்த சோதனையில் தேனில் கலக்கப்பட்ட சர்க்கரை பாகு, சாதாரணச் சர்க்கரை பாகு அல்ல சோதனையில் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சர்க்கரை பாகு எனச் சிஎஸ்ஈ அமைப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சுக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

3 முக்கியச் சிரப்
மேலும் தேனில் கலப்படம் செய்ய 3 முக்கியச் சிரப்-ஐ பயன்படுத்திக் கலப்படம் செய்யப்படுகிறது எனச் சிஎஸ்ஈ அமைப்பு கண்டுபிடித்துள்ளது. கோல்டன் சிரப், இன்வெர்ட் சுகர் சிரப் மற்றும் ரைஸ் சிரப் ஆகிய மூன்றும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.

FSSAI அமைப்பு
ஏற்கனவே இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பான FSSAI இற்குமதியாளர்களுக்கும், மாநில சரக்கு கட்டுப்பாடு அமைப்பிற்கும் உணவு கலப்படம் குறித்தும் இந்த 3 சிரப் குறித்தும் அறிவுறுத்தி தடை செய்துள்ளது.

புதிய பெயர்
ஆனால் சீனா சந்தை கோல்ட்ன் சிரப், இன்வெர்ட் சுகர் சிரப் மற்றும் ரைஸ் சிரப் ஆகிய பெயர்களில் இறக்குமதி செய்யாமல் fructose சிரப் என்ற சிறப்புப் பெயரில் இறக்குமதி செய்கிறது எனச் சீஎஸ்ஈ அமைப்பின் தலைவர் அமித் குரானா தெரிவித்துள்ளார்.

fructose சிரப்
இதற்காகச் சிஎஸ்ஈ அமைப்பு சீனா வர்த்தகத் தளத்தை ஆய்வு செய்ததில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான கோல்ட்ன் சிரப், இன்வெர்ட் சுகர் சிரப் மற்றும் ரைஸ் சிரப் ஆகியவற்றை
fructose சிரப் என்ற பெயரில் விற்பனை செய்கிறது.

C3 மற்றும் C4 பரிசோதனை
இதிலும் குறிப்பாகச் சில சீன நிறுவனங்கள் இந்தியாவில் C3 மற்றும் C4 பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாத சிரப் என்ற விளம்பரத்துடன் விற்பனை செய்யப்படுவதாகச் சிஎஸ்ஈ அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வகையான சிரப்-கள் இந்தியாவிற்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுவதாக மக்களுக்குச் சந்தேகம் எழுகிறது.

ஏற்றுமதி செய்யத் தயார்
மேலும் சிஎஸ்ஈ அமைப்பின் இந்த ரகசிய ஆய்வில் ஒரு நிறுவனம் fructose சிரப்-ஐ அதிகளவிலான ஸ்டாக் வைத்துள்ளது. இந்தியாவிற்கு எந்த நேரத்திலும் ஏற்றுமதி செய்யத் தயார் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

50 முதல் 80% சிரப்
சிஎஸ்ஈ அமைப்பின் மூத்த தலைவர் Sunita Narain செய்த ரகசிய ஆய்வில், சீன நிறுவனம் தேனில் 50 முதல் 80 சதவீதம் fructose சிரப்-ஐ கொண்டு கலப்படம் செய்தாலும் சோதனையில் கண்டு பிடிக்க முடியாது எனச் சிஎஸ்ஈ அமைப்பிற்குச் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெயின்ட் மூலப்பொருள்
சீனாவில் இருந்து இந்தக் கலப்படப் பொருளை உண்மையான பெயரில் இறக்குமதி செய்யாமல் fructose சிரப் என்ற பெயரில் இறக்குமதி செய்கிறது. இதிலும் முக்கியமாக இந்த fructose சிரப்-ஐ உணவு பொருளாக இறக்குமதி செய்யாமல் பெயின்ட் மூலப்பொருளாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது எனச் சுனிதா தெரிவித்துள்ளார்.