இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்த போது பல சமயத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளது.
குவைத்தில் ஈராக் படைகள் நுழைந்த போதும் சரி, 2020ல் சீனாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வூஹான் பகுதியில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்தது, சமீபத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்பு அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வந்ததும் ஏர் இந்தியா தான்.
ஆனால் இது அனைத்தும் ஏர் இந்தியா அரசு நிறுவனமாக இருக்கும் போது நடந்தது. தற்போது ஏர் இந்தியா மொத்தமாக டாடாவுக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டை வேகமாகக் கைப்பற்றி வரும் நிலையில், அந்நாட்டில் இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளனர். உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக உக்ரைனின் கீவ் நகருக்கு விமானங்களை இயக்கு அரசு முதலில் அழைக்கப்பட்ட விமான நிறுவனம் ஏர் இந்தியா தான்.

ஏன் ஏர் இந்தியா..?
ஏர் இந்தியா முதலில் அழைக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமாக இந்தியாவில் பெரிய விமானங்கள் அதிகம் கொண்ட ஒரே விமானச் சேவை நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது.

பெரிய விமானங்கள்
இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகள் மற்றும் ஆபத்தான அல்லது முரண்பாடான நிலப்பரப்புக்குச் செல்லும் போது ஓரே நேரத்தில் முடிந்த வரையில் அதிகப்படியான மக்களை அழைத்து வர பெரிய விமானங்கள் (Widebody planes) அவசியம். அதற்கான விமானமும், அனுபவமும் ஏர் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது.

AI1947 - 90 நிமிடம்
இந்த வாரத்தின் துவக்கத்தில் ஏர் இந்தியா ஒரு வெற்றிகரமான விமானத்தை இயக்கியது. செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்ட AI1947 விமானத்தில் ஐந்து விமானிகள், 18 கேபின் பணியாளர்கள் மற்றும் மூன்று பொறியாளர்கள் அனுப்பப்பட்டு வெறும் 90 நிமிடத்தில் 242 இந்தியர்களை அழைத்து வரப்பட்டது.

அனுபவம் முக்கியம்
இந்த விமானத்தை இயக்கியது 2009ல் லிபியாவின் பெங்காசிக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா பைலெட் தான் இந்த விமானத்தையும் இயக்கியுள்ளார். இதுபோன்ற அனுபவம் பிற எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமும் இல்லை.

டைமிங் முக்கியம்
விஸ்தாரா-விடம் 2 WideBody விமானங்கள் இருக்கும் நிலையில், ஏர் இந்தியாவிடம் 49 விமானங்கள் உள்ளது. இத்தகைய மீட்பு பணிகளில் டைமிங் முக்கியம் என்பதால் அனுபவம் கொண்ட ஏர் இந்தியாவையே மத்திய அரசு முதலில் அழைத்தது, டாடா குழுமம் எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் விமானங்கள், பைலட் என அனைத்து வசதிகளையும் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

2வது பயணம் தோல்வி
உக்ரைனுக்கு ஏர் இந்தியா இரண்டாவது பயணத்தை மேற்கொண்ட போது உக்ரேனிய வான்வெளியை சிவில் விமானங்களுக்கு மூடுவதாக (NOTAM) நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் ஏர் இந்தியா விமானம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

2 விமானங்கள்
ஏர் இந்தியா டெல்லியில் இருந்து புக்கரெஸ்ட் (ருமேனியா) மற்றும் புடாபெஸ்ட் (ஹங்கேரி) ஆகிய இடங்களுக்கு இன்று பிப்ரவரி 26 ஆம் தேதி 2 விமானங்களை இயக்குவது குறிப்பிடத்தக்கது.