இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகள், லாக்டவுன், விமானப் பயணிகள் எண்ணிக்கை கட்டுப்பாடு எனப் பல்வேறு காரணங்களால் இந்திய விமானச் சேவை கடுமையான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாட்டு விமானச் சேவை வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், 2020 மே மாதம் முதல் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு உள்நாட்டு விமானச் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்தது. இதனால் பல முன்னணி தனியார் விமானச் சேவை நிறுவனங்கள் பல புதிய வழித்தடத்தில் விமானச் சேவையும் துவங்கியது.

விமானக் கட்டணம்
உள்நாட்டு விமானச் சேவை மற்றும் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் இந்தச் சூழ்நிலையில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விமானக் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானச் சேவை கட்டணம் பெரிய அளவில் உயர உள்ளது.

10% முதல் 30% கட்டண உயர்வு
மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான விமானக் கட்டணத்தை லேவர் பேண்ட்-ல் குறைந்த பட்சம் 10 சதவீதமும், அப்பர் பேண்ட்-ல் அதிகப்படியாக 30 சதவீதம் வரையில் உயர்த்த அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு விமானச் சேவையில் விமானக் கட்டணம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையில் உயர உள்ளது.

மார்ச் 31 வரை தொடரும்
இப்புதிய விலை உயர்வு மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும், இல்லையெனில் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நடைமுறையில் இருக்கும் என மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டண உயர்வால் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவோர் பின்வாங்க வாய்ப்பு உள்ளது.

உள்நாட்டு விமானச் சேவை
மத்திய அரசு மே 21, 2020ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவைக்கு ஒப்புதல் அளித்த போது பயண நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் 7 பேண்டுகளாகப் பிரிக்கப்பட்டுக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. இந்தப் பிரிவுகளில் தான் தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

40 நிமிட பயணம்
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள அறிவிப்பின் படி, முதல் பேண்ட் ஆன 40 நிமிடங்களுக்குக் குறைவாக இருக்கும் விமானப் பயணத்திற்கு 2000 முதல் 6000 வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய கட்டணத்தின் படி 2200 முதல் 7800 ரூபாய் வரையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

30 சதவீத கட்டண உயர்வு
இதேபோல் கடைசிப் பேண்ட் ஆன 180 முதல் 210 நிமிட விமானப் பயணத்திற்கு 6500 முதல் 18600 வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 7200 முதல் 24,200 ரூபாய் வரையில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இப்படி ஒவ்வொரு பேண்ட்-க்கும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.