இந்த அக்டோபர் 01, 2020-ல் இருந்து, சில விதிகள் மற்றும் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்து இருக்கின்றன.
எந்த சட்ட திட்டங்கள், என்ன மாதிரியான மாற்றங்களைக் கண்டு இருக்கிறது? இகாமர்ஸ் கம்பெனிகள் ஏன் கூடுதலாக வரி வசூலிக்கத் தொடங்குகிறார்கள்? இனிப்புக் கடையில் என்ன மாற்றம் வந்து இருக்கிறது என எல்லாவற்றையும் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
முதலில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களுக்கான ஆர் சி சான்றிதழில் இருந்து தொடங்குவோம்.
பஞ்சாப் நேஷனல் பேங்குக்கு நேரம் சரியில்ல! புகழ்பெற்ற Sintex கம்பெனி கடனை மோசடி என அறிவித்த வங்கி!

1. ஓட்டுநர் உரிமம் & ஆர் சி விவரங்கள்
இனி வாகன ஓட்டிகள், கையில் ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆர் சி போன்றவைகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. முறையான டிஜிட்டல் காப்பிகளை (valid soft copy) வைத்துக் கொண்டாலே போதுமாம். ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கான டாக்குமெண்ட்களை, மத்திய அரசின் Digi-locker அல்லது m-parivahan-ல் வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறது மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத் துறை. இது 01 அக் 2020 முதல் அமலுக்கு வருகிறது.

2. Pradhan Mantri Ujjwala Yojana
இந்த பிரதான் மந்திரி உஜ்வாலா (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டத்தின் கீழ், இலவசமாக கேஸ் இணைப்பைப் பெற 30 செப் 2020 தான் கடைசி தேதியாக இருந்தது. இன்று முதல் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக கேஸ் இணைப்பைப் பெற முடியாது.

3. வெளிநாட்டு பணப் பரிமாற்றம்
01 அக்டோபர் 2020 முதல், 7 லட்சம் ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களில் (Foreign Remittance) ஈடுபட்டால் 5 % வரி பிடித்தம் செய்யப்படுமாம். இது TDS பிடித்தம் செய்யப்படாத பணத்துக்கு மட்டுமே பொருந்தும். அதே போல வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 5 % வரி பிடித்தம் செய்வார்கள்.

4. பயன்பாடு தேதி
இனிப்புக் கடைகளில், தயாரிக்கப்படும் இனிப்புகளை, எந்த தேதிக்குள் பயன்படுத்த வேண்டும் (best before date) என்பதைக் குறிப்பிட வேண்டும் என Food Safety and Standards Authority of India (FSSAI) அமைப்பு, இந்த விதிமுறையை 01 அக் 2020 முதல் அமல்படுத்தி இருக்கிறது.

5. டிவி விலை அதிகரிப்பு
மத்திய அரசின் ஆத்ம நிர்பார் திட்டத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், டிவிக்களில் பயன்படுத்தப்படும் ஓபன் செல் பேனல்களுக்கு, 01 அக் 2020 முதல் 5 சதவிகிதம் இறக்குமதி வரி (Import Duty) விதிக்கப்படும். எனவே டிவிக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

6. கடுகு எண்ணெய்யை சேர்க்கக் கூடாது
Food Safety and Standards Authority of India (FSSAI) அமைப்பு, இந்த 01 அக் 2020 முதல் கடுகு எண்ணெய்யை (Mustard Oil) மற்ற எந்த சமையல் எண்ணெய் உடனும் சேர்க்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. வட இந்தியாவில் கடுகு எண்ணெய்யை பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து.

7. இ-காமர்ஸ் ஒரு சதவிகிதம் வரி
01 அக்டோபர் 2020 முதல், இ காமர்ஸ் ஆபரேட்டர்கள், மொத்தம் விற்பனை ஆன பொருள் அல்லது சேவைத் தொகையில் ஒரு சதவிகிதத்தை, வருமான வரிச் சட்டப் பிரிவு 194-O-வின் கீழ், வருமான வரியாகப் பிடித்தம் செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes).