இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா, நீரவ் மோடி, மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோரிடம் இருந்து இதுவரை 18000 கோடி ரூபாய் அளவிலான தொகையை மீட்டு உள்ளதாக இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலான துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

துஷார் மேத்தா
மத்திய அரசின் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான பென்ச் முன்நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்டு வழக்குகளின் நிலுவை தொகை 67,000 கோடி ரூபாயாக உள்ளது எனத் தெரிவித்தார்.

பிஎம்எல்ஏ
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சுமார் 4,700 வழக்குகள் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரத்து வருகிறது என்றும், 2015-16 இல் 111 வழக்குகளில் இருந்து 2020-21 இல் 981 வழக்குகளாக உயர்ந்துள்ளது எனத் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீதான வழக்கில் வங்கிகளுக்கு ரூ.18,000 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் துஷார் மேத்தா உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் தாக்கல் செய்தார். இந்த மூன்று பேரின் மோசடி வழக்கும் அமலாக்க துறையால் விசாரிக்கப்பட்டுப் பணத்தை மீட்கப்பட்டு உள்ளது.

வழக்குகள்
கடந்த ஐந்தாண்டுகளில் (2016-17 முதல் 2020-21 வரை), போலிஸ் மற்றும் பிற அமலாக்க அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட 33 லட்சம் பண மோசடி சார்ந்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வெறும் 2,086 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.