2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காரணத்திற்காகவும் இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் இந்தியாவின் மொத்த கல்வித் துறையும் ஆன்லைன் பயிற்சிக்கு மாறியது மட்டும் அல்லாமல் இந்த மாற்றத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியும் அடைந்துள்ளது.
ஆன்லைன் கல்வியின் தரம் குறித்துப் பல கேள்விகள் இருந்தாலும் லாக்டவுன் காலத்தில் இது குறிப்பிடத்தக்க அளவில் உதவியது மறுக்க முடியாது.
இதே வேளையில் 2020ல் கல்விக் கடனுக்கான தேவை மக்கள் மத்தியில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக CRIF ஹைய் ரேங்க் அமைப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2020 உடன் முடிந்த 12 மாத காலகட்டத்தில் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிலான கல்விக் கடனை வழங்கியுள்ளது என CRIF ஹைய் ரேங்க் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக மார்ச் முதல் அக்டோபர் 2020 வரையிலான லாக்டவுன் காலத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் கடன் கடன் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த 11,000 கோடி ரூபாய் கல்விக் கடன் தொகையில் பெரும் பகுதி தொகை இந்த லாக்டவுன் காலத்தில் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2020ஆம் ஆண்டின் அக்டோபர் மாத முடிவில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையில் உள்ளது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.