உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் ஜெர்மனியில் டெஸ்லா தொழிற்சாலையைத் திறந்த நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய டெஸ்லா தொழிற்சாலையை ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி திறக்க திட்டத்தில் பிசியாக உள்ளார்.
இதேபோல் ஏப்ரல் 7ஆம் தேதி மிகப்பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதேபோல் சைபர் டிரக் உற்பத்தி, ஸ்பேஸ் எக்ஸ் நிலா பயணம்.. இதற்கிடையில் புதிய கேர்ள்பிரெண்ட் உடன் அவ்வப்போது டேட்டிங் எனப் படு பிசியாகச் சுத்திக்கொண்டு இருக்கும் எலான் மஸ்க் சத்தமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..!

எலான் மஸ்க்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பயன்படுத்தும் ஓரே சமுகவலைதளமான டிவிட்டர் நிறுவனத்தில் சுமார் 9.2 சதவீத பங்குகளைத் தனது சொந்த பணத்தில் வாங்கியிருப்பதாக அமெரிக்கப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.

டிவிட்டர் நிறுவனம்
மேலும் டிவிட்டர் நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எலான் மஸ்க் 73,486,938 பொதுப் பங்குகள் (Common Stocks) வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பங்குகளை எலான் மஸ்க் தனது சொந்த முதலீட்டில் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25.8 சதவீதம் உயர்வு
இந்த அறிவிப்பு வெளியானதில் டிவிட்டர் நிறுவன பங்குச்சந்தை துவங்குவதற்கு முன்பான வர்த்தகத்தில் 25.8 சதவீதம் உயர்ந்து 49.48 டாலராக உயர்ந்துள்ளது. இது திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கிய பின்பு டிவிட்டர் பங்கு விலையும் அதன் வளர்ச்சி விகிதமும் மாறுபடலாம்.

ஜாக் டோர்சி
எலான் மஸ்க் வைத்திருக்கும் 73,486,938 பொதுப் பங்குகள், டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்சி வைத்திருக்கும் பங்குகளைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமாகும். இந்தப் பங்குகளை எலான் தனது Elon Musk Revocable Trust வாயிலாக முதலீடு செய்து கைப்பற்றியுள்ளார்.

2.89 பில்லியன் டாலர் முதலீடு
மேலும் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளைச் சுமார் 2.89 பில்லியன் டாலர் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. இதோடு ஜாக் டோர்சி டிவிட்டர் நிறுவனத்தில் 2.25 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். இதன் மூலம் எலான் மல்ஸ் டிவிட்டர் நிர்வாகத்தில் மிகப்பெரிய தனிநபர் முதலீட்டாளராக உள்ளார்.

டிவிட்டர் நிர்வாகக் குழு
மேலும் எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகக் குழுவிற்குள் வர வாய்ப்பு உள்ளதா என்பது தெரியாத நிலையில், வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் செல்லும் மனநிலையில் தான் எலான் மஸ்க் உள்ளார். எலான் மஸ்க் வருகை டிவிட்டர் நிர்வாகத்தில் சலசலப்பைக் கட்டாயம் ஏற்படுத்தும்.

சமுக வலைத்தளம்
எலான் மஸ்க் பல முறை டிவிட்டரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தாலும், அவர் பயன்படுத்தும் ஓரே சமுக வலைத்தளம் டிவிட்டர் மட்டுமே. எலான் மஸ்க் பேஸ்புக், இண்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துவது இல்லை. டிவிட்டர் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 17.73 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் சொத்து மதிப்பு
அமெரிக்கா பங்குச்சந்தை திங்கட்கிழமை வர்த்தகம் துவங்குவதற்கு முன்பு எலான் மஸ்க் சொத்து மதிப்பு 287.6 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் டெல்ஸா பங்குகள் 1084.59 டாலர் விலையில் சுமார் 1.12 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் உள்ளது.