உலக நாடுகளில் செயற்கைக்கோள் மூலம் பிராட்பேண்ட் சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இத்தகைய சேவையை அறிமுகம் செய்ய முயற்சி செய்து தோல்வி அடைந்த எலான் மஸ்க்-ன் SpaceX நிறுவனம் (Starlink) 2வது முறையாக முயற்சி செய்ய உள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை பெரும் மாற்றத்தை டெலிகாம் சேவையில் செய்ய உள்ள நிலையில், பிராட்பேண்ட் சேவையிலும் முக்கியமான மாற்றங்கள் நடக்க உள்ளது. குறிப்பாகப் பிராட்பேண்ட் சேவை வளர்ச்சியில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.
இந்த நிலையில் 2வது முயற்சியில் எலான் மஸ்க்-ன் SpaceX நிறுவனம் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாகக் களத்தில் இறங்கியுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மத்திய டெலிகாம் அமைச்சகத்திடம் GMPCS உரிமத்தைப் பெற்று இந்தியாவில் செயற்கைக்கோள் வாயிலாகப் பிராட்பேண்ட் சேவை அளிக்கும் முயற்சியில் 2வது முறையாகக் களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ
ஏற்கனவே ஏர்டெல் முதலீட்டில் இயங்கும் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இதேபோன்ற சேவையை அளிக்க உரிமம் பெற்றுள்ள நிலையில் 3வது நிறுவனமாக ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்ய ஸ்பேக்எக்ஸ் விண்ணப்பம் செய்ய உள்ளது.

ஸ்டார்லிங்க் சேவை
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்டார்லிங்க் சேவையை அளிக்க வேண்டும் என்றால் முதல் earth stations அமைக்க வேண்டும், இதன் பின்பு செயற்கைக்கோள்களை இந்திய வானில் நிறுவ வேண்டும். இவ்விரண்டுக்கும் Indian National Space Promotion & Authorisation Centre (IN-SPACe) அமைப்பு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

எலான் மஸ்க் திட்டம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முதலில் earth stations அமைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்ய உள்ளது, இதைத் தொடர்ந்து மத்திய டெலிகாம் துறையிடம் அனுமதி பெற்ற பின்பு செயற்கைக்கோள்களை நிறுவ ஒப்புதல் பெற்று சேவையை அளிக்கத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கைக்கோள்
பூமிக்கு அருகில் செயற்கைக்கோள்களை (LEO satellites) வைத்து அதன் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை அளிப்பது தான் இந்தச் செயற்கைக்கோள் வாயிலாகப் பிராட்பேண்ட் சேவை. இந்தச் சேவை மூலம் காடு, மலை என அனைத்து பகுதிகளிலும் வீட்டில் கிடைக்கும் அதிவேக இண்டர்நெட் சேவையைப் போலவே பெற முடியும் என்பது தான் இச்சேவையின் சிறப்பு.

ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் Jio Satellite Communications Ltd (JSCL) என்ற தனி நிறுவனத்தை உருவாக்கியது. இந்தியாவில் செயற்கைக்கோள் வாயிலாக இண்டர்நெட் இணைப்பு அளிக்க மத்திய அரசின் டெலிகாம் துறை ஒப்புதல் அளித்த 2வது நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.

SES நிறுவன கூட்டணி
2022 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் மற்றும் உலகளாவிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான லக்சம்பேர்க் நாட்டைச் சேர்ந்த SES நிறுவனத்துடன் இணைந்து 51:49 கூட்டணியில் 'ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி' என்ற நிறுவனத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.