உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் ரெசிஷனுக்குள் நுழைந்து வருவது பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.
குறிப்பாக ரஷ்யா உடன் கச்சா எண்ணெய்க்காகப் போராடிக்கொண்டு இருக்கும் ஐரோப்பா தற்போது ரெசிஷனுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் தரவுகள் சாதகமாக இருக்கும் காரணத்தால் வட்டி விகித உயர்வின் வேகத்தைக் குறைப்பதாக ஜெரோம் பவல் தெரிவித்த நிலையில் கடந்த சில நாட்களாகச் சர்வதேச முதலீட்டு சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் மொத்தமாக ரெசிஷனுக்குள் செல்வது என்பது பெரும் அதிர்ச்சி தகவலாக உள்ளது.

ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியன் ஒட்டுமொத்தமாக நவம்பர் மாதத்துடன் தொடர்ந்து 5 மாதமாக வர்த்தகச் செயல்பாடுகள் மந்தமாகிச் சரிவில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து, மக்கள் செலவுகளைக் குறைத்த காரணத்தால் இப்பகுதி வர்த்தகம் அதிகளவில் சரிந்து தற்போது mild recession என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

S&P குளோபல் PMI குறியீடு
S&P குளோபல் இறுதி காம்போசிட் PMI குறியீடு (Purchasing Managers' Index) ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த நவம்பர் மாதம் 47.8 புள்ளிகளாக அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் இதன் அளவு 47.3 புள்ளிகள் உடன் சுமார் 23 மாத சரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

50 புள்ளிகள்
இந்த PMI குறியீடு பொதுவாக 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள், 50 புள்ளிகளுக்குக் கீழ் இருந்தால் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சரிவில் இருப்பதாகப் பொருள்.

PMI குறியீடு அளவு
ஐரோப்பிய யூனியனின் PMI குறியீடு அளவு தொடர்ந்து 5 மாதமாக 50 புள்ளிகளுக்குக் கீழ் இருக்கும் காரணத்தால் ரெசிஷனுக்குள் தள்ளப்படும் நிலையில் உள்ளது என எஸ்&பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிகப் பொருளாதார நிபுணர் கிறிஸ் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

60 டாலர்
இந்த நிலையில் தான் உக்ரைன் ஆதரவு நாடுகளான ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 60 டாலர் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது.

ரஷ்யா மறுப்பு
அதாவது ரஷ்யா இனி எந்த நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்றாலும் 60 டாலர் விலையில் தான் செலுத்த வேண்டும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைக் கடுமையாக எதிர்த்த ரஷ்யா, இனி ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு துளி கச்சா எண்ணெய் கூட விற்பனை செய்ய முடியாது என அறிவித்துள்ளது.

ஐரோப்பா வீழ்ச்சி பாதை
இதோடு இந்த விலையை ஏற்கும் நாடுகளுக்கு உடனடியாகக் கச்சா எண்ணெய் சப்ளை கட் செய்யப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியிட்டு உள்ளது. இதனால் அடுத்தச் சில மாதத்தில் ஐரோப்பிய பொருளாதாரம் வர்த்தகம் அனைத்தும் பெரிய அளவில் சரிய வாய்ப்புகள் உள்ளது, இதற்கு முக்கியக் காரணம் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு இல்லாமல் கட்டாயம் ஐரோப்பா-வால் இயங்க முடியாது என்பது தான்.