2020ஆம் ஆண்டில் உலக நாடுகளும், மக்களும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல சவால்கள் எதிர்கொண்டு வரும் வேளையில் முதலீட்டுச் சந்தை மிகவும் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி அடுத்தகட்டத்திற்குச் செல்ல அன்னிய முதலீடுகள் பெரிய அளவில் உதவுகிறது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த அன்னிய முதலீடுகள் அளவு சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

2019 அன்னிய முதலீடுகள்
இந்தியச் சந்தையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் சுமார் 76,010 கோடி ரூபாய் அளவிலான அன்னிய முதலீடுகள் குவிந்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 10.674 பில்லியன் டாலர்.
மேலும் 2019ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்குச் சராசரியாக அன்னிய முதலீட்டு வாயிலாக இந்திய சந்தையில் சுமார் 25.336.67 கோடி ரூபாய் முதலீடாகப் பெற்றுள்ளது.

2020 அன்னிய முதலீடுகள்
மத்திய அரசு தற்போது செப்டம்பர் மாதம் வரையிலான தரவுகளை மட்டுமே வெளியிட்டுள்ள நிலையில் 2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 3,20,160 கோடி ரூபாய் அளவிலான அன்னிய முதலீடுகளை இந்தியா பெற்றுள்ளது.
இது டாலர் மதிப்பில் சுமார் 43.213 பில்லியன் டாலர்.

3 மடங்கு அதிகம்
2019ஆம் ஆண்டில் 12 மாதம் பெற்ற அன்னிய முதலீட்டை விடவும் 2020ல் முதல் 9 மாதங்கள் பெற்ற அன்னிய முதலீடு சுமார் 3.12 மடங்கு அதிகம்.
கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெரியளவில் பாதித்துள்ள 2020ல் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையின் மீதான நம்பிக்கையில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 2020
2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 39,719 கோடி ரூபாய் முதலீடு செய்த நிலையில், இதைவிட அதிகமாக ஆகஸ்ட் மாதம் சுமார் 1,30,576 கோடி ரூபாய் அளவிலான அன்னிய முதலீடுகள் இந்திய சந்தையில் குவிந்துள்ளது.

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்
இந்நிலையில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் அமெரிக்கா தேர்தல் முடிவுகள் இந்திய சந்தைக்குச் சாதகமாக இருந்த காரணத்திற்காக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்திய சந்தையில் செய்தனர். குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையைக் குறிவைத்து அதிகளவில் முதலீடு செய்த இதேநேரத்தில் அன்னிய நேரடி முதலீடுகளும் அதிகரித்திருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.