டெல்லி: புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் தாள்கள் விரைவில் நிறுத்தப்படலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாகவே ஒரு தகவல் பரவி வந்தது.
ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிர்ந்து போன மக்கள் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பா என்றும் கேள்வி எழுப்பினர்.

அதிலும் ஏடிஎம் இயந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வராது என்று கூறப்பட்டு வந்த நிலையில், 2000- ரூபாய் நோட்டுகள் விரைவில் குறைக்கப்பட்டு அவை விரைவில் நிறுத்தப்படலாம் என்றும் அரசல் புரசலாக பேசப்பட்டது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு எந்தவொரு அறிவுரையும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் விநியோகிப்பதை குறைத்துக் கொள்ள வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின.
2,000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடிப்பது குறைந்துள்ள நிலையில், பொதுமக்களிடையே ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்துள்ளது. இது தவிர ATM-களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. வங்கிகளும் இந்த நோட்டுகளின் பரிவர்த்தனையை நிறுத்த உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த விஷயத்தில் தனக்குத் தெரிந்தவரை, வங்கிகளுக்கு அப்படி எந்தவொரு அறிவுரையும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் ஏடிஎம் மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை வைப்பதால், மக்கள் அவற்றை மாற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சிறிய மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வைக்க இந்திய வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை வைக்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மிக சிரமத்திற்கு உள்ளான மக்கள் தற்போது, இந்த முறையும் அப்படி ஏதும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற பயத்தின் மத்தியில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் இது போன்ற தவறான தகவல்களை நம்பாமல் இருப்பது நல்ல விஷயமே.