ஐபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் புதிதாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்காகப் பிரத்தியேகமாக ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது. இப்புதிய தளத்தின் மூலம் கான்டிராக் முறையில் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்புக்கு உதவ முடியும்.
இதன் மூலம் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் குரூப் ஸ்மார்ட்போன், கம்பியூட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தாண்டி தற்போது ஆட்டோமொபைல் துறையிலும் நுழைந்துள்ளது.

பாக்ஸ்கான் நிறுவனம்
தைவான் நாட்டின் டைபை பகுதியில் இருக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஹான் ஹாய் பிரிசிஷன் இன்டஸ்ட்ரீஸ் கோ நிறுவனத்தின் தலைவரான யோங் லேயு 4வது காலாண்டில் பாக்ஸ்கான் உருவாக்கியுள்ள புதிய எலக்ட்ரிக் வாகன தளத்தில் இரண்டு லைட் வாகனங்களின் டிசைனை வடிவமைத்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் பஸ்
இதுமட்டும் அல்லாமல் பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய எலக்டரிக் வாகன தயாரிப்பு தளத்தின் வாயிலாக, உலகம் முழுவதிலும் தற்போது முக்கியத் தேவையாக மாறியுள்ள எலக்ட்ரிக் பஸ் உருவாக்கி அறிமுகம் செய்வதற்கான திட்டத்தையும் வைத்துள்ளதாக யோங் லேயு தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தானியங்கி எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை துவங்கி, பல்வேறு காரணங்களுக்காக இக்கூட்டணி திட்டத்தை ரத்து செய்தது. இந்நிலையில் கான்டிராக்ட் உற்பத்தியாளராக ஆட்டோமொபைல் துறையில் இயங்க பாக்ஸ்கான் தற்போது உருவெடுத்து வருகிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
பாக்ஸ்கான் ஆக்டோபர் மாதத்தில் தனது எல்க்ட்ரிக் வாகன தயாரிப்பு தளத்தின் மென்பொருள் உதவியுடன் முதல் முறையாக எல்க்ட்ரிக் வாகன சேசிஸ் அறிமுகம் செய்தது. பாக்ஸ்கான்-ன் இந்தத் தளத்தின் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்களை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்ய முடியும்.

பாக்ஸ்கான் கூட்டணி
மேலும் பாக்ஸ்கான் தற்போது சீன கார் தயாரிப்பு நிறுவனமான கீலி ஹோல்டிங் குரூப் நிறுவனத்துடன் இணைந்து கூட்டணி நிறுவனத்தை உருவாக்கி இப்புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இக்கூட்டணி நிறுவனம் தற்போது எலக்ட்ரானிக்ஸ் வாகன பிரிவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் வர்த்தகத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.