இந்தியாவின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி லேண்டு டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஆயுத உற்பத்தியில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்டுக் கடந்த ஒரு வருடமாக இத்துறையில் பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் நிலையில், தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறை உற்பத்தி திட்டங்களை ஊக்குவித்து வரும் நிலையில், அதானி குழுமம் போன்ற பெரும் நிறுவனங்களின் முயற்சிகள் இந்திய ஆயுத உற்பத்தி சந்தை வேகமாக வளர்ச்சி அடையும் என நம்பப்படுகிறது.

கௌதம் அதானி
அதானி லேண்டு டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆயுத உற்பத்தி திட்டத்தில் முதல் கட்டமாகச் சிறிய ரகத் துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆன்டி டிரோன் சிஸ்டம்ஸ் மற்றும் பராமரிப்பு, விமானப் பழுது நீக்கம் ஆகியவற்றைத் தனது ஆயுத உற்பத்தி பணியில் முதலும் முக்கியமான திட்டமாக அறிவித்துள்ளது.

பிஎல்ஆர் சிஸ்டம்ஸ்
இத்திட்டத்தின் படி அதானி லேண்டு டிபென்ஸ் நிறுவனம் டாவோர் குடும்பத்தைச் சேர்ந்த லைட் மெஷின் துப்பாக்கிகளைத் தயாரிக்க உள்ளது. இதற்காக இஸ்ரேல் ஆயுத துறையுடன் உருவாக்கப்பட்ட பிஎல்ஆர் சிஸ்டம்ஸ் என்ற கூட்டணி நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை அதானி கைப்பற்றியுள்ளது.

அதானி குழுமம்
அதானி குழுமம் ஆயுத உற்பத்தி மற்றும் தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டுள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக இத்துறையில் இயங்கும் சில நிறுவனங்களைக் கைப்பற்றியது. இதில் முக்கியமாகப் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆல்பா டிசைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியது.

ஆல்பா டிசைன் சிஸ்டம்ஸ்
இந்நிறுவனம் இந்திய விமானப் படையில் இருக்கும் Su-30MKI பைட்டர் விமானங்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிப்பு பணிகளைச் செய்து வருகிறது. இதோடு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் தயாரிப்புக்கான உதிரிப் பாகங்களையும் ஆல்பா டிசைன் சிஸ்டம்ஸ் தயாரிக்க ஆர்டர்களைப் பெற்றுள்ளது.

விமான நிலையங்கள்
இதேபோல் அதானி லேண்டு டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், தற்போது இந்திய விமான நிலையங்களுக்கு மிகவும் முக்கியத் தேவையாக விளங்கும் Anti-drone system-ஐ தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த Anti-drone system கொண்டு இந்தியா முழுவதும் மைக்ரோ UAV மற்றும் suicide drones-ஐ தடுக்க முடியும்.

சிறிய ஆயுதங்கள்
மேலும் பிஎல்ஆர் நிறுவனத்தின் கீழ் அதானி குழுமம் சமீபத்தில் கைப்பற்றிக் குவாலியர் தொழிற்சாலை மூலம் பாதுகாப்புப் படைக்குத் தேவையான ஆயுதங்கள், Uzi sub மெஷின் துப்பாக்கிகள், Negev லைட் மெஷின் துப்பாக்கி, டாவோரே துப்பாக்கிகளையும் தயாரிக்க உள்ளது.

விமானப் பழுது நீக்கம்
இதைத் தொடர்ந்து அதானி நிறுவனம் விமான ரிப்பேர் மற்றும் பரிசோதனை பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இத்துறை பயணிகள் மற்றும் ராணுவ விமானங்களுக்குமான சேவைகளையும் அளிக்க உள்ளது. சமீபத்தில் அதானி குழுமம் இந்தியாவில் 6 முக்கிய விமான நிலையங்களைக் கைப்பற்றிய நிலையில் இத்திட்டத்திற்கு இது பெரிய அளவில் உதவும்.