மத்திய அரசு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வாகன ஸ்க்ரேப்பேஜ் திட்டத்தை அறிவித்த நாள் முதல் பழைய வாகனங்களை வைத்துள்ளவர்களுக்குப் பயத்தை உருவாக்கியுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய அரசு தனது வாகன ஸ்க்ரேப்பேஜ் திட்டத்தில் சில சலுகைகளையும், புதிய கார்களை வாங்கும் போது குறிப்பிட்ட அளவிலான தள்ளுபடியும் அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பழைய கார்களைத் தங்களது பதிவைப் புதுப்பிக்கும் போது எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான கட்டணத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் 15 வருடத்திற்கும் பழைய வாகனங்களை வைத்துள்ளவர்கள் அக்டோபர் மாதம் முதல் அதிகப்படியாக 21 மடங்கு அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

பழைய வாகனங்கள் பயன்பாடு
மத்திய அரசு பழைய கார்களின் பயன்படுத்தக் குறைப்பது மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும். அதேவேளையில் எரிபொருள் செலவுகளையும் கணிசமாகக் குறைக்க முடியும். இந்தியா பெருமளவிலான தொகையைக் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆட்டோமொபைல் துறை
அவை அனைத்தையும் தாண்டி பழைய கார்களின் பயன்பாட்டைக் குறைப்பது மூலம் நாட்டின் ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், இதன் மூலம் வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்க முடியும். இதனால் ஆட்டோமொபைல் துறை எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து இயங்க முடியும்.

ரிஜிஸ்டர் ரென்யுவெல் தொகை
இதன் மூலம் 15 வருடப் பழைய வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இந்த வாகனங்களுக்கான ரிஜிஸ்டர் ரென்யுவெல் தொகையைப் பல மடங்கு உயர்த்துள்ளது. இதனால் பழைய வாகனங்களை வைத்துள்ளவர்கள் தொடர்ந்து வாகனத்தைப் பயன்படுத்த அதிகப்படியான தொகையைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

கட்டணத்தில் அதிரடி உயர்வு
உதாரணமாக 15 வருடப் பழைய காருக்கு ரிஜிஸ்டர் ரென்யுவெல் தொகையாக 5000 ரூபாய், இது தற்போதைய அளவை விடவும் 8 மடங்கு அதிகம். இதேபோல் 15 வருடப் பழைய இரு சக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாய் தற்போது இதன் கட்டணம் வெறும் 300 ரூபாய்.

21 மடங்கு அதிகத் தொகை
இதேபோல் 15 வருட பழைய பஸ், டிரக், லாரி மற்றும் இதர கனரக வாகனங்களைத் தொடர்ந்து பயன்படுத்த அடிப்படைத் தேவையாக இருக்கும் ஃபிட்னஸ் ரென்யுவெல் (fitness renewal) சான்றிதழ் பெற 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். இது தற்போதைய கட்டண அளவை விடவும் 21 மடங்கு அதிகமாகும்.

அபராதம் தொகை
ரிஜிஸ்டர் ரென்யுவெல் செய்யாமல் ஏமாற்றலாம் எனத் திட்டமிடுவோரையும் வளையத்திற்குள் கொண்டு வர, தனியார் வாகனங்கள் ரென்யுவெல் செய்யத் தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் 300 ரூபாயில் இருந்து 500 ரூபாயும், வர்த்தக வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் அபராதம் விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரினிவல் செய்ய முறை
இந்தியாவில் தனியார் வாகனங்கள் 15 வருடப் பயன்பாட்டு பின்ரு ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை ரினிவல் செய்ய வேண்டும், இதேபோல் வர்த்தக வாகனங்கள் 8 வருடத்திற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் fitness certificate ரினிவல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

vehicle scrappage திட்டம்
இதேபோல் பட்ஜெட் அறிவிப்பில் சாலை போக்குவரத்துத் துறை சார்ந்து அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப்படும் vehicle scrappage policy திட்டத்தின் பழைய கார்களை அழிக்க விரும்புவோருக்கு புதிய கார் வாங்குவதில் 5 சதவீதம் தள்ளுபடி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தள்ளுபடி அளவு
மேலும் இந்தத் தள்ளுபடி அளவை scrapping centre தான் முடிவு செய்யும், இதன் மூலம் மக்கள் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலான தள்ளுபடியைப் பெற முடியும்.

சாலை வரி தள்ளுபடி
இதோடு vehicle scrappage policy திட்டத்தின் கீழ் பழைய வாகனங்களை அளிக்கும் மக்களுக்கு மாநில அரசு தனிநபர் வாகனங்களுக்குச் சாலை வரியில் 25 சதவீதம் தள்ளுபடியும், வர்த்தக வாகனங்களுக்கு 15 சதவீத வரியையும் தள்ளுபடி அளிக்க வேண்டும் எனச் சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி பரிந்துரை செய்துள்ளார்.