இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர். இரண்டாவது அம்பானியாக உருவெடுத்து வரும் தொழிலதிபரான கவுதம் அதானியை பற்றித் தான் இன்று பார்க்க இருக்கிறோம்.
சமீபத்திய வாரங்களுக்கு முன்பு உலகளவில் இந்த ஆண்டு அதிக சொத்து சேர்த்தோர் பட்டியலில் ஜெப் பெசோஸ், ஜாக் மா உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, முன்னணியில் உள்ளார் இந்திய தொழிலதிபர் அதானி.
இந்த ஆண்டில் அதானி குழுமத்தில் சில பங்குகளை தவிர, மற்றவை அனைத்தும் 50% மேல் வளர்ச்சி கண்டுள்ளன.

யார் இந்த கவுதம் அதானி
அதெல்லாம் சரி யார் இந்த கவுதம் அதானி. எப்படி இந்தளவுக்கு வளர்ச்சி பெற்றார்? என்ன வர்த்தகம் செய்கிறார்? வாருங்கள் பார்க்கலாம். மும்பையில் கடந்த 1980-களில் வைர வியாபாரத்தில் ஈடுபட்ட, குஜராத்தினை சேர்தவர் தான் கவுதம் அதானி, வைர வியாபாரத்தில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதன் பிறகு பிளாஸ்டிக் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டார்.

அதானி எண்டர்ப்ரைசஸ்
இதற்கிடையில் கடந்த 1988ல் அதானி எண்டர்ப்ரைசஸ் என்ற நிறுவனத்தினை தொடங்கி, அடுத்த 10 ஆண்டுகளில் முந்த்ராவில் தனி துறைமுகத்தினையே உருவாக்கினார். தற்போது இந்தியாவின் முன்னணி தனியார் துறைமுகங்களை கொண்டுள்ள ஒரு பெரிய நிறுவனமான அசுர வளர்ச்சி கண்டுள்ளது அதானி போர்ட்ஸ். அதோடு ரென்யுவெபிள் எனர்ஜி, நிலக்கரி சுரங்கத்துறையிலும் கொடிகட்டி பறந்து வருகின்றது.

பெருகி வரும் முதலீடுகள்
நிலக்கரியை மைய வணிகமாக கொண்ட சாம்ராஜ்ஜியத்தினை உருவாக்கிய பின்னர் தான், அதாவது இரு தசாப்தங்கள் கழித்து தான், இந்த பெரும் வளர்ச்சியினை கண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் இவரின் அசாதாரண வளர்ச்சியின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். அரசியல் ஊக்கம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

பொருளாதார வளார்ச்சிக்கான முக்கிய துறைகள்
அதானி இந்தியாவின் உள்கட்டமைப்பு துறையில் ஒரு மன்னராக உருவெடுத்துள்ளார். அதோடு சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து விமான நிலையங்கள், தரவு மையங்கள், விமான நிலையங்கள் என பல வகையிலும் பிரபல தொழிலதிபராக உருவெடுத்து வருகிறார். இந்த முக்கிய துறைகள் தான் நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைய, அரசு முக்கியமான துறைகளாக உள்ளதாக கூறி வருகின்றது.

விவேகமாக உள்கட்டமைப்பு துறையில் முதலீடு
அதானி அரசியல் ஆர்வலராகவும், விவேகமான தொழிலதிபராகவும், நீண்டகால உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார். உள்கட்டமைப்பு திட்டங்கள் என்பது அரசாங்க முன்னுரிமை கொடுக்கும் திட்டங்களுடன் பரவலாக பிணைக்கப்பட்டுள்ளது என்று IEEFA இயக்குனர் டிம் பக்லி கூறியுள்ளார். இந்தியா வலுவான வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளும் வரை, சர்வதேச முதலீட்டாளர்களின் ஆர்வம் இதில் அதிகரிக்கும்.

அதானியின் கருத்து
ஆக இந்தியாவின் உள்கட்டமைப்புகளில் அதிகரித்து வரும் திட்டங்களினால், ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. அதன் பங்குதாரர்களுக்கும் நல்ல மதிப்பினை வழங்கியுள்ளது என, கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த ஜேபி மார்கன் உச்சி மாநாட்டில் அதானி கூறியிருந்தது நினைவு கூறத்ததக்கது.

பல பில்லியன் டாலர் அதிகரிப்பு
1980-களின் பிற்பகுதியில் ஒரு பொருளின் வர்த்தகராகத் தொடங்கி, தற்போது உலகப் பணக்காரர்களில் ஓருவரான ஜாக் மாவை விட பணக்காரராக உருவெடுத்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலராகும். ஃபார்சூன் அறிக்கையின் படி, கடந்த ஆண்டில் அவர் பல பில்லியன் டாலர் சொத்துக்களை சேர்த்துள்ளார். இது ஆசிய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியை விட 5 பில்லியன் டாலர் அதிகம் என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

உங்கள் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது?
கடந்த 2020ம் ஆண்டில் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்துள்ளது? இதற்கும் பலரின் பதில் ஜீரோ தான். இன்னும் சிலரின் பதில் அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டோம் என்பது தான். ஆனால் இந்த காலகட்டத்தில் கோடி கணக்கில் அவரின் சொத்து மதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறதே எப்படி? இதற்கு பலரும் கூறும் பதில் தற்போதைய அரசின் ஆதரவு என்பது.

விதிகள் தளர்த்தல்
ஏனெனில் மத்திய அரசு விமான நிலைய ஏல விதிகளை தளர்த்தியதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். விமான நிலையத்தினை இயக்குவதற்கு முன் அனுபவம் எதுவும் காட்டாவிட்டாலும், அதானியின் குழு தகுதி பெற்றுள்ளது. சமீபத்தில் விடப்பட்ட ஏலத்தில் அதிக இடங்களை எடுத்தவர்களில் அதானி குழுமம் தான் அதிகமாகும். இந்த சர்ச்சை குறித்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.

அரசியலுக்கும் அதானிக்கு என்ன உறவு?
மோடியை போலவே அதானியும் குஜராத்தினை சேர்ந்தவர். ஏறக்குறைய மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு 2003ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது என்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலஞ்சன் முகோபாத்யாய். இது குறித்து கடந்த மாதம் நாடளுமன்ற உரையில், பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கு, பொதுத்துறையை போலவே முக்கியமானது. சொத்தினை உருவாக்குபவர்கள் தேவை என கூறியது நினைவுகூறத்தக்கது.

விரிவாக்கத்திற்கு உதவிய கடன் மறுசீரமைத்தல்
அதானியின் விரிவாக்கத்திற்கு கடன் சந்தைகளும் உதவியுள்ளன. உதாரணத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தில் 10 ஆண்டு டாலர் பத்திரத்தினை 3.10% விற்றது. இது கடந்த ஜூன் 2019ல் 4.375% ஆக இருந்தது. அதோடு கடந்த வாரம் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் கடந்த வாரம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் உள்பட 12 வங்கியிடமிருந்து 1.35 பில்லியன் டாலர் கடனுக்காக கையெழுத்திட்டுள்ளது.